Thursday, 29 May 2008

ரணிலின் வருகைக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு உறுப்புரிமை கிடைக்காமல் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்ததாக அரசாங்க ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை நாடுதிரும்பியிருந்தார். இவரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டுநாயக்க விமானநிலையப் பகுதியில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

வெளிநாடுகளில் காணப்படும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை கிடைக்கப்பெறாமல் செய்திருப்பதாக ஆர்ப்பாட்டக் காரர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

விமானத்துறை பிரதி அமைச்சர் சரத் குணரட்ன மற்றும் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகளின் ஆதரவாளர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பதற்குச் சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலரையும், ஆர்ப்பாட்டக் காரர்கள் தாக்கியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இணையத்தளமொன்றிடம் கூறியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கியிருக்கும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மேலும் நீடிப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தனது ஐரோப்பிய விஜயத்தின் போது கலந்துரையாடியிருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இலங்கைக்கான ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை மேலும் நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments: