Sunday, 6 April 2008

மனைவியின் நிறத்தை கூறி திட்டுவது தண்டனைக்குரிய குற்றம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

கருப்பான மனைவியின் உடல் நிறத்தை சுட்டிக்காட்டி மன உளைச்சலை ஏற்படுத்துவது மிகவும் கொடுமையான குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனைவியை `கருப்பி' என்று திட்டி, தற்கொலைக்கு தூண்டியவரின் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

மதுரையை சேர்ந்தவர்

தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்தவர் பரூக் பாட்சா. இவருக்கும் செய்யது பாத்திமா என்ற பெண்ணுக்கும் 1999-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாத்திமா கருப்பாக இருந்ததால், அவரை `கருப்பி' என்று பாட்சா திட்டி வந்துள்ளார். மேலும் அவரது நிறத்தையும் தோற்றத்தையும் சுட்டிக்காட்டி கேவலமாக நடத்தினார்.

இதனால் மனம் உடைந்த பாத்திமா, திருமணமான இரண்டு மாதங்களுக்குள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் அளித்த மரண வாக்குமூலத்தில், `தனது நிறத்தை சுட்டிக்காட்டி தனது கணவர் திட்டியதை' போலீசாரிடம் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு

இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை செசன்சு கோர்ட்டு பரூக் பாட்சாவுக்கு, `மனைவியை தற்கொலை செய்ய தூண்டிய குற்றத்துக்காக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்தது. இந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.

இதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் பரூக் பாட்சா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், ஜே.எம்.பஞ்சால் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு பெஞ்சு விசாரித்தது. இந்நிலையில், பரூக் பாட்சாவுக்கு அளித்த தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

உடல் ரீதியான துன்பத்தை விட

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெண்ணின் நிறத்தையோ அழகையோ குறிப்பிட்டு அவமானப்படுத்தும் விதத்தில் கருத்துகளை தெரிவிப்பது, உடல் ரீதியாக துன்புறுத்துவதை விட கொடுமையானது. அதுவும், எளிதில் உணர்ச்சி வசப்படும் ஒரு பெண்ணுக்கு மிகுந்த துன்பத்தை தரும்.

குற்றவாளியின் மனைவியை தற்கொலைக்கு தூண்டும் அளவுக்கு மனரீதியில் கொடுமைபடுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவியின் அழகு மற்றும் நிறத்தை சுட்டிக்காட்டி பேசியதை மனரீதியிலான கொடுமையாக கருதக் கூடாது என்ற குற்றவாளியின் வாதத்தை ஏற்க முடியாது.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தோற்றத்தை வைத்து

சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, மாநிலங்களின் அடிப்படையிலோ, பாலின அடிப்படையிலோ ஒருவரை அவமானப்படுத்துவதை சட்டம் தடுக்கிறது. தற்போது, சுப்ரீம் கோர்ட்டு அளித்த இந்த தீர்ப்பால் ஒரு புதிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது.

ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ அவரது தோற்றத்தை வைத்து குறை கூறி அவமானப் படுத்தினாலும் தண்டனைக்குரிய குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: