Wednesday, 23 April 2008

55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: சென்னையில் ரூ.1,500 கோடியில் தகவல் தொழில்நுட்ப பொருளாதார மண்டலம் கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை தரமணியில் 55 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.1,500 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சிறப்பு பொருளாதார மண்டலம்

சென்னையில் தொழில்நுட்ப மையமாகத் திகழும் ராஜீவ்காந்தி சாலையில் (பழைய மாமல்லபுரம் சாலை) அமைந்துள்ள தரமணியில் ஏறத்தாழ 26.64 ஏக்கர் நிலப்பரப்பில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), கட்டுமானத் தொழிலில் முன்னோடி நிறுவனமான டி.எல்.எப் நிறுவனத்துடன் இணைந்து புதிய தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.

இதை அமைப்பதற்கான கூட்டுத்துறை ஒப்பந்தத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி முன்னிலையில், அரசு சார்பில் டிட்கோ நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராமசுந்தரம் மற்றும் டி.எல்.எப் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் கே.பி.சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

55 ஆயிரம் பேருக்கு வேலை

ரூ.1,500 கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்த தகவல் தொழில்நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கட்டுமானப் பணிகள் மொத்தம் 45 லட்சம் சதுர அடி பரப்பில் அமையும். முதல் கட்ட கட்டுமானப் பணிகள் 25 லட்சம் சதுர அடி பரப்பில் நிறைவேற்றப்பட்டு, 2009-ம் ஆண்டில் முடிவடையும். எஞ்சிய 20 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட 2-ம் கட்ட கட்டுமானப் பணிகள் 2011-ல் முடிவடையும். இந்தத் தகவல் தொழில் நுட்பச் சிறப்புப் பொருளாதார மண்டலம் 45 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளையும், 10 ஆயிரம் இளைஞர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, நிதித் துறைச் செயலாளர் ஞானதேசிகன், தொழில்துறைச் செயலாளர் எம்.எப்.பரூக்கி, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் சந்திரமவுலி, டி.எல்.எப் நிறுவனத்தின் முதுநிலை ஆலோசகர் ஆர்.என்.சிங், செயல் இயக்குனர் சுப்பிரமணியன், முதுநிலை துணைத் தலைவர் ரமேஷ் கே.சுவாமி, ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments: