Friday, 30 May 2008

டீசல் விற்பனையிலிருந்து விலகிக் கொள்ள ஐ.ஓ.சீ. தீர்மானம்

விலைகளை மேலும் அதிகரித்து டீசல் விற்பனையிலிருந்து விலகி, பெற்றோல் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க ஐ.ஓ.சீ. நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக லங்கா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

டீசல் விலை நிர்ணயம் தொடர்பான பூரண உரிமையை அராங்கம் ஐ.ஓ.சீ நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன் காரணமாக ஐ.ஓ.சீ. நிறுவனம் தொடர்ச்சியாக டீசலின் விலையை அதிகரித்து வருகின்றது.

கடந்த 10 நாட்களில் மூன்று தடவைகள் ஐ.ஓ.சீ. நிறுவனம் டீசல் விலையேற்றத்தை மேற்கொண்டுள்ளது. 21ம் திகதி 20 ரூபாவினாலும், 24ம் தகிதி 10 ரூபாவினாலும், 27ம் திகதி மேலும் 20 ரூபாவினாலும் டீசல் விலையேற்றம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஐ.ஓ.சீ. எரிபொருள் நிலையத்தில் ஒரு லீற்றர் டீசலின் விலை 130 ரூபாவாகும்.

157 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் பெற்றோல் ஒரு லீற்றரின் மூலம் 23 ரூபா நிகர லாபம் குறித்த நிறுவனத்திற்கு கிடைப்பதாகத் தெரியவருகிறது.

தொடர்ச்சியாக டீசலின் விலையேற்றத்தை மேற்கொள்வதன் மூலம் அநேகமான டீசல் வாகனச் சாரதிகள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கைள நாடவேண்டிய நிலை ஏற்படும். இதன் மூலம் ஏற்படும் வாகன நெரிசல் காரணமாக பெற்றோலைப் பெற்றுக் கொள்ளும் வாகன சாரதிகள் ஐ.ஓ.சீ. நிறுவனத்திற்கு விரையக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இவ்வாறான ஓர் உத்தி கையாளப்படுவதாகத் தெரியவருகிறது.

இலங்கை கனிய எண்ணெய் சந்தையில் மூன்றில் ஒரு பகுதியின் உரிமையை இந்திய எண்ணெய் நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.

100 எரிபொருள் நிலையங்களைக் கொண்ட ஐ.ஓ.சீ. நிறுவனம், குறைந்த லாபம் உள்ள டீசல் விற்பனையிலிருந்து விலகி பெற்றோல் விற்பனையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

No comments: