Friday 30 May 2008

வில்பத்து சரணாலயப் பகுதியில் 3 பேர் சுட்டுக்கொலை

shoot-down.jpgசிறிலங்காவின் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இன்று இரவு ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் உள்ள 18 ஆவது வலயப் பகுதியிலேயே இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:30 மணியளவில் இவர்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

வீடு ஒன்றில் இருந்த ஊர்காவல் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும் கணவனும் மனைவியுமே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என அனுராதபுரம் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் முதியவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதாக கூறப்படுகின்றது.

வில்பத்து வனவிலங்கு சரணாலயப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மேற்படி சரணாலயம் மூடப்பட்டு அங்கு பலத்த தேடுதல்கள் நடைபெற்றதுடன் சந்தேகத்திற்கு இடமான எவரும் அப்பகுதியில் இல்லை என்று படைத்தரப்பு உறுதிப்படுத்திய பின்னரே மீண்டும் சரணாலயம் திறக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அப்பகுதியில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணியில் ஊர்காவல் படையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டிருப்பதாக அனுராதபுரம் மாவட்ட காவல்நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments: