Saturday, 31 May 2008

மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்பு போர் ஒன்றை புலிகள் விரைவில் துவங்கக்கூடும்!

அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்,கடலில் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதயே அவதானிக்க முடிகிறது.

சமீப காலமாக கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன.இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும்,நவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

இதேவேளை இவ்வாறான தாக்குதல் முன்னோட்டங்கள் புலிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள அவாவி நிற்கும் பெருமெடுப்பிலான பாரிய தரைவழித்தாக்குதலுக்கான முன் அதிர்வுகளாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக நாயாற்றில் கடந்த மார்ச் மாதம் கடற்படையினரின் பீரங்கிப் படகு தாக்கப்பட்டதை தொடர்ந்து,புலிகள் தீவிரப்படுத்தி வரும் கடல் வழித் தாக்குதல்கள் தரைவழியாக புலிகள் பெரும் நில மீட்புச் சமரொன்றுக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்துகிறது.

தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரில்,புலிகளை பொறுத்தவரையில் கடல் வழி அணி நகர்த்தல்களும் முக்கியத்துவம் பெறும் அதேவேளை, எதிகாலச் சமர்க்களங்களில் புலிகளின் விமானப்படை பங்கேற்க போவதும் நிதர்சனம்:கிழக்கிலோ,அல்லது வடக்கிலோ உள்ள பெரும் பகுதி ஒன்றை விடுவிப்பதற்கு,விடுதலைப்புலிகள் தங்களது முப்படைப்பலத்தையும் இதன்போது பிரயோகிக்கக்கூடும்!

இதேவேளை கிழக்கை விட வட பகுதியான இலங்கையின் உச்சியில் நீண்டகாலமாக தொடர்ந்துகொண்டிருக்கும் மனிதப் பேரவலத்தை கருத்தில் எடுத்து,விடுதலைப்புலிகள் தாக்குதலை நெறிப்படுத்தக்கூடும்!

யாழ்ப்பாண மக்கள் கடந்த 3 அல்லது 4 வருடங்களாக பல்வேறு அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வரும் நிலையில்,இதுவரை சர்வதேச சமூகமோ, இந்தியாவோ மனிதாபிமான ரீதியில் மக்கள் துயர் போக்க,இரு தரப்பையும் இவ் விடயத்தில் இணங்க வைக்க அக்கறை காட்டாத போதும்,குடா நாட்டுக்கான ஒரே ஒரு தரவழிப் பாதையான A-9 வீதியின் முக்கியத்துவம் குறித்து பல தரப்பினரும் யதார்த்தபூர்வமான கருத்துக்களை முன்வைத்தே வந்துள்ளனர்.

இவ்விடயத்தில் இரு தரப்பினருக்கும் தீவிர அழுத்தங்களை கொடுத்து மூடப்பட்ட A-9 ஐ திறப்பதற்கு சர்வதேச நாடுகளும்,மனிதாபிமான தொண்டர் அமைப்புகளும்,தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால்,யாழ்ப்பாண மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிர்க்கதி நிலைக்குள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.

அத்துடன் இது தொடர்பாக பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்த கருத்துகளும் சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே உள்ளது.அரசாங்கத்தை பொறுத்தவரை வன்னியை மீட்பதே அதன் இறுதிக்கட்ட இலக்காகி திக்குமுக்காடி வரும் நிலையில்,மக்கள் நலன் சார்ந்த நோக்கில் விடுதலைப் புலிகள் முன்கூட்டியே பெருமெடுப்பிலான பாரிய நில மீட்புச் சமர் ஒன்றை எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடும்!

virakesari

No comments: