Tuesday, 15 April 2008

இன்போசிஸ் நிறுவனத்தில் நிகர லாபம் ரூ.4,659 கோடி; டிவிடெண்ட் அறிவிப்பு

மும்பை : சாப்ட்வேர் தொழிலில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான இன்போசிஸ் டெக்னாலஜிஸ், 2007 - 08 நிதி ஆண்டில் ரூ.4,659 கோடி நிகர லாபம் சம்பாதித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டு பெற்ற லாபத்தை விட 20.82 சதவீதம் அதிகம். மார்ச் 31 உடன் முடிவடைந்த வருடத்தில் அந்த நிறுவனத்தின் மொத்த நிகர லாபம் ரூ.3,856 கோடி என்று மும்பை பங்கு சந்தையில் தெரிவித்திருக்கிறது. மொத்த வருமானம் ரூ.14,265 கோடியில் இருந்து ரூ.17,396 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதனால் அதன் பங்குதாரர்களுக்கு, ஒவ்வொரு 5 ரூபாய் பங்கிற்கும் ரூ.7.25 ( 145 சதவீதம் ) டிவிடெண்ட் வழங்குகிறது. இது தவிர விஷேச டிவிடெண்ட் ஆக, ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.20 ம் ( ரூ.5 முக மதிப்புள்ள பங்குக்கு 400 சதவீதம் ) கொடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. மேலும் 2009 நிதி ஆண்டில் இருந்து லாபத்தில் 30 சதவீதத்தை டிவிடெண்ட் ஆக கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். மார்ச் 31உடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸின் நிகர லாபம் ரூ.1,144 கோடியில் இருந்து ரூ.1,249 கோடியாக அதிகரித்திருக்கிறது. மொத்த வருவாய் ரூ.3,891 கோடியில் இருந்து ரூ.4,681 கோடியாக அதிகரித்திருக்கிறது. இன்று காலை நேர வர்த்தகத்தில் இன்போசிஸின் பங்கு மதிப்பு ரூ.1,440 ஆக இருந்தது.

No comments: