உணவுப் பற்றாக்குறைக்கு முகம்கொடுத்திருக்கும் நாடுகளுக்கு உணவுப் பொருள்களை உதவியாக வழங்குவதற்கோ அல்லது ஏனைய நாடுகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கோ வளர்ச்சியடைந்த நாடுகள் தடைகளை ஏற்படுத்தக்கூடாதென உலக வங்கியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிபொருள்களின் விலையேற்றம், கேள்வி அதிகரிப்பு, குறைகளுடன் கூடிய வர்த்தகக் கொள்கைகள், அச்சம் காரணமாக கூடுதலான கொள்வனவு போன்ற காரணங்களால் கடந்த ஒரு வருடமாக உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் உட்பட சில நாடுகள் உள்ளூர் சந்தைவாய்ப்பை அதிகரிப்பதற்காக ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
ஜப்பானில் நடைபெற்ற ஆபிரிக்கவின் துணை அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட உலக வங்கியின் தலைவர் ரொபேர்ட் சொய்லிக் மேற்கண்டவாறு கூறியுள்ளார். வரிகளும், கட்டுப்பாடுகளும் “பிரச்சினையை மிகவும் மோசமாக்குகின்றன” என அவர் கூறினார்.
கட்டுப்பாடுகள் காரணமாக உலக உணவுத் திட்டம்போன்ற சர்வதேச உதவி நிறுவனங்கள் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றன என்று உலக வங்கியின் தலைவர் குறிப்பிட்டார்.
“இன்று நாம் கொள்வனவு செய்யும் உணவுப் பொருள்களில் 80 வீதமானவை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்றன. ஏற்றுமதிக்குத் தட்டுப்பாடுகள் காணப்பட்டாலும் அவற்றைக் கருத்தில்கொள்ளாமல் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு அனைத்து நாடுகளும் அனுமதிக்க வேண்டும்” என உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொஸ்ரி ஷீரன் தெரிவித:துள்ளார்.
No comments:
Post a Comment