மாகாண முதலமைச்சர்கள் ஒன்றியத்தின் புதிய தலைவராக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த நான்கு மாதங்களுக்கு அவரே தலைவராகப் பதவி வகிக்கவுள்ளார்.
இன்று சனிக்கிழமை பதுள்ளையில் இடம்பெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டிலேயே முதலமைச்சர்கள் ஒன்றியத்தின் தலைவராகப் பிள்ளையான் நியமிக்கப்பட்டார். அடுத்த முதலமைச்சர்கள் மாநாட்டு மட்டக்களப்பில் நடத்துவதற்கும் ஏற்பாடாகியுள்ளது.
கிழக்கு மாகாணசபை இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லையெனத் தெரிவித்திருக்கும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பிள்ளையான், தற்பொழுது கிழக்கு மாகாணசபை பெயரளவில் மாத்திரம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
“மத்திய அரசாங்கத்திடம் மாத்திரம் குவிந்துகாணப்படும் பெருமளவிலான அதிகாரங்கள் மாகாண ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என இன்று நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிள்ளையான் தெரிவித்தார்.
13வது திருத்தச்சட்டமூலத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டியது அவசியம் என வலியுறுத்தியிருக்கும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சர், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியமானது எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment