Tuesday, 1 April 2008

பெங்களூர்-ஒசூர் எல்லையில் தமிழக பஸ்கள் சிறைபிடிப்பு

கர்நாடக எல்லையில் 2 தமிழக பஸ்கள் அடுத்தடுத்து சிறைபிடிக்கப்பட்டன. இதனால் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

நேற்று ஓசூரில் தேன்கனிக்கோட்டைக்கு தமிழக அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஆனைக்கல் வழியாக சென்ற அந்த பஸ் கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடி பகுதிக்கு வந்தது.

அப்போது அங்கு கன்னட அமைப்பினர் திரண்டு நின்று பஸ்ஸை வழி மறித்தனர். பின்னர் தமிழக பஸ்சை சிறை பிடித்தனர்.

அப்போது, தமிழ்நாட்டுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் பஸ்சின் கண்ணாடியில் சேறு பூசினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அதே போல அந்த வழியாக வந்த தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பஸ்ஸையும் அந்த அமைப்பினர் சிறை பிடித்தனர். அந்த பஸ் பெங்களூரில் இருந்து தளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

கன்னட அமைப்பினரின் சிறை பிடிப்பால் பயணிகள் பெரும் அச்சத்துக்கும் பீதிக்கும் உள்ளாயினர்.

இது குறித்து கர்நாடக மாநிலம் ஆனைக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதே போல தமிழகத்தின் தளி பகுதி போலீசாருக்கும் தகவல் தரப்பட்டது.

இதையடுத்து இரு மாநில போலீசாரும் அங்கு விரைந்தனர். தமிழக போலீசார் தங்கள் எல்லையில் நின்றபடி கர்நாடக போலீசாருடன் பேசினர்.

இதையடுத்து பஸ்களை சிறைபிடித்த கன்னட அமைப்பினரிடம் கர்நாடக போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்த பஸ்களை விட முன் வரவில்லை. இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டியத்தனர். அதன் பின்னரே பஸ்கள் விடுவிக்கப்பட்டன.

இந்த சம்பவத்தையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்பி தேன்மொழி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஓசூர் பகுதியில் முகாமிட்டு எல்லையோர பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக எல்லையான ஜூஜூவாடி, அந்திவாடி, கக்கனூர், கும்மளாபுரம் ஆகிய சோதனை சாவடிகளில் கூடுதலாக தமிழ்நாடு சிறப்பு படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு பணிக்காக மாவட்டத்தில் விடுமுறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மீண்டும் உடனடியாக பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் தமிழகத்தில் இருந்து இரவில் வந்த பல பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டு காலையில் தான் இயக்கப்பட்டன. இதனால் தமிழக பஸ்கள் தாமதமாக பெங்களூருக்குள் வந்து கொண்டுள்ளன.

No comments: