கிழக்கு மாகாண சபைத் தேர்தலை அடிப்படையாகக் கொண்ட அரசியல் ஆதாயத்துக்காக வடக்கில் யுத்தத்தை முன்னெடுத்துள்ள அரசாங்கம் கிளாலி, முகமாலை படை நடவடிக்கையில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ளதாக குற்றச் சாட்டு சுமத்தியிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இந்தப் படை நடவடிக்கையின்போது படைத்தரப்பின் இழப்புகள் பற்றிய விபரங்களை அரசாங்கம் முற்றுமுழுதாக மூடிமறைப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கம் உண்மையை நாட்டு மக்களுக்கு மறைக்க முற்பட்டபோதிலும் இழப்புகள் தொடர்பான அனைத்து புள்ளிவிபரங்களும் முழு உலகுக்கும் கிடைத்துவிட்டதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி வருவதையடுத்தே இவ்வாறு அரசியல் நோக்கத்துடனான படை நடவடிக்கையை அரசு கிளாலி, முகமாலையில் முடுக்கிவிட்டு மூக்குடைபட்டுள்ளதாகக் கூறிய திஸ்ஸ அத்தநாயக்கா தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;
"கிளாலியிலும் முகமாலையிலும் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கையானது முற்றுமுழுதான அரசியல் நோக்கங்கொண்டதாகவே அமைந்தது. இராணுவ நிகழ்ச்சி நிரலில் இந்த படை நடவடிக்கை இடம்பெறவில்லை. அன்று வரவு- செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பில் தோல்வியை தவிர்த்துக்கொள்வதற்காக வடக்கில் எவ்வாறு படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதோ அதே அடிப்படையில்தான் மீண்டும் இப்படை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு வருவதையடுத்து கிழக்கு மக்களின் மன நிலையை மாற்றுவதற்காகவே அரசாங்கம் இந்த அரசியல் யுத்த நாடகத்தை அரங்கேற்ற முற்பட்டுள்ளது.
உண்மையிலேயே இந்தப் படை நடவடிக்கையில் அரசாங்கம் பாரியதொரு பின்னடைவைக் கண்டுள்ளது. இது பகிரங்க இரகசியமாகும். ஆனால், அரசாங்கம் இந்தப் பின்னடைவை முற்றுமுழுதாக மூடிமறைக்க முற்படுகிறது.
இழப்புகள் தொடர்பில் அரசு தெரிவிக்கும் புள்ளி விபரம் உண்மைக்குப் புறம்பானவையாகும். அன்று அநுராதபுரத்தில் விமான நிலையத் தாக்குதலின்போது அரசு பல தடவைகள் முரண்பட்ட புள்ளிவிபரங்களைக் கூறியதை இங்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.
அதேபோன்ற உண்மைகளை மூடி மறைக்கும் நாடகத்தையே அரசாங்கம் மேடையேற்ற முயற்சிக்கின்றது.
முகமாலை படை நடவடிக்கையில் படைத்தரப்புக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டிருப்பதை சர்வதேச ஊடகங்கள் ஒரு சில மணி நேரத்துக்குள் வெளியிட்டன.
ஆனால், அரசாங்கம் 24 மணிநேரம் கடந்த பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி உண்மைகளை மூடிமறைத்து தோல்வியை மறைக்க முயற்சித்தது. நாட்டு மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் மைத்திரிபால சிறிசேன கிழக்குத் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளுடன் இரகசியப் பேச்சு நடத்தியதாகக் கூறியிருக்கின்றார்.
பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தேர்தல் காலங்களிலும் சுதந்திரக் கட்சி புலிகளைத் தொடர்புபடுத்தி ஐக்கிய தேசியக் கட்சிக்கு சேறு பூசி அரசியல் இலாபம் தேட முற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் வெற்றிக்காக புலிகளுடன் மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் புலிகளுடன் உடன்படிக்கை செய்ததையும் பணம் கைமாறப்பட்டதையும் முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீரவும் ஷ்ரீபதி சூரியாராச்சியும் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் புலிகளைக் கொண்டு தடுத்து நிறுத்தியதன் காரணமாகவே ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் புலிகளின் ஒத்துழைப்பை பெறமுடியாத நிலை உருவானதையடுத்து, அரசாங்கம் பிள்ளையான் குழுவுடன் கைகோர்த்துச் செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையிலும் கிழக்குத் தேர்தலில் அரச தரப்புக்கு தோல்வியே கிட்டும் என இரகசிய பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்தே, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தவறான பிரசாரங்களை அரச தரப்பு முன்னெடுத்து வருகிறது.
ஆயுதமுனையில் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு தேர்தலில் வெற்றிபெற அரசதரப்பு முயற்சிக்கின்றது. தேர்தலை நீதியானதாகவும் நேர்மையானதாகவும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் நாம் கேட்டிருக்கின்றோம்.
அதேசமயம், ஆயுதபாணிகளை நிராயுதபாணிகளாக்கி தேர்தல் அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடப்பதற்கேற்ற சூழலை ஏற்படுத்துமாறு பொலிஸ் மா அதிபரையும் வலியுறுத்தியுள்ளோம்.
No comments:
Post a Comment