ஊடகவியலாளர் நாமல் பெரேரா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் விவகாரப் பிரிவு அதிகாரி மகேந்திர ரட்ணவீர ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் தவறினால், அரசாங்கம் மீதே சந்தேகம் ஏற்படும் என ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு விசேட அமைச்சரவைக் குழு மற்றும் இரண்டு ஊடகத்துறை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம் தம்மைத் தலைகுனிய வைத்திருப்பதாக நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் குறிப்பிட்டார்.
“எமக்கு வெட்கத்தையும், வெறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களைக் கைதுசெய்யுமாறு பொலிஸாரிடம் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கென இரண்டு விசேட குழுக்களைப் பொலிஸார் நியமித்துள்ளனர்” என்றார் அமைச்சர்.
தாக்குதல் இடம்பெற்று சில நிமிடங்களின் பின்னர் தாக்குதல் குறித்து அறிந்துகொண்டதாகவும், இது தொடர்பாக ஜனாதிபதிக்கு உடனடியாக அறிவித்ததாகவும் தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன, தாக்குதலுக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாகவும் கூறினார்.
“தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் காணப்பட்ட இலக்கத் தகடுபற்றிய தகவல்களைப் பொலிஸார் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு வெள்ளைவான் பயன்படுத்தப்படவில்லை, வெள்ளை வானுக்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பில்லையென்பதும் பின்னர் கண்டறியப்பட்டது” என அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, ஊடகவியலாளர் நாமல் பெரேரா மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவர்களுக்கு 5 மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும் என இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும்,
பத்திரிகை வெளியாட்டாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பை வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் நாமல் பெரேராவை, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் விசேட அமைச்சரவைக் குழுவின் உறுப்பினர், அமைச்சர் சரத் அமுனுகம வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டிருந்தார்.
அத்துடன், இனந்தெரியாத குழுவினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் நாமல் பெரேரா அப்பலோ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகிறார். உட்காயங்களால் தான் பெரிதும் வேதனைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment