Friday, 11 April 2008

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தமிழர்களுக்கு சீட் இல்லை!

பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான பெங்களூர் மற்றும் கோலார் தங்கவயல் ஆகிய பகுதிகளில் ஒரு தமிழருக்கு கூட சீட் தரப்படவில்லை.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 3 கட்டங்களாக நடக்கிறது. தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில் பாஜ வேட்பாளர் முதல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளில் பெங்களூர் மாவட்டத்தில் உள்ள 28 தொகுதிகள், கோலார் தங்க வயல், சிமோகா, பத்ராவதி, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், ஹிரியூர் உள்ளிட்ட 30 தொகுதிகளில் தமிழர்களின் ஓட்டு வங்கி பெரியது.

பெங்களூரில் மாற்றியமைக்கப்பட்டுள்ள தொகுதி நிலவரப்படி குறைந்தது 5 தொகுதிகளிலாவது தமிழர்கள் வெற்றி பெற முடியும். சுமார் 6 தொகுதிகளில் தமிழர்கள் வெற்றி பெறும் நிலை இருந்தும் ஒரு இடத்தில் கூட தமிழர்களை நிறுத்தாமல் பாஜ புறக்கணித்துள்ளது.

பெங்களூரில் பாஜகவுக்கும் மற்ற மதத்தினருக்கும் சண்டை என்றால் உடனே களமிறங்குவதும், உயிர்விடுவதும் தமிழர்கள்தான். ஆனால் தமிழர்களுக்கு ஒரு சீட் கொடுக்காமல் பாஜக புறக்கணித்துள்ளது.

மாறாக, தமிழர்களை அதிகம் கொண்ட தொகுதிகளில் தமிழ் தெரிந்த, தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களும், பிறரும்தான் அக்கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலின்போதும் இப்படித்தான் தமிழர்களை நிறுத்தாமல் தமிழ் தெரிந்த பிற மொழியினரை நிறுத்தி தமிழர்களின் வாக்குகளைப் பெற்றது பாஜக. இந்த முறையும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தெலுங்கு பேசுபவர்களை களத்தில் இறக்கியுள்ளது.

ஒரு தமிழருக்குக் கூட சீட் கொடுக்காமல் ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது அக்கட்சியில் உள்ள தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூர் சாம்ராஜ் பேட்டை பாஜக பொதுச் செயலரும், குடிசைவாசிகள் நலப் பிரிவு தலைவருமான தனராஜ் கூறுகையில், கடந்த 15 ஆண்டுக்கும் மேல் கட்சியின் தீவிர தொண்டனாக கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறேன். வாஜ்பாய், அத்வானி போன்ற தேசிய தலைவர் இங்கு வரும்போது கட்சி பணிகளில் தீவிரமாக இருப்பது அனைவருக்கும் தெரியும்.

சிக்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டேன். இதற்காக இல.கணேசன், திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் மூலம் டெல்லி மேலிட தலைவர்களுடன் பேசப்பட்டது. ஆனால் சிக்பேட்டை தொகுதியில் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

அந்த தொகுதியில் 65,000 தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இதை மனதில் கொள்ளாமல் வேறு நபர்களை களத்தில் இறக்க முயற்சி செய்து வருகின்றனர். இது வேதனையளிக்கிறது. சிக்பேட்டை தொகுதியை தமிழருக்குத்தான் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஓகனேக்கல் விவகாரம் பெரிதாக பாஜக தலைவர் எடியூரப்பாதான் காரணம் என்று தமிழகத்தில் கருத்து நிலவி வருகிறது. தமிழக பாஜக தலைவர்கள் உள்பட அனைத்துக் கட்சியினரும் எடியூரப்பாவை கடுமையாக சாடியுள்ளனர். இந்தப் பின்னணியில் கர்நாடக தேர்தலில் தமிழர்களுக்கு பாஜக ஒரு சீட் கூட ஒதுக்காதது குறிப்பிடத்தக்கது.

No comments: