”நாம் பேச்சுக்களை முன்னெடுத்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் புலிகள் ஆயுதப் பலத்தைக் காட்டவே முற்பட்டனர்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
”இன்றைய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமையைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அப்பொறுப்பை முழுமையாக நிறைவேற்றுவோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பேருவளையில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது: ”நாம் எதைச் செய்வதற்கும் எமக்கு நாடு முக்கியம். நாட்டைப் பாதுகாக்க வேண்டியது எமது தலையாய கடமை. நாட்டைத் துண்டாட எம்மால் இடமளிக்க முடியாது.
பிரச்சினைத் தீர்வுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள நாம் பகீரத முயற்சிகளை மேற்கொண்டோம். நோர்வே, ஜெனீவா என வெளிநாடுகளில் பேச்சுக்களை முன்னெடுத்தும் எதுவும் பயனளிக்கவில்லை. அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் புலிகள் அவர்களின் ஆயுதப் பலத்தைக் காட்டவே முற்பட்டனர்.
மாவிலாறு பிரச்சினை வரை பொறுமை காத்த பின்னரே நாம் யுத்தத்தை மேற்கொண்டோம். எனினும் யுத்தம் இடம்பெறுகின்ற போதும் நாட்டில் பயங்கரவாதிகளுக்கும் உணவுகளையும், மருந்துகளையும் அனுப்புகின்ற அரசாங்கமாக நாம் உள்ளோம்.
இதற்காக சர்வதேச நாடுகள் எம்மைப் பாராடுகின்றன. அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் உணவு உட்பட சகலதையும் அரசாங்கமே வழங்குகிறது. அப்பிரதேச உற்பத்திகளை விலைகொடுத்து அரசாங்கம் பெற்றுக் கொள்கிறது. வேறு எந்த நாட்டில் இப்படி நடக்கின்றது?
இப்போது யுத்தம் நிறுத்தம் செய்ய வேண்டுமென கோரப்படுகிறது. எமக்கு 20 வருடகால வரலாற்றுப் படிப்பினையுள்ளது. நாம் சிறந்த பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். தெற்கில் குண்டு வைத்து இனக்கலவரமொன்றை ஏற்படுத்தி அரசாங்கத்தைக் கவிழ்க்கலாம் என்ற பகற்கனவில் பயங்கரவாதிகள் செயற்படுகின்றனர்.
இதற்கு பல தந்திரோபாயங்களை அவர்கள் மேற்கொள்கின்றனர். நம்மவர்கள் பலரும் இதற்கு உதவி வருகின்றனர். சிலர் தெரிந்தும் தெரியாமலும் உதவி செய்கின்றனர். நாட்டில் இடம்பெறும் அபிவிருத்தியையும், அரசாங்கம் ஈட்டிவரும் வெற்றிகளையும் பொறுக்க முடியாத சிலரே அரசைக் கவிழ்க்கும் முயற்சிக்குத் துணைபோகின்றனர்.
எமது அடுத்த பரம்பரைக்கு சுதந்திரமான இலங்கையைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கமும், பொறுப்பும். அதுவரை அரசாங்கத்தின் இந்தப் பயணம் தொடரும்” எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment