Thursday, 24 April 2008

மன்னார் முன்நகர்வுகள் முறியடிப்பு- 20 சிறிலங்காப் படையினர் பலி


மன்னாரில் 24 மணி நேரத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரு பெரும் முன்நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். படையினரின் கவச ஊர்தி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சிறிலங்காப் படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை முன்நகர்வை மேற்கொண்டு புலிகளின் முன்னரணை கைப்பற்றிய நிலையில் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தி படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தி விரட்டியடித்துள்ளனர்.

மன்னாரில் திருக்கேதீச்சரம் சேத்துக்குளம் பகுதியில் இருந்து இன்று வியாழக்கிழமை அதிகாலை 5:45 மணிக்கு சிறிலங்காப் படையினர் வேட்டையாமுறிப்புக்குளம் நோக்கி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடுதலைப் புலிகளின் முன்னரண் நோக்கி முன்நகர்ந்தனர்.

செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்ந்து விடுதலைப் புலிகளின் 500 மீற்றர் அகல முன்னரண் பகுதியை படையினர் கைப்பற்றிய நிலையில் விடுதலைப் புலிகள் தீவிரமான பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற தாக்குதலில் படையினரை விடுதலைப் புலிகள் அவர்களின் பழைய நிலைகளுக்கு விரட்டியடித்து தமது பகுதியை மீட்டனர்.இம் முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவு படையினர் காயமடைந்தனர்.

மன்னார் பாலைக்குழிப்பகுதியிலிருந்து அடம்பன் நோக்கி நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. பாலைக்குழிப்பகுதியில் இருந்து நேற்று பிற்பகல் 2:30 மணிக்கு சிறிலங்கா படையினர் அடம்பன் நோக்கி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் கவச ஊர்திகள் சகிதம் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.

இம் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை தீவிரமாக நடத்தினர். இதனையடுத்து படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர். இதில் படையினரின் கவச ஊர்தி ஒன்று சேதமாகியுள்ளது. படைத்தரப்புக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

No comments: