Saturday, 19 April 2008

புலிகளின் பெயரால் ஊடகவியலாளரிடம் கப்பம் கோரப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடக அமைப்பின் பொருளாளர் கே.றுஸாங்கனிடம் விடுதலைப் புலிகளின் பெயரால் கப்பம் கோரப்பட்டுள்ளது.

இது குறித்து தெஹிவளை காவல்துறையினரிடம் கடந்த 16ஆம் திகதி அவர் முறைப்பாடு செய்திருந்தார். எனினும் இந்த முறைப்பாடு தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுதந்திர ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. இது மிகவும் அபாயகரமான நிலை என கூறியுள்ள சுதந்திர ஊடக அமைப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் அமைப்பின் ஈழவேந்தன் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஒருவர் கடந்த 13ஆம் திகதி பிற்பகல் 4 மணியளிலில் றுஷhங்கனின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்ததுடன் மோட்டார் சைக்கிள் அல்லது அதற்கு ஈடான ஆயிரத்து 500 அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வழங்குமாறு அந்த நபர் கேட்டுள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் இந்த பணம் வழங்கப்பட வேண்டும் எனவும் அந்த நபர் எச்சரித்துள்ளார். 077-4343791 என்ற கையடக்க தொலைபேசியில் இருந்தே றுஸாங்கனின் தொலைபேசிக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தொகை பணத்தை வழங்க கூடிய நிலைமையில் தான் இல்லை என றுஸாங்கன் கூறியுள்ளார்.

இதனையடுத்து தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் இந்த ஊடகவியலாளரை கடத்திச் செல்ல போவதாக அச்சுறுத்தியுள்ளார். இது தொடர்பில் கடந்த 16ஆம் திகதி காவல்துறையில் முறைப்பாடு செய்த போதிலும் காவல்துறையினர் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என சுதந்திர ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஊடகவியலாளரின் தொலைபேசிக்கு அழைப்பு எடுக்கப்பட்டதாக கூறப்படும் தொலைபேசியின் பாவனையாளர் வெளியில் இருந்து செல்லும் அழைப்புகளுக்கு பதிலளித்து வருவதாகவும் இந்த நிலையில் காவல்துறையினர் தொலைபேசி உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொள்ளலாமல் இருப்பது
ஆச்சரியம் அளிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீதிமன்ற விடுமுறை என்பதால் சட்டரீயான நடவடிக்கைகளை எடுக்க முடியாதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் இவ்வாறான அனுகுமுறையை அனுமதிக்க முடியாது எனவும் சுதந்திர ஊடக அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது சட்டவிரோத கொலைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் றுஸாங்கனின் பாதுகாப்புக்கு காவல்துறையினர் பொறுப்பு கூறவேண்டும் என தெரிவித்துள்ள சுதந்திர ஊடக அமைப்பு குற்றவாளிகளை சட்டத்திற்கு முன் கொண்டு வர காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: