Tuesday, 15 April 2008

ஷ்ரீலங்காவில் விரைவில் அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பயிற்சி?

ஷ்ரீலங்காவில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டு. மூன்றாவதாக ஒரு கட்சி உருவாக முயற்சிசெய்தாலும் பிரதான கட்சிகளின் வசிய மந்திரங்களுக்கு உள்ளாகியோ என்னவோ அந்தக்கட்சி பிரதான கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதுடன் மட்டும் நின்றுவிடுகிறது. மற்றுமொரு காரணம் யுத்தம் பற்றி பிரதான இரண்டு கட்சிகளிடையேயும் இரண்டு விதமான நிலைப்பாடுகள் இருப்பதாகும். ஒரு கட்சி உயிருடனுள்ள படைவீரர்களைப் பற்றிப் பேசும்போது மற்றக்கட்சி உயிரிழந்த படைவீரர்கள் பற்றிப் பேசுகிறது.

ஒரு கட்சி யுத்த ஆயுதங்களை இரகசியமாகக் கொள்வனவு செய்வதற்கு ஆதரவாகப் பேசும்போது மற்றக்கட்சி அந்தத் தகவல்களை வெளிப்படுத்துகிறது. ஒரு கட்சி எதிரிகளை அழிப்பது பற்றிப்பேசும்போது மற்றக் கட்சி அதனால் ஏற்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசுகிறது. இந்த விடயங்களை சிந்தித்துப் பார்க்கும்போது செய்யப்பட வேண்டிய முக்கியமான ஒரு காரியமாகத் தென்படுவது இதுதான். அதாவது, அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும். அதுவே, கட்சிகளின் போக்குக்கும் ஏற்றது காலத்துக்கேற்றதுமான ஒரு நடவடிக்கை எனக் கருதலாம்.

அவ்வாறு அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருளாதார ரீதியிலும் ஒழுங்கமைப்பு ரீதியிலும் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், அரசியல்வாதிகள் பெறும் சம்பளம், உணவு, படிகள் மற்றும் கொடுப்பனவுகளைப் பார்த்தால் அவ்வாறு அவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவது பொருளாதார மற்றும் ஏற்பாட்டு ரீதியில் கஷ்டமாக இருக்காது. மேலும், அரசியல்வாதிகளின் உயரம், மார்பு அகலம் மற்றும் உடலமைப்புகள் கூட பெரிய பிரச்சினையாக இருக்காது.

இவ்வாறு அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதால் அவர்களுக்கான பாதுகாப்புச் செலவினமும் குறைவடையும். மேலும் சில அரசியல்வாதிகள் பாதாளக் கோஷ்டியினரையே தமது இரகசியப் பாதுகாப்புக்கு நியமித்துள்ளதால் அந்தப் பாதுகாப்புத் தேவையும் இராணுவப் பயிற்சிபெறும் அரசியல்வாதிகளுக்கு இருக்காது.

லங்காதீப :பொது விமர்சனப்பகுதி: 07.04.2008

Thanks: thinakural

No comments: