Thursday, 10 April 2008

தமிழகத்தில் தபால் நிலையங்களில் ஏர் டெக்கான் டிக்கெட் விற்பனை

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அங்கமான டெக்கான் நிறுவனம், தனது விமான டிக்கெட்டுக்களை தபால் அலுவலகங்களில் விற்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தபால் அலுவலகங்களில் டெக்கான் நிறுவன விமான டிக்கெட்டுக்களைப் பெறலாம்.

ஏற்கனவே கர்நாடகத்தில் இந்த முறையை டெக்கான் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது தமிழக தபால் நிலையங்களிலும் இதை அறிமுகப்படுத்துகிறது டெக்கான்.

இதுகுறித்து டெக்கான் நிறுவன செயல் தலைவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கூறுகையில், தமிழகத்தில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய 247 தபால் நிலையங்களில் டெக்கான் நிறுவன விமான டிக்கெட்டுக்களை நாளை முதல் விற்பனை செய்யவுள்ளோம்.

இதுதொடர்பாக தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக அளவில் வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், தமிழகத்தில் விமான பயணம் மேலும் எளிதாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், மன்னார்குடி, நெய்வேலி, உறையூர், திண்டுக்கல், குன்னூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட நகரங்களில் இந்த வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

இந்த சேவைக்கு கட்டணமாக ஒரு டிக்கெட்டுக்கு 5 சதவீத சர்வீஸ் சார்ஜை, வாடிக்கையாளர்களிடமிருந்து தபால் துறை பெற்றுக் கொள்ளும்.

இந்த சேவையை இன்னும் இரண்டு மாதங்களில் மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானுக்கும் விரிவுபடுத்தவுள்ளோம் என்றார்.

பேட்டியின்போது உடனிருந்த தமிழக தலைமை தபால் அதிகாரி இந்திரா கிருஷ்ணகுமார் கூறுகையில், தமிழகம் முழுதும் 93 தலைமை தபால் நிலையங்கள் உள்பட 247 தபால் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 46 தபால் நிலையங்களில் இந்த வசதியைப் பெற முடியும்.

அடுத்த கட்டமாக பிற தபால் நிலையங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு தபால் நிலையத்திலும் இரு ஊழியர்கள் விமான டிக்கெட் தொடர்பான பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்றார் இந்திரா கிருஷ்ணகுமார்.

No comments: