Saturday, 31 May 2008

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை: ஆணைக்குழு விளக்கம்

முக்கிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அதன் செயற்பாடுகளை மேலும் தாமதப்படுத்துவதுடன், அதன்மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரை ஏற்படுத்தும் என விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெற்றுக்கொள்வதாகவும், ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் அந்தப் பதவிகளுக்குப் பொருத்தமற்றவர்கள் எனவும் குற்றஞ்சாட்டி சிரேஷ்ட சட்டத்தரணிகளான எஸ்.எல்.குணசேகர மற்றும் கொமின் தயாசிறி ஆகியோர் ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த அவர்கள், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆணைக்குழு விளக்கமளிக்க வேண்டுமனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்துக்கு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதுடன், முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும் தெரிவித்துள்ளது.

விசாரணை ஆணைக்குழு அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுக்கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களை மறுத்திருக்கும் அந்த ஆணைக்குழு, 17 அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்களின் படுகொலைகள் மற்றும் திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து இளைஞர்களின் படுகொலைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கான தொலைக்காட்சிமூலமான நேரடி சாட்சியமளிப்புக்கு உதவிகள் தேவையா என மூன்று நாடுகளையும் சேர்ந்த தூதுவர்கள் விசாரணை ஆணைக்குழுவிடம் கோரியிருந்ததாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“கடந்த மார்ச்மாத இறுதியில் சர்வதேச சுயாதீன மான்புமிக்கோர்குழு வெளியேறியதைத் தொடர்ந்து சாட்சியங்கள் பதிவுசெய்வதைத் தவிர வேறு மாற்றுவழி எமக்கு இருக்கவில்லை. இதனால் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன வழங்க முன்வந்த உதவிகளை மறுப்பதற்கு காரணங்கள் இருக்கவில்லை” என ஆணைக்குழு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் செலவில் இரண்டு ஆணைக்குழு அதிகாரிகள், சாட்சியங்களைப் பாதுகாப்பது தொடர்பான பயிற்சிகளைப் பெறுவதற்கு அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். ஆணைக்குழு பயன்படுத்தும் சாதனங்கள் ஜப்பான் அரசாங்கத்தால் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்ட நிதியுதவியால் வழங்கப்பட்டவை என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பதில் கடிதங்கள் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

No comments: