Friday 30 May 2008

இலங்கை கடற்கண்ணிகளை மிதக்கவிடுவது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான செயற்பாடு

* இராமநாதபுரத்தில் சிவாஜிலிங்கம் எம்.பி.

சர்வதேச கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினர் கடல்கண்ணிகளை மிதக்கவிடுவது சர்வதேச விதிமுறைகளுக்கும் பரஸ்பர நலன்களுக்கும் எதிரானது என்று கூறியிருக்கும் யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கம். அதனால் இலங்கை, இந்திய மீனவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இராமேஸ்வரத்தில் மீனவர்களின் தலைவர்களுடன் புதன்கிழமை சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்த சிவாஜிலிங்கம் பின்னர் "இந்து' பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில், ""இதுவொரு பாரதூரமான விடயமாகும். தனது கடல் பரப்பிற்குள் கண்ணிவெடிகளை மிதக்கவிட்டிருப்பதாக இலங்கை கடற்படை கூறுகிறது. ஆனால், அவை இந்தியக் கடற்பரப்புக்குள் மிதந்துவரும் சந்தர்ப்பமும் காணப்படுகிறது. கடும் காற்று, அலைகளால் இவ்வாறு மிதந்துவரும் சந்தர்ப்பமும் காணப்படுகிறது. அவ்வாறு கண்ணிகள் மிதந்து வரக்கூடிய பகுதிகள் சர்வதேச கடல் எல்லைக்கு மிகச் சமீபத்திலிருப்பவையாகும்.

இருநாட்டு மீனவர்களினதும் பாதுகாப்புக்கருதி கடல்கண்ணிகள் அகற்றப்பட வேண்டிய தேவைகுறித்து இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்திய அரசாங்கம் கொண்டு செல்ல வேண்டும். இதில் தோல்வி கண்டால் சர்வதேச நீதிமன்றத்தை நீதிக்காக அணுகவேண்டும்' என்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

தமிழக மீனவர்களின் நிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம், பிரச்சினையுடன் தொடர்பு எதுவும் இல்லாத மீனவர்கள் பாதிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமான விடயம். தமிழ் எம்.பி. என்ற ரீதியில் இந்த விடயம் குறித்து இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளேன். அப்பாவி மீனவர்கள் மீது துவக்கு சூடு நடத்தப்படுவதை நிறுத்துமாறும் கேட்டுள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கிடைத்திருக்கும் தகவலின் பிரகாரம் 1983 இற்குப் பின்னர் சுமார் 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இங்கேயும் அங்கேயும் பிரச்சினைகளை ஏற்படுத்துவோர் ஒரு சிலர் இருக்கலாம். அதற்காக முழுச்சமூகத்தையும் இலக்கு வைப்பதென்பது கண்டனத்துக்குரியதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும். கடலில் எல்லைக் கோட்டை கண்டுபிடிப்பது சுலபமானதல்ல. தமிழக மீனவர்கள் எல்லைதாண்டுவார்களேயானால் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், சுடுவது போன்ற தீவிரமான நடவடிக்கைகளை எடுப்பது மனித உரிமைகளுக்கு எதிரானதாகும்.

பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் ஊடுருவிய பலசந்தர்ப்பங்களும் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடலுக்குள் பிரவேசித்த சந்தர்ப்பங்களும் உள்ளன. ஆனால், இந்திய, பாகிஸ்தான் கடற்படையினர் ஒருபோதும் துப்பாக்கி சூடு நடத்தியதில்லை. பதிலாக நடைமுறையிலுள்ள சட்டவிதிகளுக்கமைய நடவடிக்கையை எடுத்து மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். ஆனால், தனது கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் மீனவர்மீது துப்பாக்கி சூடு நடத்தும் ஒரேநாடு இலங்கையே என்றும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

No comments: