சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முன்னாள் தலைவரான கருணாவை சிறிலங்காவிற்கு நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கருணாவை நாடு கடத்தும் திட்டத்தின் முதற்படியாக கருணாவை நாடு கடத்துவதற்கு தேவையான பத்திரங்களை பிரித்தானியா அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், அவருக்கான பயண ஆவணத்தையும் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும், கருணாவை வெளியேற்ற பிரித்தானியா தீவிரமாக செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அனுப்பப்பட்ட கடவுச்சீட்டின் அடிப்படையில் சிறிலங்காவிற்கான பிரித்தானியா தூதரகம் கருணாவிற்கான விசாவை வழங்கியது பிரித்தானியாவுக்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தான் பிரித்தானியா கருணாவை வெளியேற்றுவதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
கருணா விசா பெற்றுக்கொண்டதற்கும் தமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ள போதும், கருணாவால் சமர்ப்பிக்கப்பட்ட இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு அரசினால் வழங்கப்பட்டது என்பதில் பிரித்தானியா அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஹார்மொன்ட்வேர்த் என்ற இடத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி ஊடாக நேரடியாக அனுப்பப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment