Friday, 11 April 2008

`ரோபோ' படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன் நடிகை ஐஸ்வர்யாராய் பேட்டி

`ரோபோ' படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாக நடிகை ஐஸ்வர்யாராய் கூறி உள்ளார்.

`ரோபோ' படம்

ஷங்கர் டைரக்ஷனில் ரஜினிகாந்த் நடிக்கும் `ரோபோ' படத்தில் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து ஐஸ்வர்யாராய் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:-

எளிமையானவர்

ஷங்கர் டைரக்ஷனில் நான் நடித்த `ஜீன்ஸ்' படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அந்த படத்தின் மூலமும் ஷங்கரிடம் இருந்தும் நான் நிறைய கற்றுக் கொண்டேன். அதன்பிறகும் அவரும், ரஜினிகாந்தும் பல படங்களில் நடிப்பதற்காக என்னை அணுகி இருக்கிறார்கள். `பாய்ஸ்' படம் தவிர மற்ற தனது எல்லா படங்களிலும் நடிக்குமாறு ஷங்கர் என்னிடம் கேட்டு உள்ளார். ஆனால் அப்போது முடியாமல் போய் விட்டது.

ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர். அவருடைய கடந்த 4 அல்லது 5 படங்களில் நடிப்பதற்காக என்னை அணுகினார். ஆனால் அந்த படங்களில் நான் நடிக்க முடியாத நிலையில் இருப்பது பற்றி கூறிய போது அவர் தவறாக எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. அவருடைய இந்த அணுகுமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய நல்ல குணம், மனிதாபிமானம் பற்றி நிறைய பேச முடியும்.

ஆவலாக இருக்கிறேன்

இப்போது `ரோபோ' படத்தில் ஷங்கர் டைரக்ஷனில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறேன். ரஜினிகாந்த் ஓர் அபூர்வமான மனிதர். அவருடன் இணைந்து நடிக்க நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அவருடைய திறமை, அனுபவம் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அவருடன் நடிப்பது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்.

இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறி உள்ளார்.

No comments: