புலிகள் அடுத்து என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய நிலையில் முதன்மையான கேள்வியாகும்.
இன்று சாதாரண தமிழ் மக்களிலிருந்து அரசியல் நோக்கர்கள் வரை இந்த கேள்வியில்தான் கட்டுண்டு கிடக்கின்றனர்.
சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் சில நேரங்களில் இது ஒரு புரியாத புதிராகவும் சில நேரங்களில் வேதனைக்குரிய விடயமாகவும் இருக்கலாம்.
அரசியல் நோக்கர்களைப் பொறுத்தவரையில் இந்தக்கேள்வி, புதிய புதிய ஊகங்களுக்கும், ஆய்வுகளுக்குமான களத்தை தொடர்ந்தும் விரித்துச் செல்லும் ஆய்வுப்பொருளாக இருக்கலாம்.
ஆனால், சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் தோல்வியடைந்து வருகின்றனர். இன்னும் சிறிது காலத்திற்குள் அவர்கள் பூண்டோடு அழிந்துவிடுவார்கள்.
சிங்கள நிகழ்சி நிரலை அப்படியே விழுங்கி அப்பழுக்கற்ற முறையில் வாந்தி எடுத்துவரும் கொழும்பின் சிங்கள ஊடகங்கள் அவ்வாறான ஒரு கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் நிலைபெறச் செய்வதில் கண்ணும் கருத்துமாக செயலாற்றி வருகின்றன.
சார்க் மகாநாட்டை முன்னிட்டு புலிகள் அறிவித்த ஒருதலைப்பட்ச போர்நிறுத்தத்தை சிங்களம் பரிகாசிப்புக்குரிய ஒன்றாகவே பார்த்தது. இது புலிகளும் எதிர்பார்த்த ஒன்றுதான்.
மகிந்த நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் அதன் நிலைமை ருசி கண்ட பூனையைப் போன்றது.
அதனிடமிருந்து போர் தவிர்ந்த எந்தவொரு மாற்று சிந்தனையையும் நாம் எதிர்பார்க்க முடியாது.
புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் இயலாமையின் வெளிப்பாடுதான்.
எனவே, இந்த பின்புலத்தில் புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் எவ்வாறு அமையப்போகின்றன என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்றே.
சிங்களம் 2006 இல் விடுதலைப் புலிகளின் ஆட்சி எல்லைகளை நோக்கி தனது வலிந்த தாக்குதல்களை தொடுத்தது.
திருகோணமலையின் சம்பூர் பகுதியை நோக்கி மேற்கொள்ளப்பட்ட அவ்வகை போர் நகர்வுகளை படிப்படியாக கிழக்கு தழுவியதாக மாற்றியது.
இறுதியில் கிழக்கின் கணிசமான பகுதிகளிலிருந்து புலிகளை வெளியேற்றும் போர் நடவடிக்கைளில் சிங்களம் வெற்றி பெற்றது.
இன்னொரு நாட்டின் நிலப்பகுதியை கைப்பற்றியது போன்ற வெற்றிக்களிப்பில் கிழக்கு வெற்றியை விழாவாகக் கொண்டாடியது.
ஏலவே கருணா விடயத்தால் புலிகளின் எண்ணிக்கை பலம் பாதிப்படைந்திருந்த நிலையில் புலிகளுக்கும் கிழக்கிலிருந்து பின்நோக்கி நகர்வதனைத்தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை.
ஒரு மரபுவழி விடுதலை இராணுவத்தைப் பொறுத்தவரையில், அதற்கு, ஆட்பலமும் வளங்களும்தான் அடிப்படையானவைகளாகும்.
வலுவானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான படை நடவடிக்கைளால் இழந்த நிலப்பகுதிகளை புலிகளால் மீளவும் கைப்பற்றிக்கொள்ள முடியும்.
எனவே, புலிகளின் பின்நோக்கிய நகர்வுகளை இவ்வாறன பின்புலத்தில்தான் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
கிழக்கில் தனக்கு ஏற்பட்ட சாதகமான நிலைமைகளால் உற்சாகமடைந்த சிங்களம் உடனடியாகவே வடக்கு நோக்கியும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
கிழக்குப்போன்று வடக்கு நிலைமைகள் இல்லை என்பதை நன்கு அறிந்துவைத்திருக்கும் சிங்களம், ஆரம்பத்திலிருந்தே விடுதலைப் புலிகளை ஒரு வரையறைக்குள் (ஊழவெயinஅநவெ) முடக்கி தாக்கும் போரியல் தந்திரோபாயத்தையே பிரயோகித்தது.
விடுதலைப் புலிகளின் பலமான கோட்டையான வன்னியின் மையப்பகுதியில் புலிகளின் பலத்தை முடக்கிவைப்பதன் மூலம் அவர்களின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைளை கட்டுப்படுத்தி சிறிது சிறிதாக அவர்களின் பல மையத்தை நோக்கி முன்னேறி அழிப்பதே இன்று சிங்களம் கைக்கொள்ளும் போரியல் தந்திரோபாயமாக இருக்கின்றது.
ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு பலமானதொரு விடுவிக்கப்பட்ட பிரதேசம் எப்போதுமே தேவை என்ற நிலையில் அதனைச்சுற்றியே புலிகள் தமது பலமான படையணிகளை திரட்டி வைத்திருப்பர், அதனை ஒரு கட்டத்திற்கு மேல் சிதறவிட மாட்டார்கள் என்பதே சிங்களத்தின் இராணுவக்கணிப்பாக இருக்கின்றது.
ஆனால் இந்த மதிப்பீடு எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒரே மாதிரியான தாக்கத்தைக்கொடுக்கும் என்று சிங்களம் கணிக்குமானால் அது சிங்கள மூளையில் உள்ள கோளாறாகும்.
சிங்களத்தின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவே மன்னார் களமுனைகளிலும் சில சிங்கள முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
எனவே இந்த பின்புலத்தில்தான் விடுதலைப் புலிகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
ஒரு விடுதலைப் போராட்டம் என்பது கோடம்பாக்க தமிழ் சினிமா அல்ல. அடுத்து என்ன திகில் சம்பவம் நடக்குமென்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதற்கு.
சரியான காலநிலை, எதிர்த்தரப்பின் இராணுவ தந்திரோபாயங்கள் குறித்த துல்லியமான மதிப்பீடுகள் என்பவற்றின் அடிப்படையில்தான் ஒரு விடுதலை அமைப்பு, தனது நகர்வுகளை முன்னெடுக்கும்.
அப்படி பார்த்தால் புலிகளும் தமது நடவடிக்கைளை துல்லியமான மத்திப்பீட்டின் கீழ் முன்னெடுப்பர்.
அது என்ன? எவ்வாறு அமையும் என்றெல்லாம் நாம் இப்போது ஊகங்கள் எதனையும் செய்ய முடியாது. ஆனால் கடந்த கால வரலாற்று அனுபவத்தின் வழி நோக்குவோமானால் அப்படியொன்று நடந்தே தீரும்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நாம் மறக்காமல் இருந்தால் சரி.
நன்றி: தினக்குரல் (27.07.08)
Sunday, 27 July 2008
புலிகள் அடுத்து என்ன செய்யப் போகின்றார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment