Saturday 31 May 2008

பஸ் பயணிக்கும் வழிகளை இனி இணையத்தளம் மூலம் அறிந்து கொள்ளலாம்

எந்தவொரு நேரத்திலும் பஸ் வண்டிகள் பயணிக்கும் பாதை மற்றும் அவை பயணித்துக் கொண்டிருக்கும் இடம் என்பவற்றை வாகன ஓட்டுனர்களும், பொது மக்களும் இணைய வழி உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிந்துகொள்ளும் திட்டம் ஒன்றினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்தும் இதனூடாக எவ்வாறு பயனடைவது என்பது குறித்தும் உள்ளூர் பத்திரிகைகள் ஊடாக பொதுமக்களை அறிவூட்டவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஏ.ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

"பஸ் பயணிக்கும் வழிகளைக் கண்டறியும் தொழில்நுட்பம் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே பயன்பாட்டிலுள்ளன. வெளிநாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தக்கூடிய இயலுமை எம்மிடம் இல்லை. இருப்பினும் உள்ளூர் தொழில்நுட்ப அறிவைக் கொண்டே இதனை வடிவமைக்கவுள்ளோம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் ஆரம்பத்தில் மாகாணங்களுக்கிடையிலான 3,000 பஸ்கள் பயணிக்கும் வழிகளை கண்டறிய முடியும் எனவும், பின்னர் 25,000 பஸ்களை கண்டறிய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டதும், இன்னும் சில வருடங்களின் பின்னர் தினசரி பயணங்களை மேற்கொள்வோர் அவர்களுக்கு தேவையான பஸ்களை இணையத்தளம் வழியாக கண்டறிந்து கொள்ளமுடியும். இந்தத் திட்டத்தை படிப்படியாகவே நடைமுறைப்படுத்தவுள்ளோம். பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்துவோருக்கு நன்மை பயக்கும் வகையிலேயே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்ல" என்றும் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.

No comments: