Saturday, 31 May 2008

கிழக்கில் புலிகளின் நிலைகளைக் கண்டறிவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிங்களப் படை

sri_lankan_army_1.jpgவடக்கில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை முடிவின்றி நீண்டு சென்று கொண்டிருக்கும் நிலையில், கிழக்கில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் தாக்குதல்களால் படையினர் முன்னுள்ள நெருக்கடி மேலும் அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கிழக்கில் இருந்து விலகிச் சென்ற ஜெயந்தன் படையணியை புலிகளின் தலைமைப்பீடம் மீண்டும் கிழக்கிற்கு அனுப்பி வருவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், அம்பாறையிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு என்றுமில்லாதவாறு பலப்படுத்தப் பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிந்த மறுநாள் 11 ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியிலும், 16 ஆம் திகதி நாவற்குடாவிலும், 20 ஆம் திகதி அரசடியிலும் வைத்து தலா ஒவ்வொரு பொலிஸார் என மொத்தம் மூன்று பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்த நிலையில்!

ltte_figiters.jpg

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் புதிதாக சிறப்புத் தாக்குதல் தளபதிகளை புலிகளின் தலைமை நியமித்திருப்பதானது புலிகளிடம் கிழக்கிற்கு அணிகளை அனுப்புமளவுக்கு ஆளணி வளம் இருப்பதையே காட்டுகிறது.

மட்டக்களப்பில் மட்டுமன்றி திருகோணமலையிலும் தேர்தல் நடைபெற்ற 10 ஆம் திகதி அதிகாலை 2.23 மணிக்கு ஏ-520 என்ற ஆயுத விநியோகக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதும், அன்று காலை அம்பாறை பன்னலகம என்ற இடத்தில் புலிகள் மோட்டார் தாக்குதலை நடத்தியிருந்ததும் கிழக்கின் அனைத்து பகுதிகளுக்குள்ளும் மோட்டார் தாக்குதல்களை நடத்தும் வலிமையுடன் புலிகள் ஆழமாக ஊடுருவியுள்ளனர் என்பதையே காட்டுகிறது.

கடந்த 20 ஆம் திகதி அம்பாறை ரூபஸ் குளத்தில் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலில் அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டார், நான்கு பேர் படுகாயமடைந்தனர். கடந்த 22 ஆம் திகதி அம்பாறை அக்கரைப் பற்று ஊரணியில் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் படுகாயம் அடைந்திருந்தார். மறுநாள் 23 ஆம் திகதி அம்பாறை பக்மிட்டிய என்ற இடத்தில் நடந்த கிளைமோர் தாக்குதலில் படைத் தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப் பட்டார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். 20 ஆயிரம் இராணுவத்தினர், 10 ஆயிரம் பொலிஸார் என சுமார் 30 ஆயிரம் படைத் தரப்பினரின் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு புலிகளின் அணிகள் கிழக்கிற்குள் ஊடுருவியுள்ளதையே இந்தச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதுமட்டுமின்றி, கிழக்கில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளமை படைத்தரப்பிற்கு புதிய நெருக்கடிகளையும் தலைவலியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரம், கடந்த 22 ஆம் திகதி மட்டக்களப்பில் சிறி லங்கா படையினருடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி பொறுப்பாளரும், அந்தக் குழுவின் முக்கிய பிரமுகருமான சாந்தன் துப்பாக்கிதாரிகளால் ஓட ஓட விரட்டி விரட்டி சுட்டுக் கொல்லப்பட்டமையும், அதனையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறையும் கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

‘முஸ்லிம்களே சாந்தனை சுட்டுக் கொலை செய்தனர’; என்று பிள்ளையான் குழு குற்றம் சுமத்துகின்ற போதும் அதனை முஸ்லிம்கள் அடியோடு நிராகரித்துள்ளனர். கிழக்கை முழுமையாகக் கைப்பற்றி, அங்கு ஒரு தேர்தலை நடத்தி, மாகாண நிர்வாகத்தை நடைமுறைப் படுத்தியிருப்பதாக சிங்களம் கௌரவத்துடன் கூறிக்கொள்ள முடியாத நிலைக்கு புலிகளின் ஊடுவல்களும் தாக்குதல்களும் கிழக்கில் அதிகரித்து விட்டன. இத்தகையதொரு நிலையில் கிழக்குப் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் கூறிவரும் தகவல்களில் எதுவித உண்மையுமில்லை என்ற கருத்து சிங்கள மக்கள் மத்தியில் கூட உருவாகி வருகிறது.

கிழக்கில் அதிகரித்திருக்கும் தாக்குதல்களைப் பொறுத்தவரை ஒரே சமயத்தில் மூன்று மாவட்டங்களிலும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத் தக்கது. புலிகளின் சிறிய குழு ஒன்றே இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக படைப் புலனாய்வுப் பிரிவினர் கூறிவரும் தகவல்களை மேற்படி மூன்று மாவட்டங்களிலும் ஒரே சமயத்தில் இடம்பெறும் தாக்குதல்கள் பொய்ப்பிப்பதாகவே அமைந்துள்ளன.

அதாவது ஏற்கனவே இருந்ததைவிட மேலதிகமான அணிகள் வன்னியிலிருந்து கிழக்கிற்கு விரைந்துள்ளன. கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திற்குமென சிறப்புத் தளபதியும் தாக்குதல் தளபதிகளும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதியாக கேணல் கீர்த்தி நியமிக்கப் பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட புலிகளின் தாக்குதல் சிறப்புத் தளபதியாக கேணல் வசந்தன் நியமிக்கப் பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியாக கேணல் ராம் நியமிக்கப் பட்டுள்ளார்.

இவர்களில் கீர்த்தியும், வசந்தனும் பிரிகேடியர் பால்ராஜின் அஞ்சலி நிகழ்வில் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து பங்கேற்றிருந்தனர். தளபதி கேணல் ராம் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவர் அம்பாறையில் நிலைகொண்டு தாக்குதல்களை ஒருங்கிணைத்து வருவதாக கூறப்படுகிறது.

புலிகள் கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்புத் தாக்குதல் தளபதிகளை நியமித்து களமிறக்கியிருப்பது முக்கியத்துவம் மிக்கதாகப் பார்க்கப் படுவதுடன் கிழக்கில் தாக்குதல்கள் மிகவேகமாக அதிகரிக்கும் சாத்தியங்களையும் தோற்றுவித்திருக்கிறது.

வன்னியிலிருந்து கிழக்கிற்கு வருகை தந்த புலிகள் திருகோணமலையின் வடக்கேயுள்ள பேராறு பகுதியில் தரையிறங்கி அங்கிருந்து மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் நகர்ந்துள்ளனர் என்று தெரிய வருகிறது. பேராறு பகுதியில் தரையிறங்கிய இந்த அணியினரின் கிழக்கு நகர்வு குறித்து முகர்ந்து பிடித்த படையினர் கந்தளாய் சிற்றாறு பகுதியிலும் மீகஸ்கொடல்ல பகுதியிலும் வைத்து மேற்படி புலிகளின் குழுவுடன் வழிமறிப்பு தாக்குதலில் ஈடுபட்டனர். எனினும் படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு - போக்கு காட்டிவிட்டு - உரிய இடங்களை புலிகளின் அணிகள் சென்றடைந்திருக்கின்றன.

ஆய்வு: சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக மகிழினி

வன்னியில் தினமும் கடும் மோதல்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் புலிகள் கிழக்கிற்கு தமது அணிகளை அனுப்புகின்றனரெனில் அதற்கு வலுவான காரணங்கள் இருக்கவே செய்யும். குறிப்பாக, படையினரின் போர்த் திட்டங்களைக் குழப்புவதே கிழக்கில் மீண்டும் களமிறக்கப்படும் புலிகளின் முக்கிய பணியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

வன்னியைச் சூழ கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகையில் வன்னியைச் சூழ்ந்துள்ள களமுனைகளில் குவிக்கப்பட்டுள்ள படையினரின் கவனத்தை குலைப்பது அல்லது அங்குள்ள படையினரை பரவலாக்குவதே புலிகளின் உத்தியாகும். கிழக்கில் படையினருக்கு ஏற்படும் நெருக்கடியானது வன்னிக் களமுனைகளில் இத்தகையதொரு நிலையை இலகுவில் ஏற்படுத்திவிடும்.
எனினும் கிழக்கில் தற்போது இடம்பெறும் சிறிய சிறிய தாக்கதல்களால் இத்தகையதொரு நிலையை புலிகளால் அடைந்து கொள்வது கடினமே. எனவே, எதிர்வரும் நாட்களில் கிழக்கில் தமது தாக்குதல்களை புலிகள் தீவிரப்படுத்தும் சாத்தியங்களே அதிகமாகவுள்ளன. மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த கையோடு புலிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருப்பதை வைத்துக் கொண்டு மாகாணசபை நிர்வாகத்தைக் குழப்பும் வகையில் புலிகளின் மேலதிக அணிகள் களமிறக்கப் பட்டிருக்கலாமென எழுந்தமானமாகக் கூறிவிட முடியாது.

அப்படி மாகாணசபை நிர்வாகத்தைக் குழப்புவதானால் தேர்தல் காலத்தில் புலிகளின் அணிகள் கிழக்கில் தமது கைவரிசையைக் காட்டி தமது நோக்கத்தை இலகுவாக அடைந்திருக்கலாம். ஆனால், தேர்தல் காலத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆகவே, புலிகளின் நோக்கம் அதுவல்ல.

அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் பாதுகாப்பு தரப்பினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்களைப் பார்க்குமிடத்து படைத்தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே புலிகளின் திட்டமென்பது வெளிப்படையாகி உள்ளது. அத்துடன் கிழக்குத் தேர்தல் முடியும்வரை நிறுத்தப் பட்டிருந்த சுமார் 20,000 படையினரில் கணிசமானோரை தேர்தல் முடிந்த பின்னர் வடக்கிற்கு நகர்த்தும் திட்டம் இராணுவத் தளபதியிடம் இருந்ததாகவும் முன்னர் கூறப்பட்டது. எனவே, கிழக்கில் தேர்தலுக்கு பின்னர் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி படையினரை வடக்கிற்கு நகர்த்தும் திட்டத்தைக் குழப்பவும் புலிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அதையும் மீறி வடக்கு நோக்கி படையினர் நகர்த்தப்படும் பட்சத்தில் கிழக்கில் களையெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புலிகளுக்கு வாய்ப்பாகிவிடும். அந்த வகையில் கிழக்கில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள புலிகளால் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கப் போவது உறுதியாகி இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை கிழக்கு பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜம்மிக லியனகே தலைமையிலான மூன்று படையணிகள் நிலைகொண்டுள்ளன. 21 ஆவது 22 ஆவது 23 ஆவது படையணிகளே இவையாகும். இந்த மூன்று படையணிகளும் தாக்குதல் படையணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 21 ஆவது படையணி கஜசிங்கபுரத்திலும் 22 ஆவது படையணி திருகோணமலையிலும் 23 ஆவது படையணி வெலிக்கந்தையிலும் நிலைகொண்டுள்ளன.
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை என மேற்படி தாக்குதல் படையணிகளும் நிலைநிறுத்தப் பட்டிருந்தாலும் புலிகள் கிழக்கில் எந்தெந்த இடங்களில் நிலைகொண்டுள்ளனர் என்பதைக் கண்டறிவதில் படைத்தரப்பு பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்திருப்பது வெளிப்படையே. இந்நிலையில் புலிகளின் குழு யால வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள் மீண்டும் நுழைந்திருப்பதாகத் தெரிவிக்கப் படுகிறது. கடந்த வாரம் படைப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்திருக்கும் தகவல்களின்படி புலிகளின் கெரில்லா தாக்குதல் அணியினர் யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் மீண்டும் ஒன்றுகூடி வருவதாகத் தெரிவிக்கப் படுகிறது.

இதனையடுத்து யாலவின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் உத்தரவு யாலவிலுள்ள ஓருங்கிணைப்புக்குழு கட்டளை மையத்திற்கு இராணுவத் தளபதியால் கடந்த வாரம் அனுப்பப் பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவின் இந்தத் தகவல்கள் உண்மையாயின் அடுத்துவரும் நாட்களில் யாலவில் தாக்குதல்கள் அதிகரிக்கும் சாத்தியங்கள் உள்ளன. யால வனவிலங்கு சரணாலயத்தின் வடபகுதியான பாணம என்ற பகுதியிலேயே சுமார் 10 பேரடங்கிய புலிகள் குழுவினரின் நடமாட்டம் காணப்பட்டதாக அப்பகுதி சிங்கள மக்களும் தெரிவித்திருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த டிசம்பர் 7 ஆம் திகதியும் இப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவல்களையடுத்து படையினர் தேடுதல் நடத்தியபோது அப்பகுதியில் இருதரப்பிற்கும் இடையே மோதல் மூண்டிருந்தது. எனினும் அங்கிருந்த புலிகள் தப்பியிருந்தனர்.

தற்போது மீண்டும் புலிகளின் நடமாட்டம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன. யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் புலிகள் முதன் முதலாக 1997 ஆம் ஆண்டிலேயே சிறியதொரு கெரில்லா தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து பின்வாங்கியிருந்தனர். அதன் பின்னர் தற்போதே புலிகளின் நடமாட்டம் யாலவில் அதிகரித்திருக்கிறது. கெரில்லா தாக்குதல்களை நடத்துவதற்கான சிறந்த ஒரு களமாக யால வனவிலங்கு சரணாலயப் பகுதியை புலிகள் கருதியிருக்கலாம். அடிக்கடி அப்பகுதியில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களும் அதனை உறுதிப்படுத்துவது போன்றே உள்ளது.

கஞ்சிகுடிச்சாறு மற்றும் பேராறு பகுதிகளில் சுதந்திரமாக இயங்கிவரும் புலிகளின் அணியினரே யால வனவிலங்கு சரணாலயப் பகுதிக்குள் கெரில்லா தாக்குதல்களை நடத்தும் நோக்கில் உள் நுழைகின்றனர் என்று படைத்தரப்பு கூறிவருகிறது. அதாவது, கஞ்சிகுடிச்சாறு மற்றும் பேராறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி புலிகளை விரட்ட முடியாத கையாலாகாத நிலையில் தாம் இருப்பதை படைத்தரப்பு மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

அதேநேரம், வன்னியில் அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்கதல்கள் நடத்தப்பட்டு பலியெடுக்கும் படலம் தெடர்வதை தடுத்து நிறுத்துவதற்காக தென்னிலங்கையிலும் தாக்குதல்களை நடத்த வேண்டியதொரு நிலை புலிகளுக்கு விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்டிருப்பது யாவரும் அறிந்த உண்மையே.

எனவே, வன்னியிலுள்ள மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தும் வகையிலான தாக்குதல்கள் தென்னிலங்கையில் அதிகரிக்கும் சாத்தியங்களும் காணப்படுகின்றன. வன்னியில் கடந்த 23 ஆம் திகதி நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட 16 பேரின் சடலங்களும் கிளிநொச்சி பாரதிபுரத்தில் மறுநாள் 24 ஆம் திகதி அருகருகே புதைக்கப்பட்டன.

சடலங்கள் புதைக்கப்பட்ட சமயம் கொழும்பில் கடவத்தையிலும் மொறட்டுவையிலும் பேரூந்துகளில் அதிசக்தி வாய்ந்த இரண்டு குண்டுகள் பயணிகள் வழங்கிய தகவலையடுத்து படைத் தரப்பால் மீட்கப்பட்டன. இந்த இரண்டு பேரூந்து குண்டுகளும் மீட்கப்பட்டமை வன்னித் தாக்குதலில் மக்கள் கொல்லப் பட்டமைக்கு கொழும்பில் பதிலடித் தாக்குதல் நடத்தப்பட விருந்ததையே எடுத்துக் காட்டுகிறது. பேரூந்து குண்டுகள் அதிர்ஷ்ட வசமாக மீட்கப்பட்டாலும் 26 ஆம் திகதி பிற்பகல் தெகிவளை புகையிரத நிலையத்தில் வெடித்த குண்டை மீட்க முடியாமல் போய் விட்டது. இச் சம்பவத்தில் 9 பேர் இறந்ததுடன் 70 பேர் வரையானோர் காயமடைந்தும் உள்ளனர்.

எதிர்வரும் காலங்களிலும் இத்தகைய பதிலடிகள் தொடராது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. எனவே, எதிர்வரும் வாரங்களில் கிழக்கில் மட்டுமன்றி தென்னிலங்கையின் ஆழமான பகுதிகளிலும், கொழும்பிலும் கூட படைத்தரப்பு பாரிய நெருக்கடியைச் சந்திக்க நேரலாம். படையினருக்கு ஏற்படும் இத்தகைய நெருக்கடிகள் களமுனைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், புலிகளுக்கு அத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதா என்ற கேளிவிக்கே இடமில்லாத வகையில் அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.

அதாவது வன்னியைச் சூழ்ந்து பலமுனைகளில் படையினர் தாக்குதல்களை நடத்திக் கொண்டு, இன்னும் மீதமாகவிருக்கும் ஒரிரு ஆயிரம் புலிகளை விரைவில் அழித்து விடுவோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

அப்படி ஆள்பற்றாக்குறை இருந்தால் புலிகள் நிச்சயம் தமது புதிய அணிகளை கிழக்கில் தரையிறக்க முன்வந்திருக்க மாட்டார்கள்.

வன்னியைத் தக்கவைப்பதற்கே தமது அணிகளை அவர்கள் பயன்படுத்த முனைவர். ஆனால், கிழக்கிற்குத் தமது புதிய அணிகளை மேலதிகமாக புலிகள் அனுப்பி வருவதைப் பார்க்குமிடத்து புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இல்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

அத்துடன் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் புதிதாக சிறப்புத் தாக்குதல் தளபதிகளை புலிகளின் தலைமை நியமித்திருப்பதானது புலிகளிடம் கிழக்கிற்கு அணிகளை அனுப்புமளவுக்கு ஆளணி வளம் இருப்பதையே காட்டுகிறது.

கிழக்கிற்கு அணிகளை அனுப்பி வைப்பதுடன் பணி முடிந்துவிடப் போவதில்லை. அவர்களுக்கான விநியோகம், தொடர்பாடல், நிர்வாகம் என்பனவற்றையும் உறுதிப்படுத்த வேண்டும். அப்படியிருந்தும் புலிகளின் தலைமை கிழக்கிற்கு அணிகளை அனுப்பும் நிலைக்கு வந்திருக்கிறதெனில் புலிகளின் தலைமைக்கு நிர்வாகச் சிக்கல் என்பது இல்லவே இல்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

இத்தகையதொரு நிலையானது படைத் தரப்பிற்கு நிச்சயம் பாரிய நெருக்கடிகளை விரைவில் கொடுக்கும் அதேவேளை வரலாற்றுச் சமர்களை மீண்டும் நினைவு படுத்தும் வகையிலான தாக்குதல்களும் நடைபெறலாம் என்பதையும் கட்டியம் கூறி நிற்கின்றது.

நன்றி: சுவிஸ் நிலவரம் பத்திரிகை( 30.05.2008 )

No comments: