Tuesday, 22 April 2008

மகேஸ்வரன் கொலையில் ஈ.பி.டி.பிக்கு தொடர்பு அது குறித்த தகவல்களை சி.ஐ.டியினர் மறைப்பு! --சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் கொலைச் சம்பவம் தொடர்பில் ஈ.பி.டி.பி. இயக்கத்திற்கு உள்ள தொடர்புபற்றி வெளிவந்துள்ள தகவல்களைக் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்திடம் மறைக்கின்றனர் என மகேஸ்வரனின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரட்ண முன்னிலையில் நடைபெற்றது. அதன்போதே மகேஸ்வரனின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மேற்கண்டவாறு கூறினார்.சட்டத்தரணியின் இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரட்ண, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த இன்ஸ்பெக்டர் ஆர்.எம்.ஏ. ராஜபக்ஷவிடம் வினவினார். அப்போது பதிலளித்த இன்ஸ்பெக்டர் ராஜபக்ஷ, இக் கொலையில் ஈ.பி.டி.பியினருக்குத் தொடர்பு இருப்பதாகப் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல சம்பவதினம் பி.பி.சி. வானொலிக்கு வழங்கிய பேட்டி குறித்து முழு அளவில் விசாரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பான அறிக்கையொன்றை ஏலவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார் எனவும் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுமென்றும் இன்ஸ்பெக்டர் ராஜபக்ஷ மன்றில் தெரிவித்தார்.மகேஸ்வரன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களெனக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களான கொலின் வலன்ரினோ, பிரான்ஸிஸ் சுதர்ஷன், பெருமாள் பிரதீபன், எஸ். பிரியதர்ஷினி ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.அவர்களை மே மாதம் ஐந்தாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

No comments: