Thursday, 24 April 2008

சிறிலங்காவைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்றம் முன்பாக தமிழ் மக்களின் கண்டன ஒன்றுகூடல்


சிறிலங்கா அரசாங்கத்தினால் அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் உணர்வெழுச்சியுடனான கண்டன ஒன்றுகூடல் நேற்று நடைபெற்றது.

பிரான்சின் ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் நேற்று புதன்கிழமை மாலை 4:00 மணியளவில் அல்சாஸ் வாழ் தமிழ் மக்கள் இக்கண்டன ஒன்றுகூடலை நடத்தினர்.

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தவதற்காக இருந்த குரலை நசுக்கி, தமிழ் மக்கள் அகதிகளாகவும், அநாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளனர் என்றும் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் முன்னைய கிழக்கு ஐரோப்பிய நாடு (ஸ்லோவோக்கியா) அண்மையில் பெருமளவு அழிவு ஆயுதங்களை வழங்கியமை தொடர்பிலான விசனத்தையும் இக்கண்டன ஒன்றுகூடலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்தினர்.







ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பிரான்ஸ் ஊடகவியலாளர்கள், பிரான்ஸ் மதகுருமார்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டு தமது கவலையைத் வெளிப்படுத்தினர்.

நூற்றுக்கும் அதிகமான தமிழ் மக்கள் இந்த கண்டன ஒன்றுகூடலில் பங்கேற்றன. இக்கண்டன ஒன்றுகூடல் மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது.






No comments: