`விருப்பப்பட்ட ஆண்களுடன், பெண்கள் வாழ்வதில் தப்பில்லை' என்கிறார்
கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திய மாடல் அழகி சிமி அளித்த பரபரப்பு பேட்டியில், `ஒரு கணவருடன் தான் வாழவேண்டும் என்று சட்டம் சொல்லவில்லை என்றும், விருப்பப்பட்ட ஆண்களுடன் வாழ்வதில் தவறில்லை' என்றும் தெரிவித்தார்.
கொள்ளை வழக்கில் கைது
சென்னை அண்ணாநகர் `எப்' பிளாக்கில் வசிப்பவர் சுகுமார் ஜார்ஜ். காண்டிராக்டரான இவர், இந்திய மாடல் அழகி சிமியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். தன்னுடைய வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக சுகுமார் ஜார்ஜ், சிமி மீது சென்னை அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிமியை கைது செய்தனர். சிமி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். சிமி ஆந்திர மாநிலமë செகந்திராபாத்தில் வசிக்கிறார். தற்போது ஜாமீன் நிபந்தனை அடிப்படையில் சென்னையில் தங்கியிருந்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் தினமும் காலையில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகிறார். ஜாமீன் நிபந்தனையை தளர்த்துவதற்காக சென்னை ஐகோர்ட்டிலும் அவர் வழக்கு போட முயற்சித்து வருகிறார்.
ஜார்ஜ் குற்றச்சாட்டு
இந்த நிலையில், சிமியின் கணவர் சுகுமார் ஜார்ஜ் அளித்த பேட்டியில் சிமி பற்றி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். சிமி ஏற்கனவே 4 பேரை மணந்து ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னிடம் ரூ.1 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த சிமி யாரையும் திருமணம் செய்து ஏமாற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் விரிவாக பேட்டி தருவதாக கூறியிருந்தார்.
நேற்று காலையில் அண்ணாநகர் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த அவர் நிருபர்களுக்கு பரபரப்பாக பேட்டி கொடுத்தார். கேட்ட கேள்விகளுக்கு மனம் திறந்து வெளிப்படையாக பதில் அளித்தார். அவர் சொன்ன தகவல் அதிரடியாக இருந்தது. அவர் அளித்த பேட்டி வருமாறு:-
ஜார்ஜ் என்னுடைய கணவர். அவரை விட்டு பிரிந்து வாழ்கிறேன். அவருடன் வாழ பிடிக்காமல் கோர்ட்டில் விவாகரத்து வழக்கு போட்டுள்ளேன். அவர் கொடுத்த `டார்ச்சர்' தாங்காமல் நான் கொடுத்த புகாரின் பேரில் 4 வழக்குகள் அவர் மீது ஐதராபாத் போலீசார் போட்டுள்ளனர். ஜார்ஜ் தற்போது முன்ஜாமீனில் உள்ளார். நான் போட்ட வழக்குகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜார்ஜ், என்மீது சென்னை அண்ணாநகர் போலீசில் பொய் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் என்னை கைது செய்தனர். நான் ஜாமீனில் உள்ளேன்.
அவதூறு தகவல்
ஜார்ஜ், என்மீது போலீசில் கொடுத்த புகாருக்கு மாறாக எனது தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துள்ளார். ஆங்கில பத்திரிகை ஒன்று என்னைப்பற்றி இழிவாக செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக ஜார்ஜ் மீது சட்டப்படி அவதூறு வழக்கு தொடருவேன்.
கேள்வி:- நீங்கள் புடவையை மாற்றுவது போல, அடிக்கடி கணவர்களை மாற்றுவதாகவும், ஏற்கனவே 4 பேரை மணந்து ஏமாற்றியுள்ளதாகவும் சொல்லப்படுகிறதே?
பதில்:- நான் 3 பேரை தான் மணந்துள்ளேன். எனது முதல் கணவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். எனது 2-வது கணவரை விவாகரத்து செய்துவிட்டேன். 3-வது ஜார்ஜை திருமணம் செய்தேன். அவர் செய்த கொடுமைகளை தாங்காமல் பிரிந்து வாழ்கிறேன்.
விருப்பப்படி வாழலாம்
ஆண்கள் மட்டும் அவர்களுடைய விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும்போது, பெண்களுக்கும் அந்த உரிமை உள்ளது. பெண்களும் விருப்பப்பட்டவர்களுடன் வாழ்வதில் தவறில்லை.
கேள்வி:- நமக்கென்று ஒரு கலாசாரம் உள்ளதே?
பதில்:- சட்டம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமானதுதான். பெண்கள் ஒரு கணவரோடு தான் வாழ வேண்டும் என்று சட்டத்தில் இல்லை. விருப்பப்பட்ட கணவர்களை திருமணம் செய்து வாழ்வதில் என்ன தவறு இருக்கிறது.
சஞ்சய் மாலிக்குடன் உள்ள உறவு
கேள்வி:- சர்வதேச புரோக்கர் சஞ்சய் மாலிக்கையும் நீங்கள் திருமணம் செய்துகொண்டதாக ஜார்ஜ் கூறியுள்ளாரே?
பதில்:- இது தவறான தகவல். சஞ்சய் மாலிக் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் தான் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். அவரது தவறான நடவடிக்கையால், நான் அவரை விட்டு விலகிவிட்டேன்.
கேள்வி:- உங்களது ஆபாச படங்கள் இணையதளங்கள் மூலம் வெளிநாடுகளில் விற்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதே?
பதில்:- ஜார்ஜ் தான் அந்த அவதூரை கிளப்பியுள்ளார். நான் ஜார்ஜை திருமணம் செய்ய விரும்பியபோது, என்னுடைய புகைப்படத்தை அவரிடம் கொடுத்தேன். அந்த படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்கள் மூலம் அனுப்பியிருப்பார் என்று கருதுகிறேன்.
குடும்ப பின்னணி
கேள்வி:- உங்கள் குடும்ப பின்னணி பற்றி சொல்கிறீர்களா?
பதில்:- என்னுடைய குடும்ப பின்னணியை பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும், நான் விபசாரம் செய்ததாகவும், தவறான வாழ்க்கை வாழ்வதாகவும் சிலர் புரளியை கிளப்பி உள்ளதால் எனது குடும்பத்தை பற்றி சொல்கிறேன். எனது குடும்பத்தை ஒரு ராணுவ குடும்பம் என்றே சொல்லலாம். எனது தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஆவார். எனது சகோதரரும் ராணுவ அதிகாரியாக உள்ளார். எனது சகோதரி ஒரு ராணுவ அதிகாரியை தான் மணந்துள்ளார். என்னுடைய முதல் கணவரும் ராணுவ அதிகாரி தான். இப்படி என்னுடைய குடும்பமே இந்திய ராணுவத்தோடு பின்னி பிணைந்துள்ளது. எனது குடும்பமே மக்களுக்காக சேவை செய்யும் குடும்பமாகும்.
ஆசிரியை வேலை
நான் பி.ஏ., பி.எட். படித்துள்ளேன். ஆசிரியை வேலை பார்க்க ஆசைப்பட்டேன். நான் அழகாக இருந்ததால் மாடலிங் தொழில் என்னை இழுத்துக்கொண்டது. எனக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளை படிக்க வைத்துள்ளேன். ஜார்ஜ் இணையதளம் மூலம் தான் எனக்கு அறிமுகமானார். அவரை நான் காதலிக்கவில்லை. இணையதளத்தில் நான் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து அவர்தான் என்னை மணக்க விரும்புவதாக கூறினார். அதன்படி அவரை மணந்துகொண்டு, அவரோடு 1 1/2 ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளேன். அவர் ஏற்கனவே முதல் மனைவியை காதலித்து மணந்து விரட்டி விட்டவர். இதனால், அவரிடம் எச்சரிக்கையாக இருக்க விரும்பினேன்.
இதனால்தான் என் பெயருக்கு பணம் போடும்படி கேட்டேன். இதில் என்ன தவறு இருக்கிறது. இதை நான் மிரட்டுவதாக ஜார்ஜ் சொல்கிறார். அவர்தான் என்னை கொலை செய்துவிடுவதாக போனில் மிரட்டி வருகிறார். அவரைவிட்டு பிரிந்தாலும், அவருடன் வாழ்ந்த வாழ்க்கைக்கு அவருடைய சொத்தில் எனக்கு பங்கு கொடுத்தே ஆகவேண்டும். கோர்ட்டு மூலம் அதை பெற்றே தீருவேன். ஜார்ஜை எளிதில் விட்டுவிட மாட்டேன். தற்போது என்னை விபசார வழக்கில் மாட்டிவிட அவர் துடிக்கிறார்.
சந்திப்பேன்
தமிழகத்தில் எனக்கும் தெரிந்த நண்பர்கள் உள்ளனர். எனக்கும் நியாயம் கிடைக்கும். பத்திரிகைகள் பலம் வாய்ந்தவை. ஒரு பெண்ணான எனக்கு பத்திரிகைகள் உதவி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜார்ஜ் எனக்கு கொடுக்கும் தொல்லைகளை சவாலாக சந்தித்து சமாளிப்பேன்.
இவ்வாறு இந்திய அழகி சிமி தெரிவித்தார்.
Friday, 18 April 2008
`ஒரு கணவருடன் தான் வாழவேண்டும் என்ற சட்டம் இல்லை' கொள்ளை வழக்கில் கைதான இந்திய மாடல் அழகி சிமி பரபரப்பு பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment