பெங்களூர்: கன்னட அமைப்புகள் நடத்தியுள்ள வெறித் தாக்குதலைக் கண்டித்து பெங்களூரில் அமைதிப் பேரணி நடத்த பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் தீர்மானித்துள்ளது.
பெங்களூரில் நேற்று தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் தாக்குதல் நடத்திய வன்முறைக் கும்பல், பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தையும் தாக்கி சேதப்படுத்தியது.
தமிழ் சினிமா ரத்து:
தியேட்டர்கள் அருகே இருந்த சில கடைகளும் தாக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறைத் தாக்குதலால், பெங்களூர் நகரில் தமிழ்ப் படங்கள் திரையிடுவது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல தமிழக எல்லையில் உள்ள கர்நாடகப் பகுதியில் திரண்ட கன்னட வெறியர்கள், அங்கு தமிழகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரு பேருந்துகளை சிறை பிடித்தனர்.
இந்த சம்பவங்களுக்கு பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வன்முறையாளர்கள் மீது போலீஸார் ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. தமிழ்ச் சங்கத்தை சேதப்படுத்தும் நோக்கோடு அந்தக் கும்பல் வந்துள்ளது.
பெங்களூரில் வன்முறைக் கும்பல் நடத்தி வரும் செயல்களைக் கண்டிக்காமல் போலீஸார் செயலிழந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்திலும் கன்னட மொழி பேசுவோர் வசிக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் தாக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதை கன்னடர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
தமிழர்களுக்கு எதிரான இந்த வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.
பெங்களூர் வன்முறையை எதிர்த்துப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் சண்முக சுந்தரம்.
மைசூரிலும் போராட்டம்:
இதேபோல மைசூரில் உள்ள கே.ஆர்.சர்க்கிளில், கர்நாடக ரக்ஷண வேதிகேயை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக தலைவர்கள் கண்டனம்:
அதே போல பெங்களூர் வன்முறை குறித்து மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெங்களூர் வன்முறைக்கு பாஜகவினர்தான் காரணம் என ஜி.கே.வாசனும், மொழி வெறியர்கள்தான் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு வருவதாக இல.கணேசனும் கூறியுள்ளனர்.
Tuesday, 1 April 2008
பேரணி: பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் முடிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment