இலங்கையைப் பொறுத்தவரை சார்க் மாநாட்டை நடத்தி அதன் தலைமையை தமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதே அதன் இலக்காக உள்ளது. அத்துடன் இதனை வைத்துக்கொண்டு உள்நாட்டில் அரசியலை முன்னெடுப்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தெற்காசிய மாநாட்டில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் உட்பட்ட நாடுகளுக்குத் தமது பிராந்திய ஆதிக்கத்தன்மையை வெளிக்காட்டுவதும் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலவரத்தில் தளம்பல் ஏற்படாமல் வைத்துக்கொள்வதன் மூலம் அந்த நாட்டை வேறு நாடுகளின் பக்கம் சாராமல் தம்பக்கம் வைத்துக்கொள்வதே முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த இரண்டு நோக்கங்களையும் மையமாகக்கொண்டே “சார்க்” மாநாட்டின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பளிக்க மூவாயிரம் படைவீரர்கள் இலங்கைக்கு வருவர் என்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக இந்தியப் படையினரின் வருகைக்குத் தாம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும் தற்போது இந்தச் செய்தியை இலங்கையின் வெளியுறவுத் துறைச் செயலர் பாலித கோஹன மறுத்துள்ளார். இந்தியப் பிரதமர் உட்பட்ட அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் “சார்க்” மாநாட்டின் போது இலங்கைப் படையினரே பாதுகாப்பளிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னைய செய்திகளினதும் தற்போது மறுப்பினதும் பின்னணிகள் என்ன? என ஆராய்ந்தால் தமிழக உணர்வுகள் அது இந்தியப் பொதுத்தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஏதுநிலை இந்தியப் பிரதமர் அந்த நாட்டுப் பாதுகாப்புடன் சார்க் மாநாட்டுக்கு வருவாராக இருந்தால் அதனை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப் போகின்றன? அத்துடன் அந்த நாடுகளும் தமது படைகளை தமது நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்புக்காக அனுப்பினால் அது இலங்கையில் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் என்ற நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. (ஆப்கானிஸ்தானும் ஜனாதிபதி ஹமீர் கர்சாயின் பாதுகாப்புக்குத் தமது நாட்டின் படைகளை அனுப்பப் போவதாக அறிவித்திருந்ததாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. பாகிஸ்தானும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்ற அடிப்படையில்தமது தலைவரின் பாதுகாப்புக்காகப் பாகிஸ்தானியப் படைகளை அனுப்பக் கோரினால் என்ன செய்வது? என்ற பிரச்சினையும் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது) எனவே இந்தியப் படையினரின் வருகை என்ற விடயத்தை மறுக்கும் நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
இலங்கை இந்தியப் படைகளை சார்க் மாநாட்டுக்கு அழைப்பதன் மூலம் இரண்டு விடயங்களைச் சாதித்துக்கொள்ளக் காத்திருந்தது. ஒன்று – சார்க் மாநாட்டு பாதுகாப்புக்காக வடக்குகிழக்குப் பகுதியில் இருந்து படைகளை நகர்த்தினால் அது தற்போதைய குறித்த பிரதேசத்தின் இராணுவ நகர்வைப் பாதிக்கலாம் என்ற அச்சம். இந்தியப் படைகள் கொழும்பு நகரின் பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கின்ற போது தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவைப் பகைத்துக்கொள்ள வேண்டிவரும் என்ற காரணத்தினால் பாரிய தாக்குதல் ஒன்றிலும் ஈடுபடமாட்டார்கள் என்பது இரண்டாவது காரணமாக அமைந்திருந்தது.—அவ்வாறு தாக்குதல் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தினால் இந்தியாவுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் ஒரு முறுகலை ஏற்படுத்தலாம் என இலங்கை எதிர்ப்பார்த்தமையாகும். மறுபுறத்தில் இந்தியாவும் இந்த விடயத்தில் உள்நாட்டுப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் எதிர்கட்சிகள் இந்தியப் படைகள் இலங்கைக்குச் செல்வதை எதிர்க்கின்றன. ஏனைய காலப்பகுதிகளைக் காட்டிலும் தற்போது தமிழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலை காணப்படும் இன்றைய சூழ்நிலையில் இந்தியப் பிரதமர் தமது படைகளுடன் இலங்கையுடன் வந்தால் அது விரைவில் எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்ற அச்சம் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிலைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழகத்தில் நீண்டகால அடிப்படையில் காலூன்றவும் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை நீடித்துச்செல்லவும் வழிவகுத்துவிடும் என்ற பயத்தை இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்தியப் படையினரின் வருகை மாத்திரமல்ல இந்தியப் பிரதமரின் சார்க் மாநாட்டுக்கான வருகையும் தடங்கலாகலாம் என்ற எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது “சார்க்” மாநாட்டையும் பாதிக்கலாம் என்ற கருத்தும் வெளியிடப்பட்டுள்ளது. இதனையும் மீறி இந்தியப் படைகள் இலங்கைக்கு வருமாக இருந்தால் அது பிராந்தியத்தில் மேலும் சிக்கல் நிலையை ஏற்படுத்தவே வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
இதற்கிடையில் வடக்கில் மன்னாரின் பெருமளவு நிலப்பரப்பை தாம் கைப்பற்றியுள்ளதாகப் படைத்தரப்பு உரிமைகோரியுள்ள நிலையில் கிளிநொச்சியை நோக்கிய படையினரின் நகர்வுக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு செயற்படப் போகிறார்கள் என்பதும் சார்க் மாநாட்டு நிகழ்வுகளை அவர்கள் எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதும் மாநாட்டுக்கான அடுத்த கட்டங்களில் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பதை மறுக்கவியலாது.
tamilwin
|
No comments:
Post a Comment