Friday 30 May 2008

தன்னை தீண்டிய கருநாகத்தின் கழுத்துப் பகுதியை குறிவைத்துப் பிடித்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், தன்னை தீண்டிய கருநாகத்தின் கழுத்துப் பகுதியை குறிவைத்துப் பிடித்து வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று ஒப்படைத்துவிட்டு சிகிச்சை பெற்று வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துணிகர சம்பவம் குறித்து தெரியவருவதாவது, குறித்த மூதாட்டி சம்பவதினம் தனது கோழிகளுக்கு இரை போடுவதற்காக கோழிக் கூண்டுக்குள் கைவிட்டபோது இவரை நாகம் தீண்டியுள்ளது.

கோழிகள் தான் கொத்துகின்றன என்று எண்ணிய மூதாட்டி கையை விட்டபோது, நாகம் தீண்டியதையடுத்து பாம்பை அவதானித்த மூதாட்டி பாம்பின் கழுத்துப் பகுதியைக் குறிவைத்து பிடித்துத் துக்கிக் கொண்டு அயலவர்களை அழைத்துள்ளார்.

சுமார் ஐந்து அடி நீளமான இந்த கருநாக பாம்பைப் பிடித்த மூதாட்டி அதனை தன்னுடனேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று வைத்தியர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

ஒப்படைத்ததன் பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். எஸ்.கதிஜா உம்மா என்ற இந்த 82வயதான முஸ்லிம் மூதாட்டியின் துணிகரச் செயலை அறிந்து பிரதேசவாசிகள் பலர், வைத்தியசாலைக்குச் சென்று அவரைப் பார்வையிட்டு வருகின்றனர்.

No comments: