Sunday, 20 April 2008

காதலர்களுக்காக ஒரு தியேட்டர்!

Abhirami Mall
சென்னையில் வேக வேகமாக திரையரங்குகள் மூடப்பட்டு வந்த நேரம். பல திரையரங்குகள் குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறின. இன்னும் சிலர் நூறாண்டு பழமையும் பெருமையும் மிக்க திரையரங்குகளை இடித்துவிட்டு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களை உருவாக்கினர்.

சித்ரா, ஆனந்த், அலங்கார், வெலிங்டன், கெயிட்டி போன்ற பெரிய தியேட்டர்கள் இடிக்கப்பட்ட நேரத்திலும், அசராமல் நின்று, தியேட்டர் தொழிலை நல்ல லாபத்துடன் நடத்த முடியும் என்று நிரூபித்தவர் அபிராமி ராமநாதன்.

இவர்தான் இந்தியாவிலேயே முதல்முறையாக ஐந்து நட்சத்திர திரையரங்குகளை உருவாக்கினார். சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் தனது அபிராமி திரையரங்க வளாகத்தை முற்றிலுமாகப் புதுப்பித்து ஷாப்பிங் வசதி, உணவகங்கள், பனி உலகம், சிறுவர் விளையாட்டு மையம், மினி கார் விளையாட்டு என ஏராளமான புது அம்சங்களுடன் ஒரு பொழுதுபோக்கு மையமாக அபிராமி வளாகத்தை மாற்றி அமைத்தார்.

இன்றைக்கு ஸ்பென்ஸர் பிளாஸாவுக்கு நிகராக இளைஞர்கள் கூடும் முக்கிய மையமாகத் திகழ்கிறது அபிராமி மெகா மால்.

இத்துடன் நின்றுவிடாமல், வருகிற கூட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் புதிய உத்திகளைச் செயல்படுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளார் ராமநாதன்.

இந்த வளாகத்தில் 4 திரையரங்குகள் உள்ளன. அனைத்திலும் சொகுசு இருக்கைகள் மற்றும் நவீன ஒலி வசதிகளை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

முதல் கட்டமாக சக்தி அபிராமி திரையரங்கில் படுத்துக்கொண்டே படம் பார்க்கும்படியான இருக்கைகள் பொருத்தப்பட்டன. சவுண்ட் சிஸ்டம் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டது. ஸ்வர்ண சக்தி அபிராமி என்று பெயர் சூட்டப்பட்ட இத்திரையரங்கை சமீபத்தில் துவக்கி வைத்தவர் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இப்போது அன்னை அபிராமி திரையரங்கும் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ அன்னை அபிராமி எனும் பெயரில் நாளை முதல் செயல்படும் இத்திரையரங்கை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று காலை துவக்கி வைத்தார். தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொளண்டார்.

இத்திரையரங்கின் சிறப்பே காதலர்களுக்கெனவே ஸ்பெஷலாக அமைக்கப்பட்டுள்ள லவ்பக் இருக்கைகள்தான். ஆம், முன்பு தனித்தனியாகப் படுத்தபடிதான் படம் பார்க்க முடியும். ஆனால் ஸ்ரீ அன்னை அபிராமி திரையரங்கில் காதலர்கள் ஜோடியாகப் படுத்தபடியே படம் பார்த்து மகிழலாம் (பார்க்க மட்டும்தான் பெர்மிஷன்!!). இதுபோன்ற 24 இருக்கைகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன.

இதே போல அபிராமி மற்றும் பால அபிராமி திரையரங்குகளும் புதுப்பிக்கப்பட உள்ளனவாம்.

இதுகுறித்து அபிராமி ராமநாதன் தட்ஸ்தமிழுக்கு அளித்த பேட்டியில்,இந்தியாவில் முதல் பைவ்ஸ்டார் சொகுசு இருக்கைகளை கொண்ட திரையரங்கம் ஸ்வர்ண சக்தி அபிராமிதான். இப்போது இன்னும் ஒருபடிமேலே போய், ஜோடி ஜோடியாக வரும் காதலர்கள் வசதியாகப் படம் பார்க்கும் வகையில் லவ்பக் இருக்கைகளை ஸ்ரீஅன்னை அபிராமியில் ஏற்படுத்தியிருக்கிறோம்.

பொதுவாக இம்மாதிரி இருக்கைகளில் பிரைவசி இருக்காது. ஆனால் இப்போது நாங்கள் ஏற்படுத்தியுள்ள லவ்பக் இருக்கைகளில் அமர்ந்து படம் பார்க்கும் ஜோடிகளுக்கு பிரைவசி இருக்கும்.

படம் பார்க்கும் அனுபவத்தை இன்னும் சுவாரஸ்மாக்கும் எனது முயற்சியின் ஒரு அங்கம்தான் இதெல்லாம், என்றார். இதைத் தவிர, அபிராமி, பால அபிராமி திரையரங்குகளை புதுப்பிக்கும் திட்டமும் உள்ளதாம்.

ஆனால் அதுகுறித்து இப்போது எதுவும் சொல்லமுடியாது. எதிர்காலத்தில் இன்னும் நிறைய புதுமைகளைச் செய்யும் எண்ணம் உள்ளது என்கிறார் ராமநாதன்.

அபிராமி வளாகத்தில் ஒரு திறந்தவெளி டிரைவ் இன் திரையரங்கம் அமைப்பது குறித்து ஏற்கெனவே கூறியிருந்தார் ராமநாதன். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இதெல்லாம் எதிர்காலத்தில் செய்யப்பட உள்ள திட்டம். ஒவ்வொன்றாகத்தான் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

No comments: