அரசாங்கத்திடமிருந்து எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும்; ஒரே குடையின் கீழ் நின்று அரசாங்கத்துக்கு எதிராகப் போராடப்போவதாக உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இருப்பாரென்றும், ருக்மன் சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடாத்துவாரென்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளை கருத்திற்கொண்டு இக் கூட்டணியில் இணைய மக்கள் விடுதலை முன்னணியும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத்தவறியுள்ளதாகவும், அதன்காரணமாக அரசாங்கத்தைத் தோற்கடிக்க இந்தப் பாரிய கூட்டணியுடன் இணைந்து செயற்படப்போவதாகவும் ம.வி.முன்னணி தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டணியை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மிக விரைவில் தோற்றுவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பாரிய கூட்டணியின் பொதுச் செயலாளராக முன்னாள் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் தலைவர் டிரான் அலஸ் இருப்பார் எனவும், இந்தக் கூட்டணியை அமைப்பதில் எஸ.பி.திசாநாயக்க முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தகப் பாரிய கூட்டணி இளைஞர், மகளிர், துறைசார்ந்தோர், பிக்கு முன்னணிகள், ஆசிரியர்கள், விவசாயிகள் என பல்வேறு துறைகளில், பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் எனவும், இதனூடாக அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மக்கள் ஆதரவைப் பெறும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment