மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கும், சர்வதேச நாடுகளின் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முக்கியமான 16 மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளவிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
விசாரணை ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக மனித உரிமை மீறல் விசாரணைகளில் பாதுகாப்புத் தரப்பு மற்றும் விசேட அதிரடிப்படையினரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான கொமின் தயாசிரி மற்றும் எஸ்.எல்.குணசேகர சந்தேகத்தை எழுப்பியுள்ள நிலையிலேயே இந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிடுவதற்குத் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெறுகின்றனவா மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர் நேசையாவுக்கும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்துக்கும் இடையில் காணப்படும் நெருக்கம் தொடர்பாகவும் ஆராயுமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. இது தொடர்பாக 30ஆம் திகதி விளக்கமளிக்க வேண்டுமென ஜனாதிபதி முன்னர் கூறியிருந்ததாகவும் அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா ஆகிய நாடுகளிடம் உதவிகளைப் பெற்றுக்கொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி உடலகம மறுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment