ஜோதிடர் மெüலீஸ்வரன்
சர்வதாரி புத்தாண்டு, வரும் ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை உதயாதி நாழிகை 42}52க்கு மாலை 6.28 மணிக்கு பூச நட்சத்திரம் 3ம் பாதத்தில், துலா லக்னத்தில் கடக ராசியில் பிறக்கிறது. ராகு}கேது பகவான்கள் திருக்கணித பஞ்சாங்கப்படி, சர்வதாரி ஆண்டு, சித்திரை மாதம் 18ம் தேதி, 30.4.2008 அன்று காலை 4 மணியளவில் அவிட்ட நட்சத்திரம் 3}ம் பாதம், மீன லக்னத்தில், கும்பம், சிம்மம் ராசிகளிலிருந்து முறையே மகரம், கடகம் ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இவர்கள் அங்கு ஒன்றரை வருடங்கள் சஞ்சரித்துவிட்டு, 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம், தனுசு, மிதுன ராசிகளுக்குப் பெயர்கிறார்கள். இங்கு ராகு}கேது பெயர்ச்சி மற்றும் சர்வதாரி ஆண்டின் ஒருங்கிணைந்த பலன்களைப் பார்ப்போம். அதற்கு முன்னர் ராகு}கேது பற்றிய சில விவரங்கள்...
படம் : எம்.என். ஸ்ரீநிவாசன்
அஸ்தாங்கத தோஷம் இல்லை!
நவக் கிரகங்களில் இயற்கையான ஒளியுடைய கிரகமான சூரிய பகவானைச் சுற்றியே மற்ற கிரகங்கள் செல்லுகின்றன. ராகு-கேது பகவான்களைத் தவிர மற்ற கிரகங்கள், சூரிய பகவானுக்கு அருகில் செல்லும்போது அஸ்தாங்கத தோஷம் (கருகிப் போதல்) அடைகிறார்கள். அதே நேரம் ராகு-கேது பகவான்கள் சூரிய பகவானுக்கு அருகில் சென்றாலும் அஸ்தாங்கத தோஷம் அடைவதில்லை. மாறாக சூரிய பகவானையே பலமிழக்கச் செய்கின்றார்கள். அப்படி நேரும் காலங்களில் கிரகணங்கள் உண்டாகின்றன.
சொந்த வீடுகளில்லா கிரகங்கள்!
கரும்பாம்பு என்கிற ராகு பகவானும், செம்பாம்பு என்கிற கேது பகவானும் "சாயா (நிழல்) கிரகங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. அவர்களுக்கு மற்ற 7 கிரகங்களுக்கு இருப்பதுபோல் சொந்த வீடுகள் கிடையாது. அதேநேரம் அவர்கள் எந்த வீட்டில் (ராசியில்) இருக்கின்றார்களோ அந்த வீட்டையே தங்கள் வீடாக (ராசி) எண்ணிப் பலன் தருவார்கள். எந்தக் கிரகத்தால் பார்க்கப்படுகிறார்களோ, எந்தக் கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்களே, எந்தக் கிரக நட்சத்திர சாரத்தில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்களின் பலத்தையே கிரகித்துக் கொண்டு பலன் தருவார்கள்.
"சனிவத் ராகு, குஜவத் கேது'
ராகு பகவான் சனி பகவானின் குணத்தையும், கேது பகவான் குஜன் (செவ்வாய்) பகவானின் குணத்தையும் பிரதிபலிக்கிறார்கள். ஜாதகத்தில் சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவானின் சுப, அசுப பலன்களை ராகு பகவானும் கேது பகவானும் அளிக்கவல்லவர்கள் என்பதை மேற்குறிப்பிட்ட வடமொழி வழக்கு உணர்த்துகிறது.
அனைத்து நாட்களிலும் ராகு-கேது பகவான்கள்!
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 7 நாட்கள் முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டது. ராகு}கேது பகவான்கள் பரமேஸ்வரனின் அனுக்கிரகத்தால் நவக்கிரக அந்தஸ்தை அடைந்தன. எனவே அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு தினத்தில் இருந்தும் ஒன்றரை மணிகளாக இரண்டு பாகங்கள் பிரிக்கப்பட்டு, ராகுவுக்கு ராகு காலமும், கேதுவுக்கு எம கண்டமும் வழங்கப்பட்டது. அதனால் அனைத்து நவக்கிரகங்களுக்கும் 21 மணிகள் என்று ஆயிற்று. இந்த ராகு காலம் மற்றும் எம கண்ட காலங்களில் சுபங்கள் விலக்கப்பட வேண்டும்.
ராகு பகவானின் குணங்கள், தன்மைகள், காரகங்கள்!
ஒருவருக்கு வைராக்கியம் உண்டாகவும், ஒருவர் நினைத்ததை முடிக்கவும் ராகு பகவானே காரணம். உலகம் முழுதும் சுற்றுவதற்கும், பல மொழிகளை அறிவதற்கும், அரசாங்கத்தில் உயர் பதவியை வகிப்பதற்கும், ஸ்பெகுலேஷன் துறைகளில் பெரும் பணம் சேர்ப்பதற்கும் இவரே காரணம் ஆவார். ராகு பகவானை யோககாரகன் மற்றும் பயணகாரகன் என்பார்கள். அதேசமயம் கடவுள் நம்பிக்கைக் குறைவு; மத விஷயங்களில் பற்றில்லாமை; வக்கிர குணங்கள்; பாப கர்மாவின் வெளிப்பாடு; மனோவியாதி போன்றவைகளையும் அசுபத் தன்மை பெற்று அமர்ந்துள்ள ராகு பகவான் கொடுப்பார். ராகு பகவான், தந்தை வழி பாட்டனாரைக் குறிப்பார்.
கேது பகவானின் குணங்கள், தன்மைகள், காரகங்கள்
ஒருவருக்கு பாபவிமோசனம் கிடைக்கவும், மோக்ஷம் அதாவது வீடு பேறு உண்டாகவும் கேது பகவானே காரணம். வேத வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் அவர் அறிவை வளர்ப்பார். எந்த ஒரு பிரச்சினைக்கும் விவேகமான தீர்ப்பை வழங்கும் அறிவைக் கொடுப்பார். அதேநேரம் ராசியில் கேது பகவானின் பலம் குறைந்தவர்கள் அடிக்கடி விபத்துக்களைச் சந்திக்க நேரிடும். தீயோர்களின் சகவாசத்தையும் உண்டாக்குவார். போதைப் பொருட்களுக்கு அடிமையாக்குவார். மேலும் உடலில் தோன்றும் புண், தீக்காயம் இவைகளுக்கும் கேது பகவானே காரணமாவார். இவர் தாய் வழி பாட்டனாரைக் குறிப்பார்.
நலம் தரும் ராசிகள்
லக்னத்திற்கு கேந்திரங்களான, 3, 6, 11 ஆம் ராசிகளில் ராகு-கேது பகவான்கள் பலம் பெற்றவர்கள். இந்த ராசிகளில் இருக்கும்போது அவர்கள் நற்பலன்களைச் செய்யக் கடமைப்பட்டவர்கள்.
கால சர்ப்ப யோகம்
ஒரு ஜாதகருக்கு, ராசி கட்டத்தில் அனைத்துக் கிரகங்களும் ராகு-கேது பகவான்களுக்கு இடையில் அமைந்து இருந்தால், அதற்கு "கால சர்ப்ப யோகம்' என்று பெயர். இவர்கள் ஏழையாகப் பிறந்தாலும் 32 வயதுக்குப் பிறகு அனைத்துச் சௌகர்யங்களையும் பெற்று, பெரும் சீமானாக வாழ்வார்கள்.
அஷ்ட மஹா நாக யோகம்
ராகு-கேது பகவான்கள், ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் இத்தகைய யோகம் உண்டாகிறது. ராகு தசை, கேது தசையில் சிறப்பான ராஜ யோகங்களை இது பெற்றுக் கொடுக்கும்.
சர்ப்ப தோஷம்
ராகு-கேது பகவான்கள் லக்னத்திற்கு 1, 2, 4, 5-ஆம் இடங்களில் இருந்தால் சர்ப்ப தோஷம் உண்டு என அறியலாம். இதற்கான சர்ப்ப சாந்தியை காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், ராமேஸ்வரம் திருப்புல்லாணி, திருப்பாம்புரம், நாகர்கோவில், கீழப்பெரும்பள்ளம் போன்ற தலங்களில் செய்யலாம். அல்லது நாகப் பிரதிஷ்டையின் மூலம் சர்ப்ப சாந்தி செய்யலாம்.
பரிகாரம்
ஆதிசேஷனின் அவதாரமே இலக்குவன். அவரை தனது உடன் பிறப்பாகக் கொண்ட சக்ரவர்த்தி திருமகனின் திருநாமமாகிய "ராம' நாமத்தை எப்போதும் ஜபித்து வந்தால் ராகு-கேது பெயர்ச்சியினால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் அனைத்தும் தூள்தூளாகிவிடும். அதேபோல் அஷ்ட மஹா நாகங்களையும் அடக்கியாள வல்லவர் பரமேஸ்வரன். அவருடைய திருநாமமாகிய, "நம:சிவாய' மந்திரத்தை நாள்தோறும் ஜபித்து வந்தால் இந்தப் பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய சுப பலன்கள் வளரும்! கெட்ட பலன்கள் நாசமாகிவிடும். இதில் சந்தேகம் எதுவும் வேண்டாம்.
மேஷம்
சர்வதாரி ஆண்டு, விஷுபுண்ய காலத் தொடக்கத்தில் "நிழல் கிரகங்கள்' என்று வர்ணிக்கப்படும் அதி பலவான்களான ராகு-கேது பகவான்களின் பெயர்ச்சி உண்டாகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 30.4.08 அன்று ராகு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான கும்ப ராசியிலிருந்து தொழில் ஸ்தானமான மகர ராசிக்கும், பூர்வ புண்ய ஸ்தானத்திலிருந்த கேது பகவான் சுக ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள்.
இந்த ஆண்டு இறுதிவரையில் குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்யஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றும், சனி பகவான் இச்சமயத்தில் பூர்வ புண்ய ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் பெருமளவுக்கு அனுகூலமான பலன்களே உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
குறிப்பாக தந்தை வழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். வயதான பெற்றோர்களுக்கு சஷ்டி அப்த பூர்த்தி (60 வயது முடிவு) போன்ற நிகழ்ச்சிகளை விமரிசையாகக் கொண்டாடுவீர்கள். குழந்தைகள் உங்களின் பேச்சை மதித்து நடக்கும் காலம் இது. குரு பகவானின் அருளால் பிதுரார்ஜித சொத்துக்களை அதிகம் கஷ்டப்படாமல் அடைவீர்கள்.
குருபகவானின் அருட்பார்வை உங்கள் ராசியின் மீது படிவதால் உங்கள் மன அழுத்தங்கள் குறைந்து, தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றல் உண்டாகும். உங்கள் எண்ணங்களில் பிடிப்புடன் இருந்து வெற்றியடைவீர்கள். பூர்வ புண்ய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி பகவானின் மேல் குரு பகவானின் பார்வை விழுவதால், சமூகத்தில் உங்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைத்து செல்வாக்கு மிகும்.
பொருளாதாரத்தில் சுபிட்சங்களைக் காண்பீர்கள். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த ராகுபகவான், உங்களை நீங்கள் ஈடுபட்டுள்ள துறையில் வெகுவாக முன்னேறச் செய்வார். உங்களின் செயலாற்றும் திறனை அனைவரும் பாராட்டுவர். உங்களிடம் உதவி செய்யும் மனப்பாங்கும், இரக்கக் குணமும் உயர்ந்து காணப்படும். அதேசமயம் சுகஸ்தானம் என்னும் நாலாமிடத்தில் அமர்ந்த கேது பகவான், இந்தக் கால கட்டத்தில் உங்கள் கைப் பொருளை இழக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவார். மேலும் திருடர் பயத்தையும் உண்டாக்குவார். அதனால் எவரிடமும் அனாவசியமான பேச்சு வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.
மேலும் இந்த ஆண்டு இறுதி வரையில் குருவின் சம்பந்தம் இல்லாமல் தனித்து இயங்கும் ராகு பகவானும் கேது பகவானும் உங்களின் சபல புத்தியைத் தூண்டுவார்கள். ஆன்மீகத்தில் இருந்த நாட்டத்தைக் குறைய வைப்பார்கள். கொடூர புத்தியையும் கொடுப்பார்கள். எனவே மனதை ஒரு நிலைப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை உங்கள் உடலில் சோம்பல் குடிகொண்டிருக்கும். கண், பல் சம்பந்த உபாதைகள் தோன்றி மறையும். மேலும் இந்தக் கால கட்டத்தில் கெட்ட சகவாசத்தைத் தவிர்க்கவும். நீங்கள் பேசாத வார்த்தைகளை நீங்கள் பேசியதாகத் திரித்து கோள் சொல்லி உங்களை வம்பில் மாட்டிவிடத் துடிக்கும் நண்பர்களிடமிருந்தும் (?) விலகி இருக்கவும். அதேசமயம் மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்குப் பெருமளவில் நலத்தையே கொடுக்கும் எனலாம்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் நன்றாக இருக்கும். விரும்பிய இட மாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும், உங்களின் பேச்சினால் சில அபவாதங்களையும் தேடிக் கொள்வீர்கள். அதே சமயம் சக ஊழியர்களுடன் சுமுகமான உறவுநிலை தொடருவதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறமைகளைக் கூட்டிக் கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். அவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, முன்னேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் சமயோஜித புத்தியினால், தேவையில்லாத பிரச்சினைகளிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொள்வீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வருமானம் உயரும். வங்கிக் கடன்கள் சரியான நேரத்தில் கிடைக்கும். வேகமாக விற்பனையாகும் பொருட்களை வாங்கி, புதிய யுக்தி மூலம் அதிக லாபத்திற்கு விற்பனை செய்வீர்கள். அதே சமயம் உங்களின் எண்ணங்கள், ரகசியத் திட்டங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி போட்டிகளைச் சமாளித்து வெற்றியடைவீர்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். இடைத்தரகர்களைத் தவிர்த்து, பொருட்களை உரிய விலைக்கு விற்பீர்கள். பழைய குத்தகைப் பாக்கிகளும் வசூலாகும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். கால்நடைகளாலும் நன்மை உண்டாகும்.
இந்த ராசி அரசியல்வாதிகள் நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துவிடுவார்கள். உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்தவர்கள், நண்பர்களாக மாறுவர். திட்டமிட்ட பணிகள் யாவும் குறித்த இலக்குகளை அடையும். உங்களின் நெடுநாளைய லட்சியம் ஒன்று பூர்த்தியாகும். அதேநேரம் தொண்டர்களை அரவணைத்துச் செல்லுங்கள்; அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள். வருமானம் சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். ரசிகர்களுக்காக சில செலவுகளையும் செய்வீர்கள். சக கலைஞர்களை அனுசரித்து நன்மையடைவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷம் காண்பார்கள். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அதே சமயம் உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றுங்கள்; ஆன்மீகத்தில் மனதைச் செலுத்துங்கள்.
மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். கேளிக்கைகளிலும், விளையாட்டிலும் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்வார்கள். பெற்றோர்கள் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். சுற்றுலா அழைத்துச் சென்று, உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்வர்.
------------------------------------------------------------------------------------------------
ரிஷபம்
இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்திலும், சுக ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்து வந்த ராகு-கேது பகவான்கள், 30.4.08 அன்று உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திலும், தைரிய ஸ்தானத்திலும் சஞ்சரிக்க இருப்பது சிறப்பான அம்சமாகும்.
உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் உங்கள் ராசியின் பாக்ய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகி, ராகு பகவானுடன் இணைகிறார். இந்தக் கால கட்டம் முழுவதும் சனி பகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானத்தில் அர்தாஷ்டம சனியாகவே சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் உள்ள ராகு பகவான், உங்கள் நண்பர்கள் செய்யும் சூழ்ச்சியிலிருந்து காப்பாற்றிவிடுவார். உங்களின் செயல்களை அனைவரும் பாராட்டும் படியும் செய்வார்.
சிலர் வெளியூர், வெளிநாடுகளுக்குப் பயணங்களை மேற்கொள்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்களும் வந்து சேரும். பாக்ய ஸ்தானத்தில் உள்ள ராகு பகவான் இந்த ஆண்டு இறுதி வரை குரு பகவானின் சம்பந்தம் இல்லாமல் இருப்பதால், பெரியோர் மற்றும் அனுபவஸ்தர்களின் அறிவுரைகளையும், ஆசிகளையும் பெற்று நடக்கவேண்டும். தெய்வபலத்தையும் கூட்டிக் கொள்ளவும். அரசாங்க வகையில் சில கஷ்டங்கள் உண்டானாலும், தைரிய ஸ்தானத்தில் உன்னத பலத்துடன் சஞ்சரிக்கும் கேது பகவான் உங்களை தொழிலில் முன்னேற வைப்பார். மேலும் புதிய தொழில்களில் நீங்கள் கால் பதிக்கவும் கூடும்.
ரசாயனத்துறை, ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் இருப்போருக்கு வருமானம் பெருகும். விலை மதிப்புள்ள பட்டு வஸ்திரங்கள், நவரத்தினங்கள் உங்களிடம் சேரும். வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீர்படும். மருத்துவச் செலவுகள் குறையும். இனிய சங்கீத கச்சேரிகளுக்குச் சென்று, உங்கள் பொழுதைக் கழிப்பீர்கள்.
இக்கால கட்டத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் குருபகவானின் பார்வை பெற்று அமர்ந்து இருப்பதால் உங்கள் சிந்தனா சக்தி கூடும். வாகனங்களில் செல்லும்போது விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பீர்கள். சுகமாகப் படுத்து உறங்க நவீன கட்டில், மெத்தைகளை வாங்குவீர்கள். அதேசமயம் ஆண்டு இறுதியில் நிலைமைகள் சற்று மாறும். சரியான நேரத்தில் உணவு உண்ண முடியாமல் போகும். அடுத்தவர்களின் பிரச்சினைகளை உங்களின் தலையில் போட்டுக் கொண்டு குழம்புவீர்கள். உங்களுக்கு கட்டுப்பட்டு உங்களின் சொல் கேட்டு நடந்த நண்பர்கள், சற்று விலகி நிற்பார்கள்.
குரு பகவான் சில சுப விரயங்களைக் கொடுத்தாலும், அதற்கேற்ப வருமானத்தையும் பெருக்குவார். உங்கள் ஆற்றல் கூடும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். சகோதர, சகோதரி வழியில் இருந்த பிணக்குகள் மாறும். இந்த ஆண்டு இறுதியில் ஏற்படப் போகும் குரு பெயர்ச்சி, உங்களுக்கு பெரியோர்களின் ஆசிகளை வாரி வழங்கும். பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் மாறி, சுபிட்சங்கள் உண்டாகும். குழந்தைகள் உங்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வர்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பர். எதிர்வரும் இடையூறுகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வர். சக ஊழியர்களின் உதவியோடு உங்கள் வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். அதே சமயம், வேலைகளைப் புரிந்துகொண்டு செய்யவும். எதையும் தட்டிக் கழிக்கும் எண்ணங்களைத் தள்ளி வைக்கவும். தாமதமானாலும் மேலதிகாரிகள் உங்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவார்கள். அதே சமயம் இடமாற்றக் கோரிக்கைகளை மேலதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டாம்.
இந்த ராசி வியாபாரிகளுக்கு லாபம் பெருகும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக அமையும். கூட்டாளிகள் உங்களிடம் நட்புடன் பழகுவர். பழைய சேமிப்புகளை முதலீடு செய்து வியாபாரத்தைப் பெருக்க நினைப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி சற்று கடுமையாக இருப்பினும், உங்கள் முயற்சி வெற்றியைக் கொடுக்கும்.
விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும். அதே சமயம் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலன் தராது. மற்றபடி உங்களின் விளைச்சலை சரியான நேரத்தில் சந்தைக்கு எடுத்துச் சென்று, வெற்றிகரமாக விற்று விடுவீர்கள். அரசு வகையில் நிர்ணயித்த மானியங்களும் உரிய நேரத்தில் உங்களை வந்தடையும். மற்றபடி விவசாயக் கூலிகளை அரவணைத்துச் செல்லவும். பழைய கடன்களை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கவும்.
அரசியல்வாதிகள் கடின உழைப்பை மேற்கொள்வர். வேலைகளைத் திட்டமிட்டு வகுத்துக் கொண்டு செயலாற்றுவர். கட்சி மேலிடத்திடம் சுமுகமான உறவை வைத்துக் கொள்வீர்கள். மற்றபடி உட்கட்சி விவகாரங்களில் உங்களின் ஆலோசனைகளைக் கேட்டாலன்றி வெளிப்படுத்த வேண்டாம். வழக்கு விவகாரங்களில் கவனத்துடன் ஈடுபடவும். கூடுமானவரை சட்டச் சிக்கல்களுக்குள் செல்ல வேண்டாம்.
கலைத்துறையினர், தங்கள் துறையின் நுணுக்கங்களை நன்றாகப் புரிந்துகொள்வார்கள். அவற்றை உரிய நேரத்தில் உபயோகித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களை சற்று தாமதத்துடன் முடித்துக் கொடுப்பீர்கள். உங்கள் சிந்தனைகள் தெளிவுடன் இருப்பதால், எத்தகைய கடினமான சூழ்நிலையையும் சரியாக உள்வாங்கிக் கொண்டு செயல்படுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்த்த அளவுக்கு நன்றாக இருக்கும். புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
பெண்மணிகள் "போதும்' என்கிற மனநிலையில் நிறைவைக் காண்பர். தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவர். அதேநேரம் உடல்நலம் சுமாராகவே இருக்கும். சகோதர, சகோதரி வழியில் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. உங்களின் பேச்சை அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ள நேரிடும். அதனால் அனாவசியப் பேச்சுக்களைத் தவிர்த்திடுங்கள்.
மாணவமணிகளைப் பொறுத்தவரை உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவர். உடல் வலிமை பெற உடற்பயிற்சிகளையும், மனவலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வர். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவர். விளையாட்டுகளிலும் சிறு வெற்றிகளைப் பெறுவர். தங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரக் காண்பர்.
------------------------------------------------------------------------------------------------
மிதுனம்
வரும் சர்வதாரி ஆண்டு, உங்கள் ராசியில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், உங்களின் முயற்சிகளில் தடை ஏற்பட்ட பிறகே வெற்றி பெற வைப்பார். உங்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகி நிற்பார்கள். எனவே உங்கள் செயல்களை நன்கு சிந்தித்த பிறகே செயல்படுத்தவும். சேமிப்புகளிலும், கையிருப்புப் பொருட்களிலும் கவனம் செலுத்துவீர்கள் என்றாலும், புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.
அதே சமயம் உங்கள் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் கேது பகவான், உங்களை கல்வி-கேள்விகளில் சிறக்க வைப்பார். குடும்பத்தில் உற்றார், உறவினர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். உங்களின் நூதன அணுகுமுறையை அனைவரும் பாராட்டுவார்கள். முகத்தில் வசீகரம் கூடும். வருமானம் வருவதுடன், புதிய பொறுப்புகளும் வந்து சேரும். உற்றார், உறவினர்களின் பிரச்சினைகளை உங்களின் வாக்கு சாதுர்யத்தால் தீர்ப்பீர்கள். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு பிரச்சினைகளிலிருந்தும் பெருமளவுக்கு விடுபட்டுவிடுவீர்கள். உங்களின் கவலைகளை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் பக்குவமும் உண்டாகிவிடும்.
தைரிய ஸ்தானத்தில் பலமாக அமர்ந்துள்ள சனி பகவான், உங்களுக்கு நிலையான புகழ் மற்றும் பெருமையை உண்டாக்கித் தருவார். உங்களின் செயலாற்றல் இரட்டிப்பாகும். இளைய சகோதர, சகோதரிகளின் மூலம் நலன்களைப் பெறுவீர்கள். உங்களின் மனோபலம் பெருகும். கலைகளில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டு, அதில் வெற்றியும் பெறுவீர்கள். கல்வியில் இருந்த இடையூறுகள் நீங்கும். உங்களுக்கு வர வேண்டிய கடன்கள் திரும்பி வரும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள், எடுத்த காரியங்களை சரியான நேரத்தில் முடித்து, மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு சற்று தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள், பகைமை மறந்து நட்புடன் பழகுவர். அலுவலகம் சம்பந்தமான பயணங்களால் நன்மைகளைக் காண்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியமும் கிடைக்கும்.
இந்த ராசி வியாபாரிகள் புதிய முயற்சிகளில் வெற்றி பெற்றாலும், கொடுக்கல்-வாங்கலில் சமநிலையே நிலவும். அதனால் கடன்களை உடனடியாக வசூலிக்க முயற்சி மேற்கொள்ளவும். வியாபார யுக்திகளைச் செயல்படுத்தும் போது ஏற்படும் இடையூறுகளை பொறுமையுடனும், பொறுப்புடனும் சமாளிக்கவும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.
விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்யும் விவசாயக் கூலிகள் உங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். புதிய குத்தகைகளை நீங்கள் நாடிச் சென்று எடுக்கலாம். மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். அதேநேரம் கால்நடைகளால் பலன்கள் கிடைக்குமென்றாலும், அவற்றுக்காக கொஞ்சம் செலவு செய்யவும் நேரிடும்.
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் சற்று பாராமுகமாக நடந்து கொள்வர். அதற்காகக் கோபப்படாமல், விவேகத்துடன் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். மற்றபடி சமுதாயத்திற்குப் பயன்படும் உண்மையான தொண்டுகளில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்துவீர்கள். இதனால் உங்கள் புகழ் கூடும்.
கலைத்துறையினரின் மதிப்பும், மரியாதையும் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் அதிக வருமானத்தைப் பெற்றுத் தரும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதே சமயம் பேசும் நேரத்தில் அனாவசிய வார்த்தைகள் வேண்டாம். மற்றவர்களின் மறைமுகமான குத்தல் பேச்சுக்களைப் பொருட்படுத்தாதீர்கள்.
பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும். உடல் ஆரோக்யம் மேம்படும். அதேசமயம் அனைவரிடமும் சமமாக நடந்து கொள்ளவும்; எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மற்றபடி குடும்ப விசேஷங்களின் போது, விலையுயர்ந்த ஆடை-ஆபரணங்களை வாங்கி அணிந்து கொள்வீர்கள்.
மாணவமணிகள் நன்றாக உழைத்துப் படித்து, நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். அனைத்து விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். கல்வி ரீதியான சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வார்கள். நினைவாற்றல் கூடும். ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டும் வகையில் நடந்து கொள்வீர்கள்.
-------------------------------------------------------------------------------------------------
கடகம்
இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திலும், குடும்ப ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்து வந்த ராகு-கேது பகவான்கள், வரும் 30.4.08 அன்று உங்கள் ராசிக்கும், சப்தம ஸ்தானத்திற்கும் செல்ல இருக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு குரு பகவான் சப்தம ராசிக்குப் பெயர்ச்சி ஆகி, ராகு பகவானுடன் இணைந்து கேது பகவானைப் பார்வையிடுகிறார். இந்த ராகு-கேது பகவான்களின் பெயர்ச்சிக் கால கட்டம் முழுவதும் சனிபகவான் உங்களின் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ஏழரை சனியின் இறுதிக் காலமாக சஞ்சாரம் செய்கிறார்.
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், உங்களின் நண்பர்களால் சிறு குழப்பங்களை உண்டாக்குவார். எனினும் குரு பகவானின் அருளால், "தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று' என்பதுபோல் கடைசி நேரத்தில் அவற்றிலிருந்து தப்பித்துவிடுவீர்கள். மேலும் அவர், உங்களை சில புது அனுபவங்களுக்கு உட்படுத்தி, உங்களின் மனோ பலத்தைக் கூட்டிக் கொடுப்பார்.
உங்களால் ஆன உதவிகளை ஏழைகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் அளிப்பீர்கள். விட்டுக் கொடுத்து உங்களின் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தத்துவ மார்க்கத்தை உங்கள் மனம் நாடும். கேது பகவான் அருளால் உங்கள் எண்ணத்தில் மன முதிர்ச்சியும், பக்குவமும் உண்டாகும். இல்லறத்தில் பற்றுதல் உண்டானாலும், மற்றவர்களின் நலத்தையும் தன்னலமாகவே கருதுவீர்கள்.
மொழிகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கூடுமாகையால், புதிய மொழிகளை ஆர்வத்துடன் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் செயல்களின் வேகம் கூடும். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு, குரு பகவானின் சேர்க்கை ராகு-கேது பகவான்களுக்கு உண்டாவதால், வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களைக் காண்பீர்கள். சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் குரு பகவானின் பார்வை பெற்று இந்த ஆண்டு இறுதிவரை அமர்ந்துள்ளதால், உங்களின் செல்வ வளம் கூடும். மன அமைதி உண்டாகும்.
உங்களின் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்து காணப்படும். நீங்கள் "நியாயாதிபதி' என்று பெயரெடுப்பீர்கள். அதே சமயம், இந்த ஆண்டு இறுதி வரையில் குரு பகவான் சற்றுப் பாதகமாக சஞ்சரிப்பதால், உங்களுக்கு சிறிது சோம்பேறித்தனம் கூடும்; தற்பெருமை பேசுவீர்கள்; தெய்வ ஈடுபாடு குறையும். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு இந்நிலைமை மாறி, உங்களின் வேதாந்த அறிவு கூடும். உங்களின் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை உயரும். உங்களை நீங்களே அறிந்து சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள் என்றால் மிகையாகாது.
உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளில் சிக்கி, மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். சிலர் விரும்பத்தகாத இடமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். அதே சமயம், உங்களின் திறமைகள் பளிச்சிடும். உங்களுக்கு வர வேண்டிய தொகைகள் வரும். எனினும் பயணங்களால் பலன் எதையும் எதிர்பார்க்க இயலாது.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பர். அதேநேரம் கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது, மிக்க கவனத்துடன் செயல்படவும். கூட்டுத் தொழில் புரிவோர், நண்பர்களிடம் உஷாராக இருக்கவும். சிலர் வம்பு, வழக்குகளைச் சந்திக்க நேரிடும்.
விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளுக்காகவும், உரங்கள் மற்றும் விவசாய உபகரணங்களுக்காவும் செலவு செய்வீர்கள். கால்நடைகளை வைத்திருப்போர் பராமரிப்புச் செலவுகளை செய்ய வேண்டி வரும். குத்தகைப் பாக்கிகளை அடைப்பீர்கள்.
அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் காண்பர். உங்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகள் சாதகமாகும். தொண்டர்களுக்கு, தேவையான உதவிகளைச் செய்வீர்கள். எதிர்கட்சியினருக்கு சாதுர்யமாகப் பதிலளிப்பீர்கள். எனினும் பேச்சில் கண்ணியம் குறையாமல் பார்த்துக்கொள்ளவும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதேசமயம் எதிர்பார்த்த பெயர், புகழ் கிடைக்கத் தாமதமாகும்; மனம் தளராமல், பொறுமையுடன் உங்கள் வேலைகளைச் செய்து வரவும். அது சிலருக்கு விருதுகளையும், பண முடிப்புகளையும் பெற்றுத் தரும். உங்களின் உற்ற நண்பருக்கு, தக்க நேரத்தில் உதவி செய்து மகிழ்வீர்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமைகளைக் காண்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள்.
மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். அதே சமயம், சக மாணவர்களுடன் வீண் விவாதங்கள் வேண்டாம்.
------------------------------------------------------------------------------------------------
சிம்மம்
உங்கள் ராசிக்கு சப்தம ஸ்தானம் மற்றும் ராசியில் சஞ்சரித்து வந்த ராகு-கேது பகவான்கள், 30.4.08 அன்று ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்கும், அயன சயன மோக்ஷ ஸ்தானத்திற்கும் முறையே 6, 12 என்கிற ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆவது சிறப்பாகும். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பலமாக சஞ்சரிக்கும் ராகுபகவானால் உங்களின் தேக ஆரோக்கியம் பலப்படும். அறிவாற்றல் கூடும். கடன்கள் தீரும்.
பங்காளிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். அதேநேரம் அயன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களின் தெய்வ வழிபாட்டிற்கு தக்க பலன்களை உடனுக்குடன் கிடைக்கச் செய்வார். நீங்கள் யோகா, ப்ராணாயாமம் போன்ற சூட்சுமக் கலைகளில் தேர்ச்சி பெறுவீர்கள். வெளிநாட்டுக்குச் சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும்.
அதேசமயம் சிலருக்கு, தாயின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மேலும் சரியான நேரத்தில் உறக்கமோ, உணவு உண்பதோ இராது.
வரவு சீராக இருந்தாலும், செலவு சற்று கூடவே செய்யும். மற்றபடி அடுத்தவர்களின் முக பாவனையைக் கொண்டே அவர்களின் மனத்தைப் படித்துவிடும் திறமையும் உண்டாகும். இந்தக் கால கட்டத்தில் உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் சனிபகவான் இந்த ஆண்டு இறுதி வரை குருபகவானின் பார்வையில் உள்ளதால், உங்களின் செயல்களை ஓசையில்லாமல் முடித்துவிடுவீர்கள். உங்களின் யூகங்கள் பலிக்கும். தேக ஆரோக்கியம் நன்றாக இருப்பதுடன், மேனியில் நல்ல பொலிவு உண்டாகும். உற்றார்-உறவினர்கள், விலகிச் சென்ற நண்பர்கள் பகை மறந்து நட்புடன் பழகுவார்கள். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு, சனிபகவான் உங்களின் பொறுப்புகளைக் கூட்டுவார். அதேநேரம் சிலருக்கு பங்காளிகளுடன் பகை உண்டாகும்.
உங்களை அழகுப்படுத்திக் கொள்வதை நீங்களே அலட்சியப்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் கிரகிப்பு ஆற்றல் குறையும். அதேசமயம் இந்த ஆண்டு இறுதிவரை குரு பகவானின் பரிபூரண அருளால் உங்களின் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். சமூகத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு குரு பகவான் ராகு பகவானுடன் இணைவதால் வயிற்றுவலி, ஜீரணக் கோளாறு மற்றும் சிறு சட்டச் சிக்கல்கள் உண்டாகலாம்.
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். அதேநேரம் சக ஊழியர்கள் சிலர், உங்களுடன் பகைமைப் பாராட்டுவார்கள். அனைவரிடமும் நல்ல முறையில் பேசிப் பழகவும். மற்றபடி, வருமானத்திற்குக் குறைவிராது. அலுவலக ரீதியான பயணங்களில் நல்ல பலனைக் காண்பீர்கள்.
வியாபாரிகள் சற்று கூடுதலான பலன்கள் காண்பர். கொடுக்கல், வாங்கலில் சராசரிக்கும் அதிகமான லாபம் இருக்கும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பழைய கடன்களை திருப்பி அடைப்பீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அதே சமயம், கூட்டாளிகளிடமும் நண்பர்களிடமும் கலந்தாலோசித்த பிறகே அனைத்து முயற்சிகளையும் நிறைவேற்றவும்.
விவசாயிகளுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். இதனால் குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மேலும் பழைய கடன்களை அடைத்து, நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். வங்கிக் கடன் கிடைக்கும். பால் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.
அரசியல்வாதிகளுக்கு பெயரும், புகழும் அதிகரிக்கும். அவர்களின் பணியாற்றும் திறனை கட்சி மேலிடம் பாராட்டும். தொண்டர்களை உற்சாகப்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வெளியூர் பயணங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு பழைய ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டாலும், இறுதியில் அனைத்தும் சரியாக முடியும். உங்களின் திறமைகள் வெளி உலகுக்கு வெளிப்படும். அதே சமயம், ரசிகர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்ள, சற்று விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். அதே சமயம் உற்றார், உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி குழந்தைகளால் பெருமையடைவீர்கள்.
மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதை ஒரு நிலைப்படுத்த, தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபடவும்.
------------------------------------------------------------------------------------------------
கன்னி
உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானம் மற்றும் அயன சயன மோக்ஷ ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த ராகு-கேது பகவான்கள், வரும் சர்வதாரி ஆண்டு, 30.4.08 அன்று பூர்வ புண்ய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பான அம்சமாகும். பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகச் செய்வார். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலர் மாமன் வழியில், ஸ்திரச் சொத்துக்களையும் பெறுவார்கள். தெய்வ வழிபாட்டுடன், சாதுக்களின் தொடர்பும் உண்டாகும். உங்களால் இயன்ற அளவுக்கு தான தருமங்களைச் செய்வீர்கள்.
உடன்பிறந்தவர்களுக்காகவும் சிறிது செலவு செய்ய நேரிடும். குழந்தைகளின் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டிவரும். அதேசமயம் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் உங்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு, வருங்காலத்தை வளமாக்குவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் வில்லங்கங்கள் வந்தாலும் இறுதியில் வெற்றி பெற்றுவிடுவீர்கள். ஷேர் மார்க்கெட் போன்ற விவகாரங்களில் லாபம் உண்டாகும். வாகனச் சேர்க்கை ஏற்படும்.
மூத்த சகோதர, சகோதரிகள் உதவி செய்வார்கள். வெளிநாட்டிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வந்து சேரும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். கெட்டவர்களின் சகவாசம் தானாகவே நீங்கும். இந்த ஆண்டு இறுதிவரை ஏழரை சனிபகவானால் உங்களுக்கு சுபவிரயங்கள் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டை விட்டு, பெரிய வீட்டிற்கு இடம் பெயருவார்கள். உங்களின் திட்டங்கள் குறித்த காலத்திற்குள் நிறைவேறும். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு செலவுகள் கூடுமாதலால் சிக்கனம் தேவை.
அதே சமயம், இக்கால கட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானத்தில் பலம் பெறுவதால் உங்களின் அன்றாடத் தேவைகளுக்குக் குறைவு வராது. உங்களின் வாழ்க்கைத் தரம் உயரக் காண்பீர்கள். உங்களின் பெயர், புகழ் அதிகரிக்கும். ராசியைப் பார்வையிடும் குருபகவான், உங்களின் வாக்கில் இனிமையைச் சேர்ப்பார். அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள் தங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவார்கள். அலுவலகப் பணிகளில் வேலைப்பளு அதிகரித்தாலும் அவற்றை நேர்த்தியுடன் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார்கள். அதேநேரம் சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றபடி அவசியம் ஏற்பட்டாலொழிய அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்ளாதீர்கள். எவருக்கும் முன் ஜாமீனும் போடவேண்டாம்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே முடியும். கூட்டாளிகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். பொருளாதாரத்தில் தொய்வு வராது. அரசு வகையில் கஷ்டங்கள் எதுவும் இராது. உங்கள் பொருட்களை மற்ற சந்தைகளிலும் விற்பனை செய்வதற்கு முயற்சிப்பீர்கள்; அதில் ஓரளவுக்கு வெற்றியும் காண்பீர்கள். அதே சமயம், புதிய முதலீடுகளை பெரிய அளவில் செய்ய வேண்டாம்.
விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் குறைவாகவே இருக்கும். அதனால் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை பயிர் செய்வதன் மூலம், வருமான இழப்பை ஈடுகட்டவும். மேலும் நீர்வரத்தும் குறைவாக இருக்கும்; சேமிப்புகளை எடுத்து செலவு செய்ய நேரிடலாம்.
அரசியல்வாதிகளுக்கு சில எதிர்ப்புகள் தோன்றினாலும், கௌரவத்திற்குப் பங்கம் வராது. உங்கள் செய்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டாம். அதேநேரம் தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து, உங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற, தீவிர முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். இதனால் மனம் சோர்வடையும். எனினும் புகழைத் தக்க வைத்துக் கொள்ள, சீரிய முயற்சிகளை மேற்கொள்ளவும். இது பிற்கால முன்னேற்றத்திற்கு உதவும்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை சுமாராக இருந்தாலும், அவருடைய குடும்ப உறவினர்களிடம் இணக்கமான உறவு இருக்கும். சிலருக்கு வயிறு சம்பந்தமான தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள். கடுமையாக உழைத்து படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவர். மற்றபடி பெற்றோர்களின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
-------------------------------------------------------------------------------------------------
துலாம்
சர்வதாரி ஆண்டு 30.4.08 அன்று, ராகு-கேது பகவான்கள் சுக ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இக்காலகட்டத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவானால் உங்களின் பணப்புழக்கம் சீராகும். தாறுமாறாக இருந்த முதலீடுகளை முறைப்படுத்துவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் உண்டாகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். கெüரவம் நன்கு இருக்கும்.
சிலர் புதிய நிலபுலன்களையும், வாகனங்களையும் வாங்குவர். தாய்வழி உறவுகள் சீர்படும். அதே நேரம் சில உடல் உபாதைகள் தோன்றி, தானாகவே மறையும்; சிலர் கைப்பொருட்களை இழக்கவும், வீண் அபவாதங்களைச் சந்திக்கவும் நேரிடும். எனினும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் செய் தொழிலில் மேம்பாட்டைக் கொடுப்பார். உங்கள் பிரச்சினைகளுக்கு சுலபமாகத் தீர்வு கிட்டும். பேச்சில் கண்ணியம் காப்பீர்கள். அதேசமயம் கோபத்தைக் குறைத்து செயலாற்றவும். மேலும் வெற்றி பெறும் காலங்களில் அடுத்தவர்களை உதாசீனப்
படுத்துவதைத் தவிர்க்கவும்.
இந்த ஆண்டு இறுதிவரை சனி பகவான் லாபஸ்தானத்தில் குரு பகவானின் அருட்பார்வை பெற்று பலமுடன் இருப்பதால் உங்களின் முன்னேற்றம் பன்மடங்காக உயரும். உடல் அசதிகளைப் பொருட்படுத்தாமல் மனமகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள். உங்கள் பேச்சே தீர்ப்பு போல் அமையும். ஆடை, அணிமணிகளை வாங்கி மகிழ்வீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வார்கள். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை உங்களின் கனவுகள் நனவாகும் காலமாகும்.
லாபஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி பகவான் அருளால் உங்களுக்கு, எதிர்பாராத இடங்களிலிருந்து பணவரவு கூடும். சிலருக்கு வெளிநாட்டிற்குச் சென்று வரும் யோகங்கள் உண்டாகும். வருங்காலத்தை வளமாக்க வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திடுவார் சனிபகவான் என்றால் மிகையாகாது. குரு பகவான் அனுக்ரஹத்தால் நெடுநாளைய எண்ணம் ஒன்று பூர்த்தியாகும். சிறு பயணங்களால் பூரிப்படைவீர்கள். சுறுசுறுப்புடன் நடைபோடுவீர்கள். இளைய சகோதர-சகோதரிகளிடமிருந்து உதவி பெறுவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருப்பதால் தோற்றத்தில் மிடுக்குடன் காணப்படுவர். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவர். மேலும் பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களின் வேலைகளைத் திட்டமிட்டுச் செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர் என்கிற பெயரைச் சம்பாதிப்பீர்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாகவே நடப்பதால் பொருளாதாரம் அபிவிருத்தி அடையும். பழைய கடன்கள் அனைத்தையும் திருப்பிச் செலுத்த ஆரம்பிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் போட்டியாளர்களை வெற்றிகரமாகச் சமாளிப்பீர்கள்.
விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவர். பணவரவு சீராக இருந்தாலும், புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். விவசாயக் கூலிகளுக்கு உங்களாலான உதவிகளைச் செய்யவும். அரசு வழியில் இருந்து வந்த இடைஞ்சல்களும், தடைகளும் விலகும்.
இந்த ராசி அரசியல்வாதிகள், அனைவரையும் அரவணைத்துச் செல்வார்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். அதனால் சில புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். அதேநேரம் உங்களின் புது முயற்சிகளை தொண்டர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகே செயல்படுத்தவும். மேலும் பேசும்போது எச்சரிக்கையைக் கடைபிடிக்கவும்.
கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதமாகும். திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்து கொள்வீர்கள். மனதில் இருக்கும் வருத்தங்களின் தாக்கங்களை வெளியில் காட்டமாட்டீர்கள். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். எனினும் சக கலைஞர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காதென்பதால், அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.
பெண்மணிகள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். உறவினர்களிடம் சிறிய அளவிலான சச்சரவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. குருட்டு அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்க வேண்டாம்.
மாணவமணிகளுக்கு படிப்பில் சிறிது ஆர்வம் குறையும். அதனால் உங்கள் உழைப்பை, படிப்பதற்காக மட்டும் பயன்படுத்தவும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் சொல் கேட்டு நடக்கவும். அதேநேரம் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
------------------------------------------------------------------------------------------------
விருச்சிகம்
வரும் சர்வதாரி ஆண்டு 30.4.2008 அன்று, ராகு-கேது பகவான்கள் தைரிய ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். தைரிய ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவானால் உங்களின் திறமை கூடும். சுறுசுறுப்புடன் காரியமாற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர-சகோதரி வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சி பொங்கும். புதிய நண்பர்கள் கிடைப்பர். சாதனையாளர் என்று பெயரெடுப்பீர்கள்.
பயணங்கள் உங்களைக் குதூகலப்படுத்தும். சுகபோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்கள் மனதில் உற்சாகத்தை ஊட்டுவார். நடக்காது என்று நினைத்த காரியங்கள் நடக்கும்.
மனதிலிருந்த அழுத்தங்கள் விலகும். அதேநேரம் கேது பகவான், தந்தையின் உடல் நலத்தில் ஒரு தொய்வை உண்டாக்குவார். உங்கள் பேச்சில் சிறிது ஆணவம் தோன்றும். எவரையும் அலட்சியப்படுத்தாமல் கண்ணியத்துடன் நடந்து கொள்ளுங்கள்.
இந்த ஆண்டு இறுதிவரை குரு பகவானின் பார்வையில் அமர்ந்துள்ள சனி பகவானால் தொழிலில் ஸ்திரத்தன்மை உண்டாகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களை எதிர்த்தவர்கள் மறைந்துவிடுவார்கள். உங்களின் அசாத்தியத் துணிச்சல் அனைவர்க்கும் பிரமிப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு தொழில் ஸ்தானத்தில் தனித்து இயங்கும் சனிபகவான், உங்கள் திட்டங்களை முடிப்பதில் தாமதப்படுத்துவார். வரவேண்டிய பணம் வராமல், புதிய கடன்களைப் பெற்று நிலைமையைச் சமாளிப்பீர்கள்.
இந்த ஆண்டு இறுதி வரை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் குரு பகவானால் உங்களின் பேச்சாற்றல் மிகும். தனம் கூடும். விவேகம் பெருகும். நுட்பமாக சிந்திக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தில் வம்ச விருத்தி உண்டாகும். அதன் பிறகு குருபகவான் தைரிய ஸ்தானத்தில் ராகு பகவானுடன் கூடுவதால், உங்களின் பெருந்தன்மை அதிகரிக்கும். செய்நன்றி மறக்கமாட்டீர்கள். உங்கள் முதலீடுகள் எதிர்பார்த்த லாபத்தைக் கொடுக்கும்.
உத்யோகஸ்தர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பர். திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். அதே சமயம் மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால், எதையும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும் உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகவே பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள் அனுகூலம் தரும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள் நல்லவர்களுடன் கூட்டு சேர்ந்து பலனடைவர். வாராக்கடன்கள் திரும்பி வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். புதிய சந்தைகள் மூலம் லாபம் பெறுவீர்கள். அதேநேரம் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்து, அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவும். உங்கள் முயற்சிகளை கூட்டாளிகளிடம் விளக்கி விட்டுச் செயல்படுத்துவீர்கள்; இது உங்களின் தனித் தன்மையைக் கூட்டும். சமுதாயத்தில் உங்களின் செல்வாக்கு உயரும்.
விவசாயிகள் விளைப் பொருட்களால் லாபமடைவர். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் நன்மையளிக்கும். அதே சமயம், புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். மேலும் வயல் வரப்புச் சண்டைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மற்றபடி தன்னலம் பாராட்டாமல் அடுத்தவர்கள் வளம் பெற செயலாற்றுவீர்கள். விவசாயிகள் மத்தியில் செல்வாக்குடன் வலம் வருவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருக்கும். அதே சமயம், கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளைத் திட்டமிட்டு நன்கு செயல்படுத்துவீர்கள். தொண்டர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். உங்கள் மீதான வழக்குகள் சாதகமாக முடிவடையும்.
கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கிடைக்கும். அவற்றை உங்களின் முழுத்திறமையையும் பயன்படுத்தி நன்றாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் பாராட்டும், பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு உதவமாட்டார்கள். அவர்களிடம் பொறுமையுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும்.
பெண்மணிகள் பணவரவு நன்றாக இருப்பதால் ஆடம்பரப் பொருட்களை வாங்குவார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புண்டாகும். அதே சமயம் கணவரிடம் ஒற்றுமையாக இருக்கவும். கணவர் வழி உறவினர்களிடமும் சுமுகமாக இருங்கள்.
மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறலாம். பெற்றோர்களின் ஆதரவு தொடர்ந்து நன்றாகவே இருக்கும். மற்றபடி உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி காண்பீர்கள்.
-----------------------------------------------------------------------------------------------
தனுசு
உங்கள் ராசிக்கு தைரிய ஸ்தானம் மற்றும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு-கேது பகவான்கள் 30.4.08 அன்று- தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் மற்றும் அஷ்டம ஸ்தானத்திற்குப் பெயர்ச்சியாகிறார்கள். இதனால் உங்களின் தன்னம்பிக்கை கூடும். பேச்சாற்றல் அதிகரிக்கும். உங்களின் நடை, உடை பாவனைகளில் ஒரு வேகம் உண்டாகும். உங்களின் கருத்துக்களை அடுத்தவர்கள் கவனத்துடன் பரிசீலிப்பார்கள். வருமானம் பெருமளவுக்கு வந்து கொண்டிருக்கும்.
அதேநேரம் வருமானம் வர, வர செலவுகளும் முன் வந்து நிற்கும். கொடுத்த இடத்திலிருந்து பணத்தைத் திரும்பப் பெற, நடையாய் நடக்க வேண்டியிருக்கும். எனினும் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை எப்பாடுபட்டேனும் வாங்கிவிடுவீர்கள். மற்றபடி ஆவணங்களில் கையெழுத்திடும் முன், அனைத்து ஷரத்துக்களையும் நன்றாகப் புரிந்து கொண்டு கையெழுத்திடவும். ஆரோக்கிய விஷயத்தில் கண்களில் உபாதை வராமல் பார்த்துக் கொள்ளவும்.
இந்த ஆண்டு இறுதி வரையில் பாக்யஸ்தானத்தில் குரு பகவானின் அருட்பார்வையில் சஞ்சரிக்கும் சனி பகவான், அனைவரிடமும் உங்களை நல்லுறவுடன் இருக்க வைப்பார். ஆன்மீகச் சுற்றுலா சென்று வருவீர்கள். சொந்த பந்தங்களிடம் மிகுந்த பற்று உண்டாகும். புதிய பொறுப்புகள் கிட்டும். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு சனி பகவான் மனோ தைரியத்தைக் குறைப்பார். மனதில் சஞ்சலங்கள் குடி கொள்ளும். தவறு செய்துவிடுவோமோ என்கிற கலக்கம் தொடர்ந்து கொண்டேயிருக்கும். அடுத்தவர்களின் சூழ்ச்சியைத் தக்க தருணத்தில் புரிந்து கொள்ள முடியாமல் போகும். பல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் உண்டாகும்.
இந்த ஆண்டு இறுதி வரை குருபகவான் உங்கள் வாழ்க்கையில் சீரிய முன்னேற்றத்தைக் கொடுத்தாலும், நண்பர்களின் வெறுப்பையும் சேர்த்தே தருவார். கடும் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு குரு பகவான் உங்களின் பொக்கிஷப் பெட்டியை நிரப்புவார். உங்களின் பேச்சில் வசீகரம் கூடும். உங்களின் உயர்ந்த பண்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சேமிப்பு உயரத் தொடங்கும். அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். உங்களின் சொல் வாக்கு, செல்வாக்காக மாறும் என்றால் மிகையில்லை.
உத்யோகஸ்தர்கள் எவ்வளவுதான் நன்றாக உழைத்தாலும், அதில் மேலதிகாரிகள் குற்றம் குறைகளைக் காண்பார்கள். அதே சமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். சிலர் அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டி வரும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். அலுவலகத்தில் கொடுத்திருந்த கடன் விண்ணப்பங்கள் உங்களுக்குச் சாதகமாகி, பண வரவு உண்டாகும்.
வியாபாரிகள் வியாபாரத்தை முனைப்புடன் செய்வார்கள். கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள். கடன் கொடுப்பதைத் தவிர்த்து வியாபாரத்தை விரிவுபடுத்தவும். பழைய கடன்களை சரியான முயற்சியின் பேரில் திரும்ப அடைத்துவிடுவீர்கள். பொருளாதார வளம் நன்றாக இருக்கும். சிறிய அளவில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். அதில் எதிர்பார்த்த லாபத்தையும் காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். விவசாய இடுபொருட்களை சகாய விலைக்கு வாங்குவீர்கள். நீராதாரங்களைப் பெருக்குவீர்கள். அதே சமயம், புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். மற்றபடி எதிரிகளின் தொல்லைகள் இராது. நிம்மதியாக உங்களின் வேலைகளைச் செய்வீர்கள். உபரி வருமானங்களுக்காக காய், கனிகளையும் பயிரிடலாம். புதிய கால்நடைகளை வாங்கும் கட்டமிது.
அரசியல்வாதிகளின் பதவிக்கு, நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே இடையூறுகள் உண்டாகும். அவர்களின் ரகசியத் திட்டங்களை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்கள் கட்சியினரிடமும், மாற்றுக் கட்சியினரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். முக்கியப் பிரச்சினைகளில் உங்கள் எண்ணங்களை பகிரங்கப்படுத்த வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்களின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
கலைத்துறையினருக்கு அனுகூலத் திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் ஒருங்கே வந்து சேரும். சக கலைஞர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பல் படாமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.
பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து காணப்படும். உங்களின் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர-சகோதரி உறவில் விரிசல்கள் மறைந்து சீர்படும். உடல் உபாதைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
மாணவமணிகள் நல்ல முறையில் படித்து மதிப்பெண்களைப் பெறுவர். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகமடைவர். உங்கள் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகளும் தென்படும்.
------------------------------------------------------------------------------------------------
மகரம்
இது வரை உங்கள் ராசிக்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த ராகு-கேது பகவான்கள், 30.4.08 அன்று ஜென்மம் மற்றும் சப்தம ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான், உங்களின் பேச்சையும் கருத்துக்களையும் அடுத்தவர்கள் கேட்க வைப்பார். உங்களின் தன்னம்பிக்கை வளரும். திறமைகள் பளிச்சிடும். அதேநேரம் உடல் ஆரோக்கியம் சிறிது பாதிக்கப்படும்; உடனுக்குடன் மருத்துவரை அணுகவும்.
சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், கூட்டாளிகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்துவார். பிரச்சினை வரும் விஷயங்களிலிருந்து ஒதுங்கி விடுவீர்கள். மற்றபடி நேரம் பாராது உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களின் ஆதரவுடன் உங்களின் செயல்களைச் செய்வீர்கள். வருமானத்திற்குக் குறைவு வராது. அதேநேரம் நண்பர்கள் போல் பழகும் விரோதிகளை, இனம் கண்டு ஒதுக்கவும். சமுதாயப் பணிகளில் உங்கள் ஈடுபாடு கூடும்.
இந்த ஆண்டு இறுதி வரை சனி பகவான் உங்களின் அஷ்டம ராசியில் குரு பகவானின் பார்வையில் சஞ்சரிக்கிறார். இதனால் உங்கள் செயல்களை கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செய்வீர்கள். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வருமானம் சீராக இருப்பதால், கடன் சுமை இராது. இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு சனி பகவான் தனித்து இயங்கும் காலத்தில் உங்களின் செயல்கள், தடைகளுக்குப் பிறகே வெற்றி பெறும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசித்துச் செய்ய வேண்டிய காலகட்டமிது.
செலவுகளும், வீண் விரயங்களும் உண்டாகும். குரு பகவான் அருளால் இந்த ஆண்டு இறுதி வரையில், வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கோயில் பணிகளில் ஈடுபடுவீர்கள். பெரியோர்களின் ஆசிகளைத் தேடிப் பெறுவீர்கள். இந்த ஆண்டின் இறுதிக்குப் பிறகு பொருளாதாரச் சிக்கல் என்று வராவிட்டாலும், செலவுகள் சற்று அதிகரிக்கும். மனதில் காரணமில்லாமல் கவலை சூழும். சில இழப்புகளுக்குப் பிறகே வெற்றிகளை அடைவீர்கள். அதனால் உங்கள் பொறுப்புகளைக் கவனத்துடனும், நிதானத்துடனும் செய்து முடிக்கவும்.
உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க நினைப்பார்கள். உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களை விலக்கிவிடுவீர்கள். அலுவலக வேலைகளில் பளு கூடினாலும், அதனைச் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். சக ஊழியர்களும் தேவைக்கேற்ப உதவி செய்வர். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். சிலர் கடன் வாங்கி, வாகனம் வாங்குவார்கள்.
வியாபாரிகள் லாபம் பெருகினாலும், கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். அதனால் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன் கோபத்தைத் தவிர்க்கவும். புதிய முதலீடுகளும் செய்ய வேண்டாம். மற்றபடி வேகமாக விற்பனையாகும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வியாபாரம் செய்யவும். கூட்டாளிகளும், நண்பர்களும் உங்களிடம் சாதகமாக நடந்து கொள்வர்.
விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது. விளைச்சல் அதிகரிக்கும். அதேநேரம் புழு-பூச்சிகளின் பாதிப்பினால் சிறு செலவு செய்ய நேரிடும். எனினும் கடன் பிரச்சினை எதுவும் இராது. சக விவசாயிகளுக்கு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உபதொழில்களில் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மேலிடம் உங்களை நம்பி ஒப்படைக்கும் பணிகளைச் செவ்வனே செய்து முடித்துவிடுவீர்கள். தொண்டர்களின் பாராட்டும் கிடைக்கும்.
கலைத்துறையினர் கை நழுவிப் போன ஒப்பந்தங்களை திரும்பப் பெறுவர். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும். தொழிலில் நன்றாகச் செயல்பட்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அதே சமயம், சக கலைஞர்கள் நட்பு பாராட்ட மாட்டார்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடனான உறவு சீராகும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உற்றார்-உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். தெய்வ பலம் கூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும். நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர் சொல் கேட்டு நடப்பீர்கள்
-------------------------------------------------------------------------------------------------
கும்பம்
உங்கள் ராசி மற்றும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு-கேது பகவான்கள், 30.4.08 அன்று அயன சயன மோக்ஷ ஸ்தானம் மற்றும் ருண ரோக சத்ரு ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அயன சயன மோக்ஷ ஸ்தானத்தில் இருக்கும் ராகு பகவான், உங்களின் வேலைகளில் சிறிது அலைச்சல்களை உண்டுபண்ணுவார். குடும்பத்தில் சில திடீர் செலவுகளையும் ஏற்படுத்துவார்.
வெளியூரிலிருந்து சில அனுகூலமற்ற செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு குறைகள் காணப்படும். அதேசமயம் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிபலம் பெற்று சஞ்சரிக்கும் கேது பகவான், வழக்கு விவகாரங்களில் வெற்றியை உண்டு பண்ணுவார். வங்கிக் கடன்கள் கிடைக்கும். நோய் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். தனித்து நின்று, போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். நண்பர்கள் தேவைக்கேற்ப உதவுவார்கள். மேலும் விலகிச் சென்ற நண்பர்களும் திரும்பி வருவார்கள்.
இந்த ஆண்டு இறுதி வரை குரு பகவானின் பார்வையில் உள்ள சனி பகவான் திக்பலம் பெற்று அமர்ந்திருப்பதால், உங்களின் அறிவு முதிர்ச்சி வெளிப்படும்; ஆன்மீகத்தில் நாட்டம் கூடும்; அனைவரும் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். குல தெய்வ வழிபாட்டை முடிப்பீர்கள். ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள். அரசு வகையிலும் ஆதரவு கூடும். மனநிலையும், உடல் நலமும் நன்றாக இருக்கும்.
இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு நண்பர்கள், உறவினர்களின் வகையில் சில இடையூறுகள் உண்டாகும். இறைவழிபாட்டிலும் சுணக்கங்கள் உண்டாகும். மனதில் ஏற்படும் முன் கோபத்தை அடக்க முயற்சி செய்யுங்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை நாசூக்காக சுட்டிக்காட்டுங்கள்.
இந்த ஆண்டு இறுதி வரையில் குரு பகவான், உங்களின் முயற்சிகளில் பல மடங்கு வெற்றிகளை உண்டுபண்ணுவார். எதிரிகளும் அடங்கிப் போவார்கள். புனித யாத்திரைகள் செய்யும் வாய்ப்பும் உண்டாகும். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு குரு பகவான், அயன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு பகவானுடன் இணைகிறார். இந்தக் காலகட்டத்தில் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று வாழும் நிலை உண்டாகும்.
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலில் இருப்பீர்கள். சக ஊழியர்களும் உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருத மாட்டீர்கள். பணவரவிற்குச் சிறு தடைகள் ஏற்பட்டாலும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தத் தடையும் இராது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். அதே நேரம் அலுவலகத்தில் வீண் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டாம்.
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பார்கள். தொடர்ந்து வந்த தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும். கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால், கூட்டுத் தொழில் சிறப்பாக நடக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். இக்கால கட்டத்தில் கொடுக்கல், வாங்கலில் அனுகூலமான திருப்பங்களையும் காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு மகசூல் பெருகி, லாபம் கொட்டும். புதிய யுக்திகளைப் புகுத்தி லாபத்தைப் பெறுவீர்கள். கால்நடைகளால் நல்ல பலன்களை அடைவீர்கள். எதிர்பார்த்த கடன்கள் மானியத்துடன் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கி, "எதையும் சாதிக்க முடியும்' என்கிற தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். கருப்பு நிறப் பயிர்கள் பயிரிட நல்லது.
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவர். உங்களின் தைரியமும், செயலாற்றலும் கூடும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். கட்சித் தலைமையிடம் நற்பெயர் எடுப்பீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகத் தீர்ப்பைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்பாராத வகையில் வெற்றிகள் கிடைக்கும். உங்கள் வேலைகளை குறிப்பிட்டபடி முடித்துவிடுவீர்கள். அதே சமயம், இந்தக் கால கட்டத்தில் அதிகம் உழைத்துப் பாடுபட வேண்டியிருக்கும். மேலும் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனம் தேவை.
பெண்மணிகளுக்கு பணவரவு இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். கணவருடன் ஒற்றுமையோடு நடந்து கொள்வீர்கள்; கணவரும் உங்களை மதித்து நடப்பார். உங்கள் தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மாணவமணிகளைப் பொறுத்தவரை படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். கடுமையான முயற்சியினால் எல்லாத் தடைகளையும் தகர்த்து வெற்றிபெறுவீர்கள். எதையும் யோசித்துச் செயலாக்குவீர்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.
-------------------------------------------------------------------------------------------------
மீனம்
வரும் சர்வதாரி ஆண்டில் 30.4.2008 அன்று, ராகு-கேது பகவான்கள் லாப ஸ்தானம் மற்றும் பூர்வ புண்ய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான், உங்களின் செயல்களை வெற்றிகரமாக்குவார். மனம் ஒருமித்துச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். சேமிப்புகளை ஆதாயம் பெறும் வகையில் முதலீடு செய்வீர்கள். பணவரவு பன்மடங்காகக் கூடும். மூத்த சகோதர-சகோதரிகள் உங்களுக்கு அனைத்து அனுகூலங்களையும் செய்வார்கள். பங்கு வர்த்தகம் போன்ற துறைகளில் லாபத்தைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் புதிய தொழில்களையும் தொடங்குவீர்கள். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் விலகும்.
இந்த ஆண்டு இறுதி வரை குரு பகவானின் பார்வையில் உள்ள சனி பகவான், உங்களுக்கு சமுதாயத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கச் செய்வார். புதிய யுக்திகளைப் புகுத்தி, உங்கள் செயல்களில் வெற்றி பெறுவீர்கள். எத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்தும் தப்பித்துவிடுவீர்கள். நெடுநாளாக ஒத்தி வைத்திருந்த வேலைகள் உடனடியாக எடுக்கப்பட்டு, சரியாக முடிவடையும். இந்த ஆண்டு இறுதிக்குப் பிறகு சனி பகவான் கையிருப்புப் பொருட்களை இழக்கச் செய்திடுவார். தீயோர் சேர்க்கை எதிர்பாராத வகையில் உண்டாகும். காரியங்களில் சிறிது தேக்க நிலைமை காண்பீர்கள். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் உண்டாகும்.
அதே சமயம், இந்த ஆண்டு இறுதி வரையில் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி உண்டாகச் செய்வார்; முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிவீர்கள். அதற்குப் பிறகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், வருமானத்தைப் பல வழிகளிலும் பெருகச் செய்வார். அரசாங்க உதவிகள் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பூர்த்தியடையும். அதே சமயம், இல்லத்தில் இருக்கும் வயதானவர்களுக்கு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும்.
உத்யோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை முன்னதாகவே முடித்து நற்பெயரை எடுப்பர். பணவரவுக்கு இக்கால கட்டத்தில் தடை வராது. சக ஊழியர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல்-வாங்கலில் மனக் கஷ்டமும், பணக் கஷ்டமும் உண்டாகும். மற்றபடி திறமையுடன் திட்டமிட்டுச் செய்யும் வியாபாரத்தினால் உங்கள் கெüரவமும், அந்தஸ்தும் கூடும். அதேநேரம் கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு செயல்படும் காலகட்டம் இதுவாகும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகைப் பாக்கிகள் வசூலாகும். அதேநேரம் பூச்சிக் கொல்லி மருந்துக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மேலும் பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடை பராமரிப்பிலும் சற்று செலவு ஏற்படும். மற்றபடி சக விவசாயிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
அரசியல்வாதிகளுக்கு நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அதேநேரம் தொண்டர்களின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடலாம். உங்களின் பணியாற்றும் திறனை கட்சி மேலிடம் கவனிக்கும். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகள் உங்களைத் தேடி வரும். அதேநேரம் எதிரிகளின் மீது ஒரு கண் வைத்திருக்கவும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பது சற்று தாமதமாகும். மேலும் பழைய ஒப்பந்தங்களும் இழுபறி நிலையில் இருக்கும். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு அமோகமாக இருக்கும். வரவேண்டிய பணமும் வந்து சேரும்.
பெண்மணிகள் கணவன்-மனைவி வகையில் உறவில் விரிசல்கள் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். உடன் பிறந்தவர்களால் சிறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்; பேசும் போது அவசரப்படாமல் இருக்கவும். உற்றார், உறவினர்களை கெüரவத்துடன் நடத்தவும்.
மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் நல்ல பலனைக் காண்பார்கள். ஆசிரியரின் நேசத்தைப் பெறுவார்கள். மற்றபடி படிப்பில் பூரணத்துவம் அடைய, யோகா மற்றும் ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி கல்வியில் சிறக்கவும்.
----------------------------------------------
Friday, 11 April 2008
2008 தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment