Thursday, 24 April 2008

முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக பெரோவிற்கு தகவல்கள் வழங்கக்கூடாதென உத்தரவு

இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானாக பெரேராவிற்கு இராணுவத் தகவல்கள் வழங்கப்படக்கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவப் படையின் முக்கிய படையணிகளில் பொறுப்புக்களை வகித்த மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி கேர்ணல் ஜயவி பெர்னாண்டோ ஆகியோருக்கும் இராணுவ முகாம்களுக்குச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.இந்த இரண்டு ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் இராணுவ முகாம்களுக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாம் என குறித்த முகாம் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான எவ்வித தகவல்களும் குறித்த முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தத் தடையுத்தரவை மீறும் இராணுவ உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பாக மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவை தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும் அவர் தற்போது அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்துள்ளதனால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீண்டும் நாடு திரும்பியவுடன் இந்த தடையுத்தரவு தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக லக்ஜய அமைப்பின் ஆலோசகரான அசங்க மஹகெதர தெரிவித்தார்.

யுத்தத்தினால் ஊனமுற்ற படைவீரர்களுக்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கும் உதவி வழங்கும் நோக்கில் மேஜர் ஜெனரல் ஜானக பெரோவும் கேர்ணல் ஜயவி பெர்னாண்டோவும் லக்ஜய அமைப்பை உருவாக்கினர்.இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் குறித்த இராணுவ உயர் அதிகாரிகளுக்கும் குறித்த அமைப்பிற்கும் பல்வேறு அழுத்தங்களை அரசாங்க ஊடகங்கள் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: