Saturday 31 May 2008

அரசு ஊடகங்கள் மோதல் மோசமாக அதிகரிக்கும் அறிகுறி

காலகண்டன்

கடந்தவாரம் கொழும்பில் ""த நேசன்' ஆங்கில வார இதழின் பிரதி ஆசிரியர் கீத் நொயர் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டார். இவ்விடயம் உடனடியாக ஊடகங்களுக்கும் ஊடக அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் அதிஉயர்பீடத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கீத் நொயர் கடத்தப்பட்டு எட்டு மணிநேரத்தின் பின் அவரது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்து விடப்பட்டார். ஆனால், கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்களுடன் விடுவிக்கப்பட்ட அவர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளிக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அந்தளவிற்கு அடிகாயங்களும் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருந்தார். இனம் தெரியாதோரால் பிரபலமான ஒரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளமை அனைத்து ஊடகவியலாளர்களையும் அதிர வைத்துள்ளது. ஐந்து ஊடக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அலரி மாளிகைக்கு அண்மையாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன.

இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையைக் கண்டிக்கும் விதமாக இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் பொதுச் செயலாளரும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு ""அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் எவரும் அர சாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடவோ செயற்படவோ முடியாது' என்றவாறு கடும் தொனியில் அறிவுறுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. இந்நடவடிக்கையானது அரசாங்க ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதனையும் அரசியல் கட்சியில் அங்கம் வகிப்பதையும் சுதந்திரமாக கருத்து வெளியிடுவதும் பற்றிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. இதுபற்றி அரசியலமைப்புச் சட்டவிதிகள் கூறும் எல்லைகள் பற்றிய சட்ட சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் அரச நிறுவனமா? அல்லது அரசாங்க மேற்பார்வையில் உள்ள நிறுவனமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

அதேவேளை, கீத் நொயர் தாக்கப்பட்டமை பற்றிய உரிய விசாரணைகளும் அதன் ஊடாக அந்த இனம் தெரியாதோர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்குரிய எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என்பது சிந்தனைக்குரியதாகும். இச்சம்பவத்திற்கு மட்டுமன்றி ஏற்கனவே கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கவனத்திற்கொள்ளாமையே இப்போதும் இடம்பெறுகின்றது.

கொழும்பில் கீத் நொயர் தாக்கப்பட்டமையின் இரத்தக் காயம் ஆறுமுன்பாகவே யாழ்ப்பாணத்தில் சக்தி, சிரச, எம்.ரி.வி. என்பனவற்றின் ஊடகவியலாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் பயணித்த அவரது நண்பரும் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றார். இந்தக் கோரக் கொலையையும் இனம் தெரியாதோரே செய்திருக்கிறார்கள். வடபுலத்தில் இவ் ஊடகவியலாளர் கோரமாகக் கொல்லப்பட்டிருப்பது இது முதல் தடவை அல்ல. அல்லது முடிவானதொன்றாகவும் இருக்கமாட்டாது என்றே எதிர்பார்க்க முடியும். ஏனெனில், ஊடகவியலாளர்கள் மீதான வேட்டையாடுதல் சட்டரீதியாகவும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு ""இனம் தெரியாதோர்' என்ற பெயரிலும் தொடர்வதற்கான சமிக்ஞைகளே ஆளும் தரப்பில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.

படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரான தேவகுமார் யாழ்.மாவட்ட சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளராகக் கடந்த மூன்று வருடங்களாகப் பணிபுரிந்து வந்தவர். அங்குள்ள அசாதாரண சூழலில் ஏற்கனவே ஊடகவியலாளர் கொல்லப்பட்டு வந்த அச்சநிலையிலும் துணிவுடன் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளராக இருந்து வந்தார். இக்கொலையைச் செய்ததன் மூலம் இதற்குரிய இனம் தெரியாத கொலையாளிகள் அடிப்படை மனித உரிமையையும் கருத்துச் சுதந்திர உரிமையையும் ஊடகவியலாளர்களின் துணிச்சலையும் படுகொலை செய்திருக்கிறார்கள். இப்படுகொலை பற்றி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள ஐந்து ஊடக அமைப்புகள் தெரிவித்திருக்கும் ஒரு விடயம் மிக முக்கியமானதாகும். ""ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்களுக்கு எதிராக இடம்பெறும் கொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தும் படியும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் வற்புறுத்தி நாம் விரக்தியடைந்துள்ளோம். "முறையான விசாரணைகள் நடத்தப்படும்' என்பன போன்ற வாக்குறுதிகள் அர்த்தமற்றவையாகிவிட்டன. இந்நிலையைக் கண்டிக்கின்றோம்' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த மூன்று வருடங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தேவகுமார் ஒன்பதாவது நபராவார். இதே காலப்பகுதியில் மூன்று ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இத்தகைய சூழல் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் பற்றி வாராந்தம் செய்தியாளர் சந்திப்புகளில் கருத்து வெளியிட்டு வரும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்நிலைக்கு என்ன சப்பை கட்டப்போகிறார்கள். விசாரணைகள் தொடர்கின்றன. அறிக்கையை எதிர்பார்த்திருக்கின்றோம் என்பதற்கு அப்பால் அரசாங்கத்தரப்பால் வேறு எதனையும் கூறமுடியாது.

ஏற்கனவே உலக ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள கண்ணோட்டத்தில் ""இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அற்ற ஒரு நாடாக விளங்குகின்றது' எனக் கூறியிருந்தது. இதனையிட்டு அமைச்சர்கள் கொதித்தெழுந்தனர். இது திட்டமிட்ட புனைவு என்றும் கூறிக்கொண்டனர். ஆனால், இந்த நிமிடம் வரை இலங்கையில் ஊடகவியலாளர்கள் எவ்வித பாதுகாப்பும் அற்றவர்களாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் எவ்வித ஆயுதமும் கொண்டிருக்கவில்லை. பேனாவையும் எழுதுதாள்களையும் கொண்டு தமது கருத்துகளை வெளியிடும் ஊடகவியலாளர்களைக் கண்டு அரசாங்கமோ மற்றும் எவருமோ அஞ்சுவார்களேயானால் அதற்கு உள்ள ஒரே காரணம் கருத்துச் சுதந்திரத்திற்கு இருக்கும் வலிமையேயாகும்.

இத்தகைய கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் பற்றிய அரசாங்க எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வேடிக்கைக்குரியதாகும். அதாவது, கடந்த அறுபது வருடகால பாராளுமன்ற சந்தர்ப்பவாத ஆளும்வர்க்க ஆட்சி முறைமையில் ஊடக சுதந்திரம் தத்தமது ஆளும் எதிர்த்தரப்பு சக்திகளின் வசதிக்கு ஏற்றபடியே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊடக சுதந்திரத்திற்காக குரல் வைத்து கண்ணீர் வடிப்பதும் அரச தரப்பாகியதும் ஊடக சுதந்திரத்தை நசுக்கி ஒடுக்குவதும் மரபாகவே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. தத்தமது ஆட்சி அதிகாரத்திற்கும் ஆதிக்க அரசியலுக்கும் எதிரான அதிருப்தி கண்டனங்கள் ஊடகங்கள் மூலம் வெளிவருவதை இத்தகைய சக்திகள் ஒருபோதும் பொறுத்துக் கொள்வதில்லை. கருத்து ஊடக சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குமே ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு அப்பால் ஊடகங்கள் சென்று கருத்துகளையும் காட்சிகளையும் வெளியிடுமானால் அச்சந்தர்ப்பத்தில் வெவ்வேறு வழிகளிலான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும். இதுவே இன்று இலங்கையில் இடம்பெறுகிறது.

இத்தகைய ஒரு சூழலிலேயே அண்மையில் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் பிரதிநிதித்துவம் பெற இலங்கை அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்து நின்றது. ஏற்கனவே சர்வதேச அரங்கில் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு வந்தது. அதன் வெளிப்பாட்டை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் இலங்கை தெரிவு செய்யப்படாமல் போன விடயத்தில் காணமுடிந்தது. அத் தோல்விக்குப் பின்புகூட அரசாங்கம் தன்னைச் சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்தி மனித உரிமை மீறல் பற்றிய நடைமுறையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியுள்ளது. மேற்படி தோல்விக்குப் பின்பே கொழும்பில் ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்திச் சென்று தாக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் சக்தி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தேவகுமார் கொல்லப்பட்டிருக்கிறார். இவை எதைக் காட்டுகிறது என்பதே நோக்கப்பட வேண்டியதாகும். ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத்துறைக்கும் எதிரான கொலைகளும் தாக்குதல்களும் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களேயாகும். மக்களை அச்சுறுத்தி பீதியடையச் செய்வதாகும். ஏனெனில், அரசியல் போக்குகள் பற்றியும் அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றியும் எவரும் சுதந்திரமாகக் கருத்து வெளியிடலாம் என்றும் அது அடிப்படை ஜனநாயக உரிமை என்றும் கூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அத்தகைய ஜனநாயகம் முன்னெடுக்கப்படுவது அச்சுறுத்தப்படுகின்றது. ஒருசில ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்வது, கடத்துவது, தாக்குவது போன்றவற்றால் முழு ஊடகத்துறையினருமே அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்று அவர்களுக்கு நாளை உங்களுக்கு என எச்சரிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலை ஒட்டுமொத்தமாக ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதிக்கும் செயல்களேயாகும்.

மகிந்த சிந்தனை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை முதன்மைப்படுத்தாது யுத்தத்தின் மூலம் இராணுவத் தீர்வையே முதன்மைப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே செல்கிறது. அத்துடன், தாராள தனியார்மயக் கொள்கை நடைமுறைகளாலும் பொருளாதார நெருக்கடிகள் பெருகி வருகின்றன. வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு தினம் தினம் உயர்ந்து செல்கிறது. மக்களின் அன்றாட வாழ்வு மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. 108 அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கத்தினால் நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாத அவல நிலையிலேயே இருந்து வருகிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயர்ப்பலகையின் கீழ் அரசாங்கத்தின் சகல இயலாமைகளும் பொருளாதாரத் தோல்விகளும் மூடி மறைக்கப்படுகின்றன. அத்துடன், மக்கள் எவ்வித கேள்வி நியாயமும் எழுப்பாது தமது இடுப்புப் பட்டிகளை மேன்மேலும் இறுக்கிக் கொண்டு வாழ வேண்டும் என அரசாங்க கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இத்தகைய நிலையை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துகளும் எழுத்துகளும் வெளிவருவதை அரசாங்கத் தலைமைகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாடும் மக்களும் எதிர்காலமும் எப்படிப் போனாலும் போகட்டும் நாமும் நம்மைச் சுற்றியுள்ள வசதி வாய்ப்புகள் சொத்து சுகமுள்ள ஆளும் வர்க்கத்தினர் மட்டும் சகலவற்றையும் அனுபவித்துக் கொண்டால் போதுமானது என்ற நிலையே கடைப்பிடிக்கப்படுகிறது. இவற்றைப் பற்றி கேள்வி எழுப்பும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர். ஊடகங்களை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்பது பற்றி தீவிரமாக அரசாங்க உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது எனவும் அறிய முடிகிறது.

இவ்வாறு அரசாங்கம் செயல்படுமானால் மீண்டும் மீண்டும் ஊடகங்களுடன் மோதும் நிலை வளரவே செய்யும். அதனால், அரசாங்கம் எதையும் சாதிக்கப்போவதில்லை. எனவே, ஊடக சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றிய அர சாங்கத்தின் நிலைப்பாட்டால் உருவாகியுள்ள பாரிய இடைவெளியை குறைத்துக்கொள்ளும் நடைமுறை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.

No comments: