Tuesday, 15 April 2008

அநுராதபுரம் வான் படைத்தளம் மீதான புலிகளின் தாக்குதல் தொடர்பாக ஐவர் குழு விசாரணையில் புதிய தகவல்கள்

சிறிலங்கா மாவட்டத்தில் உள்ள அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் 21 பேரடங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணி தாக்குதல் தொடுத்த போது முகாமிலிருந்த வான்படையின் ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பு உரிய இடத்தில் இருக்காமையால் படையினருக்கு உரிய ஆயுதங்களை வழங்க இயலாமல் போய்விட்டது என்று சிறிலங்காவின் ஐவரடங்கிய விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது.

20 நிமிடங்களின் பின்னரே ஆயுதக்களஞ்சியத்தின் திறப்பைக் கண்டுபிடித்துள்ளனர் எனவும் அந்த விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

அந்த ஐவரடங்கிய விசாரணைக்குழுவில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட, மேஜர் ஜெனரல் எம்.ஏ.எம்.பீரிஸ், ரியர் அட்மிரல் ஜே.எஸ்.கொலம்பகே, எயார் வைஸ் மார்சல் ரவி அருந்தவநாதன், மேஜர் ஜெனரல் பீ.எல்.பெர்ணான்டோ மற்றும் கொமாண்டர் கே.ஏ.எஸ்.பெர்ணான்டோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தேநீர் இடைவேளையின் போது விடுதலைப் புலி உறுப்பினர்கள் அநுராதபுரம் வான் படைத்தளத்திற்குள் புகுந்துள்ளதாகக் குறிப்பிடும் விசாரணைக் குழுவானது விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் முகாமின் மீது குண்டுகளை வீச வந்தபோது முகாமிலிருந்த வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் செயற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் வான்படைத் தளப் பிரதேசத்தில் வெடிச்சத்தங்கள் கேட்டவுடனேயே கவச வாகனத்துடன் உடனடி தாக்குதல் அணியொன்று அங்கு விரைந்துள்ளது.

அந்தக் குழுவை கடெட் அதிகாரியொருவர் வழி நடத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

குறைந்தபட்சம் அந்த வாகனத்தில் தகவல் பரிமாற்றக் கருவியொன்று கூட இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தாக்குதல் அணிக்கு அனுபவம் வாய்ந்த அதிகாரியொருவர் இருக்க வேண்டியுள்ள போதிலும் அவ்வாறான ஒருவர் இருக்கவில்லை என்றும் அந்த விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

வான் படைத்தளத்தின் 3 இடங்களில் இருந்த படையினர், விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரவேசத்தைத் தடுத்து நிறுத்த முடியாது போய்விட்டதால் விடுதலைப் புலிகளினால் எம்.ஐ.-24 ரக தாக்குதல் உலங்குவானூர்தி மீது தாக்குதல் நடத்த முடியுமாக இருந்ததாகவும் காவலுக்கு இருந்த அந்தப் படையினர் போதியளவு அனுபவம் உள்ளவர்கள் அல்ல என்றும் அந்த விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப் புலிகளின் 3 குழுக்கள் வந்துள்ளதாகவும் மூன்றாவது குழுவானது தந்திரிமலையூடாக வன்னிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த ஐவரடங்கிய விசாரணைக் குழுவின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைக் குழுவானது வான்படை மற்றும் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் 18 பேரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

விடுதலைப் புலிகள் அநுராதபுரம் தளத்தின் மீது தாக்குதல் தொடுத்த போது வானூர்தி ஓட்டுதல் அனுபவம் கொண்ட குரூப் கப்டன் ஒருவரே முகாமின் கட்டளையதிகாரியாக செயற்பட்டுள்ளார் என்றும் அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

thank you:puthinam

1 comment:

ttpian said...

aha puthiya kandupidippu:
mahindha enge poi,enna konduvanthalum,tigers,adhai meendu varuvarhal!