Wednesday, 16 April 2008

அம்பாறையில் ஹசன் அலியின் காரியாலையம் தாக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளருமான, ஹசன் அலியின் இறக்காமம் கட்சி கிளை அலுவலகம் நேற்று அதிகாலை 2 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலில் தமது கட்சியின் கிளை அலுவலகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக ஹசன் அலி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் ஜமால்டீன் என்பவரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக இறக்காமம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் சலீம் தமண காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து தமண காவல்துறை பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என கூறினார். முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹசன் அலி மீண்டும் உறுதிப்படுத்திய நிலையில், மீண்டும் தமண காவல்துறை பொறுப்பதிகாரியிடம் கேட்டபோது, காவல் மையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அது குறித்து தாம் விசாரிப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை அம்பாறை மாவட்ட வாக்காளர்களிடையே பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் 80 வீதமான வாக்களர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க விரும்புவதாகவும் ஹசன் அலி குறிப்பிட்டார். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இந்த மாற்றங்களை காணமுடிகிறது. தாம் தடையின்றி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் எதிர்வரும் 26ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளும் பிரசார கூட்டம் ஒன்றை நடைபெற உள்ளது எனவும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க அம்பாறைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: