Friday, 25 April 2008

காயமடைந்த படையினர் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது: சுதந்திர ஊடக இயக்கம்

போர் முனையில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த படையினர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கச் சென்ற புகைப்பட ஊடகவியலாளர்கள் தமது பணியினை மேற்கொள்வதில் அரசாங்க அதிகாரிகள் தடைகளை ஏற்படுத்தியதாக, 4 புகைப்பட ஊடகவியலாளர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரைக்கும், புகைப்பட ஊடகவியலாளர்கள் போரில் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்கு வைத்தியசாலைகளுக்குள் பிரவேசிப்பதில் எந்தவித பிரச்சினைகளும் இருந்திருக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியிருக்கும் சுதந்திர ஊடக இயக்கம், இந்த வாரம் வட போர் முனையில் இலங்கை இராணுவ கடுமையான இழப்புகளைச் சந்தித்த நிலையிலேயே இந்தத் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எல்லா அரசாங்கங்களும் போரில் ஏற்படுகின்ற இழப்புகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு இராணுவப் பேச்சாளர்களை நியமித்திருப்பதோடு, ஊடகங்களும் அவர்கள் வழங்குகின்ற உத்தியோகபர்வ தரவுகளை அறிக்கையிடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றன.

சில வெளிநாட்டு செய்திச் சேவை நிறுவனங்களும், கொழும்பிலிருந்து இயக்கப்படும் சில இணையத்தளங்களும் மாத்திரமே அரசாங்கத்தின் ஊடக அறிக்கைகளுடன், போர் முனையிலுள்ள இழப்புகளை சுதந்திரமாக அறிக்கையிடுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடர்பான மிகச் சரியான தகவல்களைச் சேகரிப்பதற்கும், காயப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தொடர்பிலான தகவல்களைச் சேகரிப்பதற்கும் விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் ஊடகவியலாளர்களை அனுமதிப்பதில்லை எனவும் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, கடந்த 15 வருடங்களாக போர் தொடர்பான செய்திகளைச் சேகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இரு தரப்பையும் சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நடைபெறும் இடங்களில் அது தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் காரணமாக தகவல்களை அறிந்து கொள்ளும் மக்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகவும் சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் சுதந்திர இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


No comments: