Friday, 18 April 2008

சுவிசிலிருந்து வெளிவரும் 'நிலவரம்" வார ஏட்டுக்காக சண். தவராஜா எழுதிய - 'அன்னை பூபதி - சாதனைப் பெண்மணி"

தமிழ் மக்களின் சரித்திரத்திலே முறத்தால் புலியை விரட்டியடித்த பெண் முதல் இன்று களத்திலே நின்று போராடிக் கொண்டிருக்கும் வீரமகளிர் வரை பல்வேறு வீரச்செயல்களைப் புரிந்து வரலாறு படைத்துள்ளார்கள். வரலாறு படைத்துக்கொண்டும் இருக்கின்றார்கள். ஆனாலும் அன்னை பூபதி 20 வருடங்களின் முன்னர் படைத்த வரலாறோ புதுமையானது: நிகரற்றது.

ஈழத் தமிழர்களின் அண்மைக்கால வரலாற்றில் இருவர் உண்ணா நோன்பு இருந்து தமது உயிர்களைக் கொடையாகத் தந்து ஈழப் போராட்டத்துக்கு வலுச் சேர்த்திருக்கின்றார்கள். அவர்களுள் ஒருவர் விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் திலீபன் அவர்கள். மற்றையவர் அன்னை பூபதி.

இருவரிடையேயும் ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருக்கின்றன. இருவரும் ஒரே இலட்சியத்துக்காக உண்ணா நோன்பிருந்து இறுதிவரை மனம் தளராது தமது உயிரை விட்டவர்கள். இருவரும் தமிழ் மக்களின் விடுதலையை தமது உயிரினும் மேலாக நேசித்தவர்கள். அந்த இலட்சியத்துக்காக இறுதிவரை உழைத்தவர்கள்.

இருவரிடையேயும் இருந்த பிரதானமான வேற்றுமை. திலீபன் அடிப்படையில் ஒரு போராளி. போராட்ட வழிமுறையைத் தேர்ந்தெடுத்த நாள் முதலாக தனது மனதில் வைராக்கியத்தை வளர்த்துக் கொண்டவன். அவன் பெற்ற பயிற்சிகள், அறிவுத் தேடல்கள் அவனது மனத்தை மேலும் உறுதியாக்கியிருந்தன. பிரம்மச்சாரியான அவன் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான தயார் நிலையுடன் எப்போதும் சயனைட் குப்பியைத் தனது கழுத்தில் அணிந்து கொண்டு உலாவியவன். சாவுக்கு அஞ்சாதவன்.

ஆனால், பூபதித் தாயோ விடுதலை வேட்கையுடையவராக இருந்த போதிலும், அடிப்படையில் அனைத்து ஆசாபாசங்களையும் கொண்ட குடும்பப் பெண்மணி. தனது கணவன் மீதான அன்பு பிள்ளைகள் மீதான பாசம் என அவரது மனதை வைராக்கியப்படுத்துவதிலிருந்து திசை திருப்பும் பல்வேறு அம்சங்கள் அவரின் வாழ்க்கையில் இருந்தன. ஆனாலும், அவரின் கொள்கைப் பிடிப்பு இத்தனை ஆசாபாசங்களையும் வென்று இலட்சியத்தை எட்டக்கூடிய திடமான உளவுரணை அவருக்கு வழங்கியிருந்தது. அந்தவகையில் அவர் ஒரு சாதனைப் பெண்மணியாகப் போற்றப்பட வேண்டியவரே.

தமிழ்த் தேசியம் என்ற கருத்துருவாக்கம் எப்போதுமே யாழ். குடாநாட்டின் புத்திஜீவிகள் குழாமினூடாகவே முன்னைய காலங்களில் வெளிப்படுத்தப்பட்டு வந்தது. அரசியலோ, கலை வெளிப்பாடுகளோ, விளையாட்டோ, பொருளாதாரமோ எதுவானாலும் அது யாழ். மையமாகவே இருந்து வந்துள்ளது. கல்வியின் பெறுமானத்தை உணர்ந்த யாழ். மக்களின் மனோபாவம், இந்துத்துவக் கொள்கை ஏற்படுத்திய இறுக்கமான பிணைப்பு, கூப்பிடு தூரத்தில் இருந்த தாய்த் தமிழகத்தின் செல்வாக்கு, சிறந்த கடலோடிகள் எனப் பெயர்பெற்ற கடலோடிகளுக்கு ஊடாக ஏற்பட்ட அயல்நாட்டுத் தொடர்புகள் என்பவை இந்நிலைமைக்குக் காரணமாய் இருக்க, நீண்ட காலமாக கண்டி இராச்சியத்தினதும் பொலநறுவை இராச்சியத்தினதும் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தமை, தொடர்ச்சியான நிலப்பரப்பில் நெருக்கமாக வாழாது பரந்தும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுடன் கலந்தும் வாழவேண்டியிருந்த நிர்ப்பந்தம், மதச் சமரச மனோபாவம், ஆகர்சமான தலைவர்கள் எவரும் உருவாகாமை ஆகிய காரணங்கள் மட்டக்களப்பு முன்னணிக்கு வருவதில் தடையாக இருந்து வந்தன. இங்கு உருவாகிய ஒரு சில தலைவர்களும் கூட குறுஞ் சிந்தனை கொண்டவர்களாகவும், கொள்கைப் பிடிப்பு அற்றவர்களாகவும், சமரசவாதிகளாகவும், இலகுவில் சோரம் போபவர்களாகவும் அமைந்தமை துரதிர்ஸ்டவசமானது. இன்று கூட இந்த வெற்றிடம் நிறைவேற்றப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

கற்றோர் குழாம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வராத இத்தகைய சூழ்நிலையில் அன்னை பூபதி போன்ற சமூகப் பிரக்ஞை கொண்ட சாதாரண பெண்மணிகள் முன்னணிக்கு வருவது இயல்பானதே. அந்த வகையில் அன்னையர் முன்னணி எனும் அமைப்பின் ஊடாக அன்னை பூபதி முன்னணிக்கு வந்தார்.

உலகிலே வாழுகின்ற மக்கட் தொகையில் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் மகளிரே. ஆனாலும் அவர்களுள் பெரும்பான்மையானோர் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்படும் நிலைமையே உலகின் பல நாடுகளிலும் இன்றும் உள்ளது. ஆனால், ஒரு தேசத்தில் நடைபெறும் ஆயுதப் போராட்டம் பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கையின் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கு ஓரளவு சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் வழங்குவதைக் காண முடியும். ஈழ தேசிய விடுதலைப் போராட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.

எமது போராட்டத்தைப் பொறுத்தவரை நாடாளுமன்ற, உள்ளுராட்சி மன்ற அரசியலில் பெண்களின் ஈடுபாடு ஆரம்பம் முதலாக இருந்து வந்த போதிலும் போரட்டம் ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்து சிறிலங்கா அரச பயங்கரவாதத்துக்கு தமிழ் இளையோர் பலியாகத் தொடங்கிய காலங்களில் உருவான அன்னையர் முன்னணி ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் இயக்கம் ஆகும். இந்த அமைப்பினூடாக சாதாரண குடும்பப் பெண்களாக வீடுகளுக்குள் சிறைப்பட்டிருந்த பல பெண்கள் வெளிச்சத்துக்கு வந்தார்கள். சமூகத்தின் தலைமைத்துவப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறான ஒருவராக உருவானவரே அன்னை பூபதி.

'விடுதலைப் புலிகளோடு மோதல்களை நிறுத்தி அவர்களோடு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என அகிம்சையை உலகுக்குப் போதித்த இந்தியாவிடம் கோரிக்கை வைத்து அன்னைபூபதி 1988 மார்ச் மாதம் 19 ஆம் திகதி காலையில் காலவரையற்ற உண்ணாநோன்பை ஆரம்பித்த போது, அவர் உயிர் நீப்பதற்கு இந்தியா அனுமதிக்காது என்ற எண்ணம் தமிழ் மக்கள் அநேகரிடம் இருந்தது.

ஆனால், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் நல்லூர் ஆலய முன்றலில் உண்ணா நோன்பு இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் மரணம் தொடர்பான நினைவுகள் பலர் மனதில் நிழலாடவே செய்தன. அன்னை பூபதி உண்ணாநோன்பை ஆரம்பிக்க முன்னதாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக உண்ணாநோன்பில் ஈடுபட்டிருந்த அன்னையர் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி டேவிட் அன்னம்மா அவர்களை இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும் இரவோடு இரவாகக் கடத்திச் சென்று, அச்சுறுத்தி, உண்ணாநோன்பைக் கைவிடுமாறு நிர்ப்பந்தித்த சம்பவமும் மக்களின் மனதை விட்டகலாததாக இருந்தது.

இத்தகைய பின்னணியில், தான் முன்வைத்துள்ள கோரிக்கையை இந்தியா அப்படியே நிறைவேற்றி விடும் என்ற நம்பிக்கை அன்னை பூபதியிடம் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், தனது செயற்பாட்டின் ஊடாக ஏற்படக்கூடிய மக்கள் எழுச்சி இந்தியாவைச் சிந்திக்கத் தூண்டும் என்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நிச்சயம் அவரிடம் இருந்திருக்கும். அதுவேயே நடந்தது. அவரின் உண்ணாநோன்பில் நாள் ஒன்று அதிகரிக்க அதிகரிக்க மட்டக்களப்பில் மட்டுமல்ல தமிழீழத்தின் அனைத்துப் பகுதிகளிலுமேயே உணர்ச்சியும் மக்கள் எழுச்சியும் அலைமோதத் தொடங்கியது. இந்திய வல்லாதிக்கத்திற்கும் ஒட்டுக்குழுக்களுக்கும் சவாலாக அமைந்த அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அதனைத் தடுத்து விட பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது

ஆனாலும் அன்னையின் திடசித்தமும், மக்களின் ஒட்டுமொத்த ஆதரவும் அதற்கு இடம் தரவில்லை. அன்னையின் ஆவி பிரிந்த போது இந்தியா அவமானப்பட்டு நின்றது. தமிழ்த் தேசியம் முன்னை விடப் பூரித்து நின்றது.

மனித குலத்தின் வரலாறு மரணங்கள் ஊடாகவும் தியாகங்கள் ஊடாகவுமே கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு தியாகங்களைப் புரிந்தோர் முன்னோடிகளாகக் கணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி உலக மாந்தர் அனைவருக்குமே அன்னை பூபதி ஒரு முன்னோடியாக விளங்குகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் மண் ஈழத் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு பாரிய விலை செலுத்தியிருக்கின்றது. பங்களிப்பை நல்கி இருக்கின்றது. தொடர்ந்து நல்கிய வண்ணம் இருக்கின்றது. பல தளபதிகளை, பொறுப்பாளர்களைத் தந்த இம்மண்ணில் தான் அன்னை பூபதியும் அவதரித்தார். சாதனையைப் படைத்தார்.

இதே மண்ணில் தான் மாபெரும் வரலாற்றுத் துரோகமும் இழைக்கப்பட்டது என்பது தாங்க முடியாத வேதனை. அன்னை பூபதி உயிரோடு இருந்திருந்தால் இந்தத் துரோகத்தை நிச்சயம் தாங்கியிருக்க மாட்டார். மன்னித்திருக்க மாட்டார்.

அவருடைய நினைவு நாளையே நாட்டுப்பற்றாளர் தினமாக பிரகடனம் செய்து அனுட்டித்து வருகின்றமை மிகவும் பொருத்தமானது. ஏனெனில், ஒரு பொதுமகனாக இருந்து கொண்டு விடுதலைப் போராட்டத்துக்குச் செய்யக்கூடிய உச்சகட்டப் பங்களிப்பை நல்குவது எவ்வாறு என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கியவர் அன்னை பூபதி. அகிம்சைத் தத்துவத்தின் ஒரு காட்டியாக அவர் விளங்குகின்றார்.

தமிழரிடையே அன்னை என்ற சொற்றொடர் நினைவுக்குக் கொண்டு வருவது இரண்டு நபர்களையே. ஒருவர் அன்னை திரேசா. மற்றவர் அன்னை பூபதி. முன்னையவர் துயரப்பட்ட மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து தன்னலமற்ற சேவை செய்தார். மற்றவர் மக்களைத் துயரத்தில் இருந்து நிரந்தரமாக அகற்றும் விடுதலையை பெற்றுத்தர தன்னையே அர்ப்பணித்தார்.

அன்னை திரேசா மக்களின் துயரச் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யவில்லை. மாறாக இருக்கும் நிலையை மேம்படுத்த நினைத்தார். அன்னை பூபதியோ மாறாக நிலைமையை மாற்றி புதிய சூழலைத் தோற்றுவிக்கப் பாடுபட்டார். அந்த வகையில் அன்னை திரேசாவை விட அன்னை பூபதி ஒரு படி உயர்ந்தே நிற்கின்றார் என்று கூறினால் மிகையாகாது.

No comments: