Thursday, 29 May 2008

மனித உரிமைச் சட்டங்களை இலங்கை பேணவேண்டும்- ஜோன் ஹோல்ம்ஸ்

இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமை மற்றும் காயமடைகின்றமை தொடர்பாக கவனம் செலுத்தியிருக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை, சர்வதேச மனித உரிமைச் சட்டங்களைப் பேணி மக்களைப் பாதுகாப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது.

இராணுவ மோதல்களுக்குள் சிக்கி அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக பாதுகாப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது. இலங்கை, சோமாலியா, சூடான், பலஸ்தீன், கொலம்பியா போன்ற நாடுகளில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான ஆயுத மோதல்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், போர் குற்றங்கள், மனிதநேயத்துக்கு எதிரான குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்படுவது அவசியம் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

ஆயுத மோதல்களுக்குள் சிக்குண்டிருக்கும் மக்களுக்கான உதவிகளை வழங்கும் மனிதநேயப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் பாதுகாப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.

“பொதுமக்களைப் பாதுகாத்து மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பது சிரமமானது. இலங்கை, சூடான், சோமாலியா போன்ற நாடுகள் மோதல்களைத் தொடர்கின்றன. இலங்கையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளனர்” என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண உதவிகளுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் இடம்பெறும் வன்முறைகளில் ஒரு பகுதியாக அந்நாட்டு மக்கள் மாறியுள்ளனர். இதனால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் கனடாசார்பில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதி ஜோன் மக்நீ கூறியுள்ளார்.

“சமாதானம், பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பாக நீண்டகால பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. பாரியளவிலான வேலைகள் தொடர்ந்தும் எஞ்சியுள்ளன” என்றார் மக்நீ.

உலகளாவிய ரீதியில் பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பாகக் கண்காணிப்பதற்கு உத்தியோகப் பற்றற்ற நிபுணர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கு கடந்த செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உத்தியோகப்பற்றற்ற நிபுணர்கள் குழுவை நியமிப்பதன் மூலம் உலகின் அனைத்துப் பாகங்களிலுமிருக்கும் மில்லியன் கணக்கான சாதாரண மக்கள் நம்மைஅடைவார்கள் என பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜோன் ஹோல்ம் சுட்டிக்காட்டினார்.

No comments: