Thursday, 29 May 2008

மன்னார் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்ல ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி உறுதிமொழி

மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மட்டத்தில் எடுத்துச் செல்வதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேயப் பணிகள் தொடர்பான வதிவிடப் பிரதிநிதி நெய்ல் பஹ்னர் உறுதியளித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்த நெய்ல், அங்குள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்ததுடன், மன்னார் ஆயர் இல்லப் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

மன்னாரிலுள்ள ஐ.நா. ஸ்தாபனங்களுக்கும், ஆயர் இல்லத்துக்கும் இடையில் காணப்படும் உறவுநிலை தொடர்பாக ஐ.நா. அதிகாரி திருப்தி தெரிவித்ததாக இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்த மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை அடிகளார் ஐ.என்.எல்.லங்காவுக்குத் தெரிவித்தார். மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, குறிப்பாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து ஐ.நா. விதிவிடப் பிரதிநிதிக்கு எடுத்துக் கூறினோம். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் முசலிப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அவருக்கு விளக்கியதாக விக்டர் சோசை அடிகளார் கூறினார்.

இடம்பெயர்ந்திருக்கும் மக்கள் சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு அமைய நடத்தப்பட வேண்டுமென நாங்கள் அவரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களின் சுதந்திரமான நடமாட்டம் பற்றியும், மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் கைதுகள் மற்றும் காணாமல்போதல்கள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்தும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான விதிவிடப் பிரதிநிதியிடம் சுட்டிக்காட்டியதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் எம்மிடம் தெரிவித்தார்.

மடு தேவாலயத்தைச் சூழ 2 கிலோமீற்றர் தூரம் புனித பிரதேசமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கை குறித்து ஐ.நா. பிரதிநிதிக்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது. மடு மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் ஆலயத்துக்குக் கொண்டு வருவதுடன், மடு தேவாலயப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்து தேவாலய வளாகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னிக்குச் சென்றிருக்கும் 25,000ற்கும் அதிகமான மக்கள் மீண்டும் புனித பிரதேசத்துக்குள் தஞ்சமடையவேண்டும் என்பது பற்றியும் நெய்லுடன் கலந்துரையாடியிருப்பதாக, விக்டர் சோசை அடிகளார் கூறினார்.

மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சர்வதேச ரீதியில் எடுத்துச்செல்லப்படுவதில்லையென்பதை ஐ.நா. பிரதிநிதிக்கு தாம் எடுத்துக் கூறியதாகவும், அதனை ஏற்றுக்கொண்டு மன்னார் மக்களின் பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ரீதியில் கொண்டுசெல்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேயப் பணிகள் தொடர்பான வதிவிடப் பிரதிநிதி நெய்ல் பஹ்னர் உறுதிமொழி வழங்கியதாகவும், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை அடிகளார் எமது செய்திப் பிரிவிடம் மேலும் தெரிவித்தார்.

No comments: