Saturday, 31 May 2008

மண்டைதீவில் விடுதலைப் புலிகள் தரையிறங்கலாம்: "லக்பிம" வார ஏடு


யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் மீது கடந்த கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலை நோக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

மருதானை - பாணந்துறை தொடருந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள அதேவேளை, வில்பத்து சரணாலயப்பகுதியில் உள்ள இராஜாங்கன பகுதியில் உள்ள ஜாயா 18 பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் ஊர்காவல் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

வன்னிப்பகுதியில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்தே பாணந்துறை தொடருந்து மீதான குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.

வன்னியில் நடைபெற்ற தாக்குதலை இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் நடத்திய அதிர்ச்சிகரமான தாக்குதல்

சிறுத்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அதிர்ச்சிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சிறுத்தீவு யாழ்பாணத்திற்கும் மண்டைதீவுக்கும் இடையிலான நீரேரியில் அமைந்துள்ளது.

அதிகாலை பூநகரியின் கல்முனைப் பகுதியில் இருந்து 8 படகுகளில் வந்த விடுதலைப் புலிகளே தாக்குதலை நடத்தினர்.

கல்முனைப் பகுதியானது சிறுத்தீவில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

தாக்குதல் நடைபெற்ற போது சிறுத்தீவில் உள்ள படைநிலையில் 15 கடற்படையினரும் 6 இராணுவத்தினரும் பணியில் இருந்தனர்.

இத்தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும், 2 கடற்படையினரும் காணாமல் போனதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது.

எனினும் இத்தாக்குதலில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மூவரின் சடலங்களும் பெருமளவிலான ஆயுதங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இச்சமரின் போது இரு தரப்பும் செறிவான பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர்.

படையினாரின் கவனத்தை திசை திரும்பும் முகமாகவே விடுதலைப் புலிகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

பூநகரியின் கல்முனைப் புள்ளியானது விடுதலைப் புலிகளின் பிரதான பீரங்கித் தளமாகும். இங்கு இருந்து ஏவப்படும் 130 மி.மீ பீரங்கி எறிகணைகள் பலாலி கூட்டுப்படைத்தளத்தை தாக்கும் திறன் கொண்டது.

எனினும் அதன் ஒடுக்கமான தரையமைப்பு சில பிரதிகூலங்களையும் கொண்டுள்ளது.

மேலும் கல்முனைப் புள்ளியானது கடற்புலிகளின் தாக்குதல் பின்தளமாகும். இது யாழ். நகரில் இருந்து 6 கி.மீ அகலமான கடல் நீரேரியின் மறுபக்கத்தில் அமைந்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தாக்குதலின் போதும் விடுதலைப் புலிகள் மண்டைதீவில் தரையிறக்கத்தை மேற்கொண்டிருந்தனர்.

வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல் தமிழ் மக்களுக்கு உள்ளூரிலும் வெளிநாட்டிலும் பெரும் உளவியல் உறுதிகளை ஏற்படுத்தியிருக்கும்.

எனினும் இத்தாக்குதலை நோக்கும் போது விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. அது சாத்தியமானால் யாழ். குடாநாட்டின் நிலமை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதையும் நிராகரிக்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: