Saturday, 31 May 2008

யாலவில் புலிகளுக்கு உணவு வழங்கும் சிங்கள, முஸ்லிம் குழுவினர்

யால சுற்றுலா வனப்பகுதி உட்பட சுற்றுவரப் பரந்துள்ள யால காட்டுப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவ்வாறு ஆங்காங்கே புகுந்து மறைந்திருக்கும் புலிகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் காட்டுப்பகுதிகளுக்குள் கொண்டுசென்று மிகக் கூடுதல் விலைக்கு விற்று இலட்சக்கணக்காகப் பணம் சம்பாதிக்கும் வியாபாரத்தில் சில குழுவினர் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காடுகளில் பதுங்கியிருக்கும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு உணவுப் பொருட்களை விற்பவர்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த குழுவினரே எனவும் பிரச்சினைக்குரிய யால பிரதேசங்களிலும் அண்டியுள்ள கிராமப்பகுதிகளிலும் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்களே பாதுகாப்புக் கெடுபிடியின்றி இயல்பாக வாழ்ந்தும் நடமாடியும் வருவதால் இவ்வாறு யாலப் பிரதேசக் காடுகளுக்குள் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு விற்பதற்காக உணவுப்பொருட்களைக் கொண்டுசெல்வதில் பெரும் சிரமம் ஏற்படுவதில்லையெனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள, முஸ்லிம் குழுவினரைப் பிடிப்பதற்காக யால பொலிஸ் பிரிவினர் யாலக் காட்டுப் பகுதிகள் மற்றும் காட்டுப்புறக் கிராமங்களில் பரந்த அளவில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளையும் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், பொலிஸ் தரப்பினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கேற்ப இவ்வாறு யால காட்டுக்குள் மறைந்திருக்கும் புலிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்க பெரும் பணம் சம்பாதித்துவரும் சிங்கள, முஸ்லிம் குழுவினரைத்தேடி யாலபிரதேசம், அதனை அண்டிய கிராமங்கள் சார்ந்த வழமையான போக்குவரத்துப் பாதைகளில் பொலிஸ் பிரிவினர் ஏற்கனவே சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், குறித்த வியாபாரக் குழுவினர் வேறு இரகசியப் பாதைகள் மூலமே இவ்வாறு உணவுப் பொருட்களை யால காட்டுப்பகுதிக்குள் கடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் குழுவினர் முச்சக்கர வண்டிகள் மூலமாக மட்டுமன்றி உழவு இயந்திரங்கள் மூலமும் உணவுப் பொருட்களைப் பெருந்தொகையில் குறித்த இரகசியக் காட்டுப்பாதைகள் மூலமாக யால காட்டுக்குள் கடத்திவருவதாக மேலும் தெரியவந்துள்ளது.

இந்த வியாபாரக்குழுவினர் பெரும்பாலும் அரிசி மற்றும் உலர் உணவுப் பொருட்களையே இவ்வாறு இரகசியமாக காட்டுக்குள் கொண்டுசென்று புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு விற்றுவருவதாகவும் இந்த வகையில் இதுவரையில் பெருந்தொகையான அரிசி மூடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை இந்த வியாபாரிகள் மூலம் யால காட்டுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரவாதிகள் பெற்றுவிட்டனர் எனவும் யால பொலிஸ் தரப்பில் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், அண்மைக் காலங்களில் இவ்வாறு பயங்கரவாதியினருக்காக யால காட்டுக்குள் உணவுப் பொருட்களைக் கடத்திவரும் சிங்கள, முஸ்லிம் வியாபாரிகளைத் தேடிப் பொலிஸார் தீவிர கண்காணிப்புகளை மற்றும் திடீர் சோதனை நடவடிக்கைகளை எடுத்துவந்ததைத் தொடர்ந்து கடந்தவாரம் பொத்துவில் பிரதேசத்தில் வைத்து முச்சக்கரவண்டியில் பயங்கரவாதிகளுக்காக உணவுப்பொருட்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த இரண்டு முக்கிய நபர்களை பொத்துவில் பிரதேச பொலிஸ் விசேட நடவடிக்கைப் பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து இவ்வாறு யாலவுக்குள் பதுங்கியுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு விற்பதற்காக முச்சக்கர வண்டியில் உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற இருவரும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக விசேட நடவடிக்கைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து குறித்த இரண்டு நபர்களையும் கைதுசெய்து தடுத்துவைத்துள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது இந்த வியாபாரம் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு முஸ்லிம் நபர்களும் பொலிஸாருக்கு வெளியிட்டுள்ள தகவல்களுக்கேற்ப யால காடுகளில் பதுங்கியுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுக்கு இவ்வாறு உணவுப்பொருட்களை விற்றுவரும் வியாபாரத்தில் பெரும்பாலும் பொத்துவில், லாஹுகல மற்றும் றதெல்ல பிரதேசங்களில் வசிக்கும் குறிப்பிட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த குழுவினரே ஈடுபட்டுவருவதாகவும் இந்த வகையில் அப்பகுதிகளிலிருந்து யால காட்டுப்பகுதிகளுக்கு உணவுப்பொருட்களைக் கடத்துவதில் பெருந்தொகையான சிங்கள, முஸ்லிம் நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு இந்த நபர்களிடமிருந்து உணவுப்பொருட்களை வாங்கும் இரகசிய நடவடிக்கைகளில் சுமார் 500 புலிகள் இயக்கத்தினர் ஈடுபட்டிருப்பதாக மேலும் மேற்படி நபர்கள் தெரிவித்த தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்தப் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் யால காட்டுப் பிரதேசங்களில் மட்டுமன்றி பொத்துவில், லாஹுகல, றதெல்ல போன்ற யாலவை அண்டிய நகர மற்றும் கிராமப்பகுதிகளிலும் நடமாடி இவ்வாறு குறித்த சிங்கள, முஸ்லிம் வியாபாரிகளிடமிருந்து கூடுதல் விலை கொடுத்து உணவுப் பொருட்களைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என மேலும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார்.

லங்காதீப: 29052008

No comments: