Sunday 6 April 2008

இன்று அமைச்சரவை மாற்றம் - கனிமொழிக்குப் பதவி?

Kanimozhi
டெல்லி: மத்திய அமைச்சரவையில் இன்று மாலை மாற்றம் செய்யப்படுகிறது. முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாகவே அமைச்சரவையில் மாற்றம் வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்துப் பேசினார். இதையடுத்து இன்று மாலை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

இளம் எம்.பிக்கள் சிலருக்கு இம்முறை அமைச்சரவையில் இடம் கிடைக்கக் கூடும் எனத் தெரிகிறது. அதில் முக்கியமானவராக பேசப்படுபவர் கனிமொழி.

கனிமொழி ராஜ்யசபா எம்.பி. ஆவதற்கு முன்பே அவர் அமைச்சராகக் கூடும் என்ற பேச்சு தமிழகத்தில் கிளம்பி விட்டது. பாமகவும் கூட இதை தனது பத்திரிக்கையில் செய்தியாகவும் வெளியிட்டது. ஆனால் அதை முதல்வர் கருணாநிதி மறுத்திருந்தார்.

இந்த நிலையில் கனிமொழியின் பெயர் மறுபடியும் அமைச்சரவை மாற்ற செய்தியில் அடிபடுகிறது. ஆனால் இம்முறை கனிமொழிக்கு அமைச்சர் பதவி கண்டிப்பாக கிடைக்கும் என்று டெல்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

திமுகவுக்கு மேலும் ஒரு அமைச்சர் பதவி வேண்டுமானால் தற்போது உள்ள ஒரு அமைச்சரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் முதலில் கூறப்பட்டதாம். ஆனால் அதற்கு திமுக தயங்கியது. இதனால்தான் கனிமொழி அமைச்சராவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆனால் தற்போது திமுகவுக்கு கூடுதலாக ஒரு அமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் சம்மதித்துள்ளதாம். இதையடுத்தே கனிமொழி அமைச்சராவது உறுதி என்று கூறப்படுகிறது.

கனிமொழி தவிர மறைந்த முன்னாள் அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர்ஆதித்யா சிந்தியா, உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஜிதின் பிரசாத், சச்சின் பைலட் ஆகிய இளம் காங்கிரஸ் எம்.பிக்களும் அமைச்சராகக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இதுதவிர மேலும் இரு உ.பி. எம்பிக்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம்.

அதேசமயம், மத்திய அமைச்சர் சுரேஷ் பச்சோரி, எம்.வி.ராஜசேகரன் ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விலகுகின்றனர்.

சுரேஷ் பச்சோரி மத்தியப் பிரதேசத்தைச் சேர்நதவர். அங்கு விரைவில் தேர்தல் வரவுள்ளது. எனவே பச்சோரி அங்கு தேர்தல் பொறுப்பில் அமர்த்தப்படக் கூடும்.

இவர்கள் தவிர தெலுங்கானா எம்.பி. ஒருவருக்கும், பீகாரில் லாலு கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

No comments: