Tuesday, 22 April 2008

இராக் அதிபர் சதாம் செய்த இரு பெரிய தவறுகள்!

கடைசிவரை அமெரிக்காவின் அடாவடித்தனத்துக்கும், மிரட்டலுக்கும் அடிபணியாத இரும்பு மனிதராகத் திகழ்ந்த இராக் அதிபர் சதாம் ஹுசைன் மீது அமெரிக்காவுக்கு கோபம்வர அவர் செய்த இரு பெரும் தவறுகளே காரணம் என இராக்கிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ரஞ்சித்சிங் கல்ஹா தெரிவித்துள்ளார். அவர் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள, “தி அல்டிமேட் பிரைஸ்’ என்ற புத்தகத்தில் இந்தத் தகவலை அவர் பகிரங்கப்படுத்தியுள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அமெரிக்க டாலரின் புழக்கத்தைக் கடுமையாக எதிர்த்து வந்த சதாம் ஹுசேன், 2000-ம் ஆண்டு தங்களது நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் பெட்ரோலியத்துக்கு அமெரிக்க டாலரை வாங்க மறுத்தார். அத்துடன் உடனடியாக 10 பில்லியன் வைப்பு நிதியாக இருந்த அமெரிக்க டாலரை அப்படியே யூரோவுக்கு மாற்றி மேலும் தனது எதிர்ப்பை கடுமையாகத் தெரிவித்தார். இதனால் சதாம் ஹுசேன் மீது அமெரிக்காவின் ஆத்திரப்பார்வை திரும்பியது. இராக் இதுபோன்ற நடவடிக்கையில் இறங்கியதும் அவ்வழியை ஈரானும் பின்பற்றியது. இதைத் தொடர்ந்து பெரும்பாலான பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளும் இராக்கின் அமெரிக்க டாலர் புறக்கணிப்பு வழியை பின்பற்றத் தொடங்கின. இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துடன் சதாமின் மீதான கோபத்தையும் அதிகரித்தது. சதாமின் இதுபோன்ற நடவடிக்கையை தங்களுக்கு அவர் விடுக்கும் நேரடி சவாலாவும் அமெரிக்கா ஒருகட்டத்தில் எண்ணத் தொடங்கியது. இதன்பின்னரும் சதாமை வாலாட்டவிட்டால் அது தனக்கு பெரும் துன்பமாகவே முடியும் என்றும் அமெரிக்கா கருதியது. அன்று முதல் சதாமுக்கு எதிராக அமெரிக்கா தருணம் பார்த்து காய் நகர்த்த ஆரம்பித்தது. இருப்பினும் இதற்கெல்லாம் சதாம் ஹுசேன் அஞ்சவில்லை. தனது அமெரிக்க டாலர் நிராகரிப்பை அவர் தொடர்ந்து செய்து வந்தார்.

இரண்டாவது தவறு: இதுபோன்ற நிலையில் அமெரிக்காவை மேலும் கோபப்படுத்தும் விதமாக சதாம் ஹுசேன் மற்றொரு செயலில் ஈடுபட்டார். தங்களது நாட்டில் அமெரிக்காவை சாராத எண்ணெய் கம்பெனிகளுக்குதான் ஒப்பந்தத்துக்கு அனுமதி என்பதுதான் அது. சதாமின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை ஒருகணம் தூக்கிவாறிப்போட்டதுடன் அவர் மீதான கோபத்தை கடுமையாக்கியது.

எனினும் இதனால் சதாமுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க அமெரிக்காவால் முடியவில்லை. அவரை அனுசரித்து போகவேண்டிய கட்டாய நிலைக்கே அமெரிக்கா ஆளாகியிருந்தது. காரணம், தங்களது பெரும்பகுதி எரிபொருள் தேவைக்கு அமெரிக்கா இராக்கை சார்ந்திருந்ததே ஆகும்.

இருப்பினும் சதாம் ஹுசேனை பழி தீர்க்கவேண்டும் என்பதில் மட்டும் அமெரிக்கா குறியாக இருந்தது. அதை வெற்றிகரமாக நிறைவேற்றியும் விட்டது என ரஞ்சித்சிங் கல்ஹா, தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

ttpian said...

Uncle Bush is a third rated coward!
He is a specialist in LEG PULLING!