சிறிலங்கா இராணுவ நடவடிக்கையால் 600 சிறார்கள் உட்பட 12 ஆயிரம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மடு பிரதேசத்திலிருந்து 12,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மடுவுக்கு வடக்காக ஏ-32 வீதியில் மன்னார்- பூநகரி நெடுஞ்சாலையை அண்மித்த கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்களுக்கான தற்காலிகக் கூடாரங்கள், குடிநீர் உள்ளிட்ட அவசர அடிப்படைத் தேவைகளை புனர்வாழ்வுக் கழகம் செய்து வருகிறது.
ஐ.நா., அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுகாதாரம் மற்றும் அடிப்படை உதவிகளை செய்து வருகின்றன.
வட்டக்கண்டல் அரசு தமிழ்க்கலவன் பாடசாலை, அடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலை ஆகியவற்றைச் சேர்ந்த 600 சிறார்கள் தேவன்பிட்டிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இரண்டு கட்டடங்களில் 180 சிறார்களுடன் தேவன்பிட்டி பாடசாலை இயங்கி வரும் நிலையில் புதிய சிறார்களுக்குரிய அடிப்படை வசதிகளுக்கு தேவன்பிட்டி பாடசாலை போராடி வருகிறது.
இடம்பெயர்ந்த சிறார்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவன்பிட்டி பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment