சிறிலங்காவின் பதுளை மாவட்டத்தில் உள்ள மகா ஓயாப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு பணிக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மனைவி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மகா ஓயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மகா ஓயா காவல்துறையினர் தெரிவித்திருப்பதாவது:
எல்லையோர பாதுகாப்புக் கடமையில் இருந்துவிட்டு வீடு திரும்பிய மேற்படி ஊர்காவல் படையைச் சேர்ந்தவருக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. கணவரின் கள்ளக்காதல் குறித்து மனைவி கேட்டதனையடுத்தே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
வாக்குவாதம் முற்றியபோது தனது மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு மனைவி உயிரிழந்திருக்கலாம் என்று கருதி தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
எல்லையோரப் பாதுகாப்புப் பணிக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்தி அண்மைக்காலமாக சட்டவிரோத செயல்களும் வன்முறைகளும் அதிகரித்து வருவதாக பல்வேறு மட்டங்களும் விசனம் தெரிவித்துள்ளன.
அண்மையில் புத்தளத்தில் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் காணித்தகராறினால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வரை சுட்டுக்கொன்றுவிட்டு அதே குடும்பத்தினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment