Friday, 30 May 2008

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி புதுவிதமான ஆர்ப்பாட்டம்

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜுன் 3ஆம் திகதி புதுமையான எதிர்ப்புப் போராட்டமொன்றை நடத்தவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணிக்கு நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பயணிக்கும் வாகனங்கள் 5 நிமிடநேரம் நிறுத்தப்பட்டு வாகனங்களின் விழக்குகளை ஒளிரவிட்டு, வாகன ஒலிகளை எழுப்ப வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலை ஏற்றத்தால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த புதுமையான போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம். நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள மக்கள் இவ்வாறு செய்தி தமது எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஒரு லீற்றர் பெற்றோலை விற்பனை செய்வதன் மூலம் அரசாங்கம் 56 ரூபாய்களை இலாபமாகப் பெற்றுக்கொள்வதாக ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவிக்கிறது. எரிபொருள் விற்பனையின் போது 10 வீதம் தரகுப்பணம் அறவிடப்படுகிறது. இவற்றைக் குறைத்து மக்களுக்கு எரிபொருள் மானியத்தை அரசாங்கத்தால் வழங்கமுடியும் எனக் குறிப்பிட்ட திஸ்ஸ அத்தநாயக்க, ஆனால் அவற்றைச் செய்யாமல் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு பெருமளவான வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு கூடுதல் எண்ணிக்கையான வாகனங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாதவர்களுக்கும் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் எண்ணிக்கையை 25ஆகக் குறைப்பதன்மூலம் எரிபொருள்களின் விலையை பெருமளவு குறைக்க முடியுமென அத்தநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுவிட்டது எனக் கூறிக்கொண்டு பொதுமக்கள் வீடுகளுக்குள் இருந்து கவலைப்படுவதில் பயனில்லை. வீதியிலிறங்கி எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராகப் போராடவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் கூறினார்.

No comments: